தி.வி.க. – தி.க. – த.பெ.தி.க. தோழர்கள் பங்கேற்பு: மயிலையில் கழகம் நடத்திய ‘நீட்’ எதிர்ப்பு பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட சார்பில்  17.05.2017 மாலை 6:30 மணியளவில்  “நீட் தேர்வு விளக்க கூட்டம்” மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்றது. கழகத்தின் மயிலாப்பூர் பகுதி  தோழர் மாரிமுத்து  தலைமையில் பிரவீன், சஞ்சய், விஜயகாந்த், சரண், சிவா ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடினார்.

அதையடுத்து, மருத்துவர் எழிலன், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளான மே 17 அன்று பாலச்சந்திரன் படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு பேசிய, மருத்துவர் எழிலன் மருத்துவ நுழைவுத் தேர்வின் மூலம் அரசு சுகாதார நிலையங்களை மூட நினைக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகத்தின் சார்பாக முகிலன் பங்கேற்று மத்திய அரசிற்கு அடிபணிந்து கிடக்கும் மாநில அரசை கண்டித்து உரையாற்றினார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வழக்கறிஞர் துரை அருண் சட்டத் துறையில் திணிக்க முற்பட்ட அதே தேர்வு முறைகளை இப்போது மத்திய அரசு மருத்துவ துறையில் நீட் தேர்வு முறையில் திணித்து கொண்டிருக்கிறது என்று விளக்கினார். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக பேசிய குமரன் வர்ணாஸ்ரம அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தவிர்க்கப்பட்ட கல்வி உரிமை குறித்து உரையாற்றினார்.

நிறைவுரையாக பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாட்டில் ஆரம்ப காலம் முதல் சமீபத்திய காலம் வரை நடைமுறைபடுத்தப்பட்ட கல்விக் கொள்கைகள் பற்றியும் மத்திய அரசு தமிழர்களுக்கு மறுக்கப்படும் கல்வி உரிமை பற்றியும் சிறப்பான உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மண்டேலா ஜான் தொகுத்து வழங்கினார். இறுதியாக, சுகுமார் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 25052017 இதழ்

You may also like...