இதற்குப் பெயர் தான் இந்து இராஜ்யம்

குஜராத்தில் விஜய் ரூபானி முதல்வராகக் கொண்ட பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தி லிருந்து வந்துள்ள செய்தி – பா.ஜ.க.வினர் எந்த அளவு ‘அறிவுக் கொழுந்துகளாக’ இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கிறது.

படோப் மாவட்டத்திலுள்ள ஒரு கோயிலில் உள்ளூர் பா.ஜ.க. ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. பாராட்டப் பட்டவர்கள் யார் என்று கேட்டால், அதிர்ச்சி வந்துவிடும். ‘பில்லி சூன்யம்’ வைக்கும் மந்திர வாதிகள்தான் பாராட்டப் பட்டவர்கள். 100க்கும் மேற்பட்ட ‘மந்திரவாதிகளை’ கவுரவித்த இந்த நிகழ்வில் மாநில அமைச் சர்களும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான புடேந்திர சிங் சுதாசமா, ஆத்மராம் பர்மர் போன்றவர்கள் பங்கேற்று பில்லி சூன்யக்காரர்களின் ‘தேச சேவையை’ மனம் உருகி பாராட் டினார்களாம். இந்த நிகழ்ச்சிகள் சமூக வலைதளங் களில் வேகமாக பரவி எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுதாசமா அளித்த பதில் தான் மிகவும் குறிப்பிடத் தக்கது. “பில்லி சூன்யம் – புனித மானவை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த புனிதசக்திகளை நிகழ்த்தும் மந்திரவாதிகளை பாராட்டுவதில் என்ன தவறு?” என்று கேட்டிருக்கிறார்.

“அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறதே; இப்படி மூடநம்பிக்கையை வைத்து பிழைப்பு நடத்தும் தண்டிக்கப்பட வேண்டிய நபர்களை பாராட்டுவது சட்டத் துக்கு எதிரானது அல்லவா?” என்று கேட்டால், என்ன பதில் கூறுவார்கள் தெரியுமா? மந்திர வாதிகளை வைத்து பில்லி சூன்யத்தை ஏவிவிட்டு விடுவோம், எச்சரிக்கை” என்று மிரட்டு வார்கள்.

பா.ஜ.க.வினர் இவ்வளவு  முட்டாள்தனமாகப் பேச மாட்டார்கள். ‘இப்படி எல்லாம் கேலி பேசக் கூடாது’ என்று சமாதானம் பேச எவராவது வந்தால் அவர்களுக்கு புரிய வைப்பதற்கு ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறோம்.

தமிழ்நாட்டில் கால்நடைத் துறையைச் சார்ந்த அதிகாரிகள்  ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அரசின் இன விருத்தித் திட்டத் துக்காக 50 பசு, எருது, கன்று குட்டிகளை வாங்கி, 5 டிரக்கு களில் ஏற்றி தமிழ்நாட்டில் செட்டி நாடு பகுதியில் உள்ள மாவட்ட அரசு கால்நடைப் பண்ணைக்கு கொண்டு வந்துள்ளனர். பார்மர் மாவட்டத் தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, ‘பசு பாதுகாப்புப் படை’ வழி மறித்து, தமிழக அரசு அதிகாரிகளைத் தாக்கியுள்ளது. இராஜஸ்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இந்த மாடுகளை வாங்குவதற்காக பெற்றிருந்த அனுமதி கடிதத்தை அதிகாரிகள் காட்டியுள்ளனர். ‘பசு மாட்டு அறிவாளிகள்’, “இல்லை; இல்லை; நீ மாட்டை வெட்டப் போகிறாய்?” என்று கூறியிருக்கிறார்கள். ‘அய்யா பசுவின் சீடர்களே! தமிழ்நாடு அரசு முத்திரையோடு வாகனங்கள் வருவதைப் பாருங்கள். இது அரசு வாகனம். இனவிருத்திக்குத்தான் மாடுகளை வாங்கியிருக்கிறோம்” என்று அதிகாரிகள் எடுத்துக் கூறியும், “பசு மந்தை ரசிகர்கள்” அதையெல்லாம் நம்ப மாட் டோம்’ என்று தாக்கத் தொடங்கி விட்டார்கள்.  அதிகாரிகள், ஓட்டுனரைக் கொடூரமாக தாக்கியதோடு, ஒரு டிரக்குக்கு தீ வைக்க முயன்றுள்ளனர். தமிழக கால்நடைத் துறை உதவியாளர் களாக பணியாற்றும் இருவரும், கால்நடைத் துறை அதிகாரியும் மிக மோசமாக காயமடைந் துள்ளனர். நள்ளிரவு 11.30 மணிக்கு 3 மணி நேரம் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

இராஜஸ்தான் காவல்துறையும் இதற்கு துணை போயிருக்கிறது. 3 மணி நேரம் கழித்து தான் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். இதற்காக காவல்துறை மீதும் ராஜஸ்தான் அரசு ஏன் கடமையை செய்யத் தவறினீர்கள் என்று விளக்கம் கேட்டுள்ளதாம். இவையெல்லாம் வெறும் கண்துடைப்புகள். மாட்டுக்காக ‘மனித வதை’யையும் செய்யலாம் என்பதுதான் ‘இந்து’ ஆட்சி நடக்கும் பகுதிகளில் கொள்கை முழக்கம் போலும்!

இந்தக் கும்பலிடம் அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மை என்றெல்லாம் பேசினால் இவர்கள் புத்தியில் உறைக்கவா போகிறது?

– கோடங்குடி மாரிமுத்து

பெரியார் முழக்கம் 15062017 இதழ்

You may also like...