பசுவை தெய்வமாக்குவதை எதிர்த்தவர் ஆர்.எஸ்.எஸ். குரு சாவர்க்கார்
பசு மாட்டைக் காப்பதற்கு மோடி ஆட்சி சட்டங்களைத் திணிக்கிறது. பசுப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் சமூக விரோத சக்திகள் பல மாநிலங்களில் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு பா.ஜ.க. ஆட்சியின் ஆதரவுடன் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘இந்துத்துவா’ எனும் கொள்கைகளை உருவாக்கி தந்தவரும் – சங்பரிவாரின் குருவாக மதிக்கப்படுபவருமான சாவர்க்கார் – பசுவை தெய்வமாக வணங்குவதை எதிர்த்தார். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 9, 2017),
‘பசுவும் சாவர்க்காரும்’ என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் எழுதப்பட்டுள்ள கருத்து:
“1930இல் ‘பாலா’ என்ற பிரபல மராத்திய இதழில் அதன் ஆசிரியர், ‘உண்மையான இந்து என்பவன் யார்? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு தனது பதிலையும் எழுதியிருந்தார். “பசுவை தனது தாயாகக் கருதுகிறவர் தான் உண்மையான இந்து” என்பதே அவர் தந்த விளக்கம். உடனே சாவர்க்கார் – இந்த கருத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். சாவர்க்கார், பிரிட்டிஷ் அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டபோது தப்பிக்க முயன்றவர். பிறகு ஆயுள் கைதியாக அந்தமான் சிறையில் அடைக்கப்பட் டிருந்தார். “பசு யாருக்காவது தாயாக இருக்க வேண்டும் என்றால் அது எருதுகளுக்குத்தான் தாயாக இருக்க முடியும். ஒரு போதும் இந்துக்களுக்கு தாயாக இருக்க முடியாது. பசு மாட்டின் கால்களைப் பிடித்துக் கொண்டுதான் இந்துத்துவா நீடித்திருக்க முடியுமானால், ஒரு சிறிய அளவிலான எதிர்ப்பு – நெருக்கடியைக்கூட எதிர்கொள்ள முடியாமல் ‘இந்துத்துவா’ உடைந்து சிதறிப்போய் விடும்.” (“If the cow is a mother to anybody at all, it is the bullock. Not the Hindus. Hindutva, if it has to sustain itself on a cow’s legs, will come crashing down at the slightest sign of a crisis”)
‘இந்துத்துவா’ என்ற நூலை இந்து தேசியவாதிகளுக்காக எழுதியவர் சாவர்க்கார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் பசுவை தெய்வமாக வணங்குவதை எதிர்த்தவர் என்பது பலருக்கும் தெரியாது. பசு மிகவும் பயன்படக் கூடிய விலங்கு. ஆனால் தெய்வமாக வணங்க வேண்டும் என்பது அறிவுக்குரியதல்ல. காரணம், மனிதர்கள் வணங்கக் கூடிய தகுதிக்குரியோர் மனிதர்களைவிட உயர்வானவர்களாக மனிதசக்திக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டுமே தவிர, போயும் போயும் கேவலமான மனிதர்களைவிட கீழான விலங்குகளாக இருக்க முடியாது. இத்தகைய பழமையான நம்பிக்கைகளை கைவிட வேண்டும். இந்த நம்பிக்கைகள் அறிவைக் கொலை செய்வதாகும். பொருளாதாரம், அறிவியல் கண்ணோட்டத்தில் பசுக்களை வளர்ப்பதில் நியாயம் இருக்கிறது. அமெரிக்காவில்கூட இந்த கருத்து வலியுறுத்தப்படுகிறது. பசுவை தேவைக்காக பராமரிக்கலாம். ஆனால் தெய்வமாக வணங்கக் கூடாது என்று சாவர்க்கார் கூறினார்.
குறிப்பாக பசு மாட்டின் மூத்திரத்தை குடிக்கிறார்கள். இன்னும் சில பகுதிகளில் பசு மாட்டு சாணத்தைக்கூட பழங்கால இந்தியாவில் சாப்பிட்டுள்ளார்கள். உண்மையில் அந்த காலத்தில் ‘பாவங்களை’ச் செய்தவர்களுக்கு பாவங்களைப் போக்கும் தண்டனையாக இவைகள் பயன்படுத்தப்பட்டன என்று விளக்கினார் சாவர்க்கார். இதற்காக பழமைவாத இந்துக்கள், சாவர்க்கார் ‘தெய்வ நிந்தனை’ செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள். இதற்கு சாவர்க்கார் பதிலடி தந்தார். என்னுடைய தெய்வ நிந்தனையை விட உங்களின் தெய்வ நிந்தனை மிக மிக மோசமானது. நீங்கள் 33 கோடி தேவர்களையும், பசு மாட்டின் பெருத்த வயிற்றுக்குள் போட்டு திணிக் கிறீர்கள் இதைவிட தெய்வ நிந்தனை உண்டா?” என்றார் சாவர்க்கார். சரத்பவார் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சாவர்க்காரின் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டியிருக் கிறார்.
இஸ்லாமியர் இராணுவத்தின் முன் இந்துக்கள் தோற்றதற்கு காரணம் பசுவை தெய்வமாக கருதியதுதான் என்று கூறும் சாவர்க்கார், பசு மாடுகளை முன்னிறுத்தி இஸ்லாமி யர் போரிட்டபோது பசுவுக்கு பயந்து இந்துக்கள் எதிர்த்துப் போராடாமல் தோற்றனர் என்கிறார்.
“இந்துக்கள் இஸ்லாமியர்களிடம் பல நேரங்களில் தோல்வியடைந் ததற்குக் காரணம் கோயில்கள் மீதும் பசுக்கள் மீதும் பிராமணர்கள் மீதும் இவர்களுக்கு ஏதேனும் ஆபத்துகள் வந்துவிடக் கூடாது என்ற அச்சம் தான் என்று கூறினார் சாவர்க்கார். இந்துக்கள் அல்லாதவர்களிடமிருந்து இந்து ராஷ்டிரத்துக்கு கடும் நெருக்கடி வரும்போது இந்துக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலை வந்தால் பசு மாட்டை சாப்பிடுவதுதான் ஒரே வழி என்றால், அதற்குத் தயாராக வேண்டும் என்றும் சாவர்க்கார் கூறினார்” – என்று குறிப்பிட்டுள்ளது ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரை.
பெரியார் முழக்கம் 15062017 இதழ்