‘வரலாற்றில் வரம்பைக் கடந்த தலைவர்’

விஞ்ஞானி – கல்வியாளர் – இலக்கியவாதி என்று பன்முகத் திறமையோடு வாழ்ந்த முனைவர் வி.சி. குழந்தைசாமி, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி 87ஆம் அகவையில் முடிவெய் தினார். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இந்திரா தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக திறம்பட பணியாற்றியவர். சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்ற அவர் கோவை மாவட்ட கிராமம் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு பெரியாரிஸ்ட். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த இன உணர்வாளர். பெரியார் மறைந்த 1973ஆம் ஆண்டில் சிந்தனையாளர் பேரவை, சென்னை மத்திய நூலகக் கட்டிடத்தில் நடத்திய பெரியார் இரங்கல் கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரையை இங்கு வெளியிடுகிறோம். இந்த உரை நிகழ்த்தியக் காலத்தில் அவர் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர்.

“தென்னகத்தின் ஒரு

தலைவர்; ஒரு நூற்றாண்டு,

திராவிடத்தின் வளர்ச்சிக்கே,

தன்னைத் தந்த

தன்னிகரில்லாத் தமிழர்;

இந்த மண்ணின்

சரிதையிலோர் புது மனிதர்;

இருண்ட வானில்

மின்னலெனத் துலங்கியவர்;

வளர்ந்து யாங்கும்

விரிகின்ற சுடரான

வேந்தர்; சூழும்

தன்னலத்தின் கோட்டை

யெலாம் ஒருங்குவீழச்

சாய்ந்திட்ட பெரியார்”

அவர்களின், உடல் சாய்ந்தது, உருவம் மறைந்தது, ஓய்வு தெரியாத உயிர், நிரந்தர ஓய்வு கொண்டது.

“மலை சாய்ந்தது, தன்மான

உணர்வு அனைத்தும் வடிவெடுத்த

சிலைசாய்ந்தது, திராவிடத்தின்

மக்களெல்லாம் தெளிவுகண்ட

நிலை சாய்ந்தது. நீதியெலாம்

தானாகி நின்ற வேந்தன்

தலை சாய்ந்தது.”

தமிழர்தம் சுமைதாங்கி தன் சுமையை இறக்கிக் கொண்டது. தமிழினம் செய்வதறியாது திகைத்து நின்றது. ஒருகணம் கதறியழுது கண்ணீர் விட்டது மறுகணம்; எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்று சொன்னார் அண்ணா; அண்ணன் இறந்தநாள் அதையும் தாங்கினோம். அய்யா மறைந்த நாள் இதையும் தாங்குவோம் என்று ஆறுதல் தேடியது தமிழினம். நாடெங்கும் நகரெங்கும் கூடி நன்றி செலுத்தியது; ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டது.

பெரியார் இல்லாத தமிழகம் நாம் நினைத்தறியாத ஒன்று. இன்றும் நினைத்துப் பார்ப்பதற்கு இதயம் இடந் தராத ஒன்று.

“வெண்தாடி வேந்தெங்கே,

வேழத்தின் நடைஎங்கே? சீர்திருத்தப்

பண்பாடி ஒளிசேர்த்த

பகுத்தறிவின் சுடர் எங்கே? பழமை கோடி

மண்கூடச் சாய்ந்திட்ட

மாவீரன் குரலெங்கே? மானிடத்தின்

புண்தேடி, அதிலுள்ள

புரைதேடி யாற்றியவன் போனதெங்கே?

எங்கே?” என்று இதயம்கேட்கிறது.

இயற்கையின் விதிகட்கு விலக்கில்லை; இறப்பும் பிறப்பும் புதிதில்லை. மறைந்ததை எண்ணி வருந்தாதே; வாய்விட்டதற்கும் புலம்பாதே என்று வாழ்நாள் முழுவதும் அறிவுரை கூறிய தந்தை அவர்கள் தாம் கூறியதைத் தமது அன்புத் துணைவியார் நாகம்மை அவர்கள் மறைந்த காலத்தில் நடந்தும் காட்டிய பெருந்தகை ஆவார். ஆனால், அவர்தம் மறைவு கண்டு, கலங்காது, கண்ணீர் விடாது தாங்கும் வலிமை நமக்கில்லை. அவர் தந்த அறிவுரை, அவர் ஊட்டிய பகுத்தறிவு, எவையும் நமக்கு அவர் மறைவை, அமைதியோடு தாங்கும் ஆற்றலைத் தரவில்லை. அதற்காக நாம் வெட்கப்படவும் இல்லை.

மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் பெரியார் என்றால், மறுநாள் திரும்பிவிடுவார். அவரது சுற்றுப் பயணம் தொடரும் என்றுதான் எப்பொழுதும் நினைத் தோம். அவரும் மனிதர். வயது முதிர்ந்தவர். மரணமும் அவரை நெருங்கக்கூடும் என்ற நினைவே நமக்கு வந்த தில்லை. அந்த அளவிற்கு நம் மனதில் ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டோம். பகுத்தறிவோடு அதை அணுகும் பண்பு நம்மிடம் அல்லது நம்மில் பலரிடம் இல்லை. அதற்காகவும் நாம் வெட்கப்படத் தேவையில்லை. அவர் இன்னும் நீண்டநாள் வாழ்வார் என்ற நமது நம்பிக்கை அவர் வாழ வேண்டும் என்ற ஆசையின் அடிப்படையில் வந்தது. தமிழர்கட்கு இதைவிடப் பெரிய ஆசை என்ன இருக்கப் போகிறது? இதைவிட நல்ல ஆசை என்ன இருக்க முடியும்?

கண்கள் வற்றும் வரைக் கண்ணீரை வடித்தோம். வாய் விட்டும் கதறினோம். அழுத தமிழ் மக்கள் அனைவரின் கண்ணீரையும் ஒரு நூற்றாண்டு காலமாக துடைத்த பெருந்தகைக்கு நாம் இன்று அர்ப்பணிக்கத்தக்கது கண்ணீர் ஒன்றுதான்.

பெரியாரவர்களைப் பற்றி நாம் என்ன பேசுவது? இன்றையச் சமுதாயத்தின் ஒவ்வொரு சிந்தனை அலையிலும், மூச்சின் உயிர்ப்பிலும், அதன் விழிப்பின் வேகத்திலும் அவர் இருக்கிறார்.

“நீரெல்லாம் அவர்

வியர்வை; தமிழகத்தின்

நிலமெல்லாம் அவர்

நடந்த தாரை; வாழும்

ஊரெல்லாம் அவர்

மூச்சின் காற்று; நம்மோர்

உயர்வெல்லாம் அவர்

தந்த பிச்சை”

கொடுத்தவர் மறைந்தார்; வாங்கியவர்கள் இருக் கின்றோம். இனி நாம் எதைப் பேசுவது? எதை விடுவது?

மனித வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து சிந்தனை யாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். சீர்திருத்தவாதிகள் வாழ்ந்திருக்கிறார்கள். பகுத்தறிவு இயக்கம் கூட மிகவும் பழமையான ஒன்றுதான். இந்த இயக்கங்கள் அனைத்திற்கும் ஒரு புதிய சகாப்தம் படைத்தவர் பெரியார். ஒரு புது உருவம் கொடுத்தவர் பெரியார்.

சிந்தனை தெளிவு, பிரச்சினைகள் எதுவானாலும் அறிவின் துணைகொண்டு அலசி ஆராயும் பண்பு ஆகியவற்றுக்கு வரலாற்றின் தொடக்கப் பகுதிக்குச் சின்னமாக இருப்பவர் சாக்ரடீஸ். நம் காலத்திற்கு, உலக அளவிலே சின்னமாக விளங்கியவர் பெட்ரண்ட்ரஸ்ஸல். இதற்கிடையிலே இரண்டாயிரத்து அந்நூறு ஆண்டு வரலாறு சிந்தனையாளர் இயக்கத்துக்கு உண்டு. இவ்வரலாற்றின் வரம்புகட்குப் பலவகையிலும் அப்பால் நின்றவர் பெரியார்.

சீர்திருத்தவாதிகள் மறைந்த பின்பு, அவர் இதைப் பேசினார், “அதைப் போதித்தார்” என்ற அளவிலும் அவர் சொன்னது, எழுதியது பற்றிய ஆராய்ச்சி அளவிலும் தான் விளக்கங்கள் இருக்குமே தவிர, இப்படியிருந்த சமுதாயத்தை, “இப்படி மாற்றினார்” என்ற வாசகங்கள் இருக்காது.

சாக்ரடீசிற்குப் பிந்திய ஏதன்ஸ் இன்னின்ன வகையில் அவரது போதனைகளால் மாற்றம் பெற்றது என்று யாரும் கூறுவதில்லை. பெட்ரண்ட் ரஸ்ஸலின் அறிவுரைகளால் பிரிட்டன் அல்லது மற்ற நாட்டினர்களின் செயலில், சிந்தனையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டன என்று யாரும் பேசுவதில்லை. பெரியாரைப் பற்றி பேசும் பொழுதும், எழுதும் பொழுதும் அவர் சீர்திருத்தம் பேசினார் என்பது மட்டுமல்ல; சீர்திருந்தி வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல; அவரால் அவர் காலத்திலேயே, ஒரு இனம் வாழ்வு பெற்றது; ஒரு சமுதாயம் சீர்திருந்தியது என்பதை அவரை அறிந்தோர் எதிர்த்தோர் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.

தன்னலத்தால் வஞ்சத்தால் நைந்து, வேத சாத்திரத் துக்கு அடிமையுற்று, சமய  நோய்ப்பட்டு, இன்னலுற்ற தமிழினத்திற்கு ஒளியும் வாழ்வும் ஈயவந்தார்; ஈந்தார்.

இதை மற்றவர்கள் யாரும் சொல்லவில்லை. அதன் பயனையனுபவிக்கும் நாமே அதற்கு சாட்சி கூறுகிறோம். தனிமனிதர் ஒருவர், தனியாக நின்று ஒரு இயக்கமாக வளர்ந்தார். இயக்கமாக வாழ்ந்தார்.

“வணங்காது நிமிர்ந்த

தலை; வாரி யன்ன

வற்றாத கருத்துக்கள்

மலரும் உள்ளம்;

உணங்காத தாளாண்மை;

எதற்கும் அஞ்சா

உரம்கொண்ட பெருந் தலைவன்

உழைப்பின் சின்னம்.”

அவரது பயணம் மற்றொரு உதாரணம் காட்ட முடியாத அளவுக்கு நீண்டது. நீண்டது மட்டுமல்ல; அந்த அளவிற்கு நிறைந்த நிகழ்ச்சிகளைக் கொண்டது. இந்த நீண்ட பயணப் பாதையில், புயல் போன்ற வாழ்வில், போராட்டமே அன்றாடக் கடமை ஆகிவிட்ட அவரது பெரும் பணியில், பலரை ஆதரித்தார். பலரை எதிர்த்தார். ஆதரித்தவர்களில் சிலரைப் பின்னர் எதிர்த்தார். எதிர்த்தவர்களை ஆதரித்தார். இயக்கங்களை உருவாக்கினார். பல இயக்கங்களை ஆதரித்தார். சில கட்சிகளின் தோளில் ஏறி நின்றார். பல கட்சிகளைத் தன் தோளில் தாங்கினார். இந்த நீண்டகால நிகழ்ச்சிகளை ஏராளமாகக் கொண்டதான வரலாற்றினை ‘முழுமையாகக்’ காண்பவர்கள், காணும் ஆற்றல் பெற்றவர்கள், அவர் சென்ற பாதையின் ‘முறையையும்’ காண்பர். அதை விடுத்து, அல்லது அது இயலாமல் சிற்சில நிகழ்ச்சிகளை பேச்சுகளை மட்டும் காண்போர் ஆங்காங்கு முரண் காண முற்படுவர்.

வெண்தாடி வேந்தர், பொன்கோட்டுப் பனிவரைப் போல உயர்ந்தவர். அதன் மேல் நடந்து செல்பவருக்குக் கல் தெரியும்; முள்தெரியும்; காடு தெரியும்; ஆனால் அதன் முழுமையும் காணும் முறையும் தெரிந்தவர்க்கு, அதன் அகலமும் உயரமும் தெரியும். அழகும் தெரியும்; சிகரம் தெரியும்; அதன் சிறப்பும் தெரியும். தமிழகத்தின் வரலாற்றில், பெரியார் சகாப்தம் மிகப் பெரிய ஒன்று. எதிர்கால வரலாற்றாசிரியர்கள், சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள், மொழியறிஞர்கள், அரசியல் பேராசிரியர்கள் ஆகியோர் அனைவரும், அவரது வாழ்வு கொள்கை, அவரது தொண்டு, அதன் பயன் ஆகியவற்றை ஆராய்வர்; எழுதுவர்.

“யானை கண்ட குருடர்” என்பது உலகம் முழுவதும் பரவியுள்ளக் கதை. அதேபோல யானை கண்ட குருடர்கள் இருக்கிறார்களே, சிரஞ்சீவிகள். இவர்கள் எங்கும் இருப்பார்கள்; என்றும் இருப்பார்கள்; எல்லாத் துறையிலும் இருப்பார்கள்.

அய்யா அவர்களின் பரிமாணம் மலையிலும் மாணப் பெரிது. அதன் முழுமை கண்டு எழுதுவதும், பேசுவதும் எதிர்காலத்தில் பலருக்கு எளிதான காரியமல்ல. அதற்குத் துணை புரியும் வகையிலே அவரது எழுத்தும் பேச்சும் தொகுக்கப்பட வேண்டும். அவரது பேச்சு, எழுத்து முழுவiயும் படித்து, ஒரு முறைக்குப் பன்முறை சிந்தித்து, அவற்றை பொருள் அடிப்படையில் கால அடிப்படையில், அவை எழுதப்பட்ட, பேசப்பட்ட, பின்னணி விவரங் களுடன், முழுமையாக மனதிற்கொண்டு வேண்டிய இடத்தில் விளக்கங்களுடன் வெளியிடும் ஆற்றலை கொண்டோர், ஒரு சில ஆண்டுகட்கு அதை முழுநேரப் பணியாகக் கொண்டு செய்ய வேண்டும்.

அய்யா அவர்கள் சீரிய ஊன்றுகோலாகப் பின்பற்றி வந்த பழக்கங்களில் அடிப்படையானது எளிமை, சிக்கனம்.

அவருடைய சிக்கனம், இன்று தமிழ் மக்களிடையே அதைப்பற்றி ஏராளமான குட்டிக் கதைகள் பரவும் அளவிற்கு அவரிடத்திலே உறுதி பெற்றிருந்தது. நுஉடிnடிஅல ளை வாந உடிசநேச ளவடிநே டிக எசைவரந என்பது பழமொழி. சிக்கனமும் எளிமையும் இல்லாது, சற்று ஆடம்பர வாழ்க்கை விரும்பிய எவராலும் எந்த சமுதாயத்திலும் இதுபோன்ற மகத்தான பணியைச் செய்திருக்க முடியாது. செய்ததற்கு வரலாற்றில் சான்றில்லை. அந்த அளவிற்கு அவரது சிக்கனம் பாராட்டப்பட வேண்டிய கொள்கை எனினும், எளிமை போற்றப்படவேண்டிய கூறுபாடு என்றாலும், அவரது  தொகுப்புகளை வெளியிடுவதில் இந்தச் சிக்கன, எளிமையுணர்ச்சிகளை மறந்து, ஒரு கலைக் களஞ்சியப் பணிபோல இதைச் செய்ய வேண்டும்.

“நமது எதிர்காலப்

பயணத்திற்குத்

தடம் சொன்ன தலைவர்;

தமிழருக்குக் கண்ணும் காதும்

தன்னறிவும், மனவலியும்

தந்தவர்;

மனிதன் நீ, வையத்தின்

மன்னன்; தாழ்வு

மனப்பான்மையில்லாது

மண்ணில் நிற்கும்

துணிவு பெறு என்று

சொன்னவர்; துணிவு பெற வைத்தவர்.”

“இல்லையென நீள்கரமும்

இறுமாப்போடு

இந்தாவென்றெழு கரமும்,

கடவுளென்னும்

வல்லவனின் படைப்பல்ல;

மனிதன் குற்றம்;

மாற்றுவது முறை தேவை”

யென்று சொன்னவர்

அதற்கான வழியும் தந்தவர்.

அவருக்கு நீங்காத கடன்பட்ட தமிழினம் இன்று நன்றி சொல்கிறது. நாளை நமது காவியங்கள், கலைகள், அவரது பெருமை பேசிப் பெருமை தேடிக் கொள்ளும்.

தமிழினத்தின் ஒப்பற்ற வரலாற்றில் ஒரு சகாப்தப் பொன்னேடு முடிந்தது! அவர் புகழ் காவிய நாயகனாக இனிப் பொலிவுறுவார். புகழ் பெறுவார். அவர் வளர்த்த தென்னாடும், தமிழினமும் தீந்தமிழ் உள்ளவரை அவர் நமது மண்ணோடும், வளியோடும், வானோடும் ஒன்றாகி வாழ்வார், என்பது வரலாறு படைக்கப் போகும் உண்மை யாகும்.                                 நன்றி : 14.2.1974 ‘உண்மை’

பெரியார் முழக்கம் 12012017 இதழ்

You may also like...