காதல்
கற்றுக் கொள் – பறவை, விலங்குகளிடம்…
காதல்
அருகைப் போல் முடிவற்றத்
தாவரம்.
காதல்
உயிர்களின் நியதி.
அணுக்கமும்..இணக்கமும்
புரிதலும்..உறுதியும் சமைந்த உணர்வு.
பறவைகளையும், விலங்கையும்போல்
காதலைக் கொண்டாடக்
கற்றுக் கொள்ள வேண்டும்
மனித இனம்.
ஏனெனில்,
பறவை தத்தம் குஞ்சுகள்
இணை தேடுகையில் ..
தலை அறுத்து ..
தண்டவாள ஓரம் எறிவதில்லை.!
மிருகங்கள் தன்
குட்டியின் காதலுக்கெதிராய்..
கும்பலாய் சென்று
ஊர் எரிப்பதில்லை.
படுகொலைகள் புரிந்து ..
ஜாதீயத் திமிரோடு சவங்களை
வீசிவிட்டு வருவதில்லை.!
ஜாதி மதங்களை ஒழிக்கும் உபாயங்களில்,
காதலின் பணி உன்னதமானது.
காதல் புரிவோரே!
பூக்களும்
மினுமினுப்புத் தாள் சுற்றிய
பரிசுப் பொருள்தாண்டி..
நேசத்தையும், பரிவையும்
கொள்கையும், முற்போக்கையும்
பகிருங்கள்.!
ரத்தவெறி கொண்டு அலைகிற
ஜாதி, மதவெறி சக்திகளை
வெட்டிச் சாய்த்திடுங்கள்.
காதல் ஆயுதத்தால்!
-பெ.கிருட்டிணமூர்த்தி, ஈரோடு
பெரியார் முழக்கம் 16022017 இதழ்