ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்கள்: சரியானது தானா?

தென்தமிழகத்தில் அதிக எண்ணிக்கை யில் இருக்கும் ஆதிக்க ஜாதியினரான முக்குலத்தோரின் விளையாட்டுதான் ஜல்லிக் கட்டு, இது ஒட்டுமொத்த தமிழர்களின் விளையாட்டுகள் அல்ல என்று பெரியாரிய வாதிகள் சொன்னபோது, தமிழ்த் தேசிய வாதிகள் அதை மறுத்தார்கள். ஆனால், உண்மை என்னவென்பதை ஜல்லிக்கட்டு நடத்துபவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.

09.01.2017 அன்று நியூஸ் 18 தொலைக் காட்சியில் நடந்த விவாதத்தில் அம்பேத்கரிய லாளர் அன்பு செல்வம் பேசும்போது –

“1996இல் தென் தமிழகத்தில் ஜாதிக் கலவரங்கள் அதிகமாக நடைபெற்றபோது, அதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மோகன் கமிஷன்,  ‘ஜாதிக் கலவரங்களுக்கான காரணிகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று’ எனக் கூறியது என்றும், ஜல்லிக்கட்டுக்குப் பின்புலத் தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் அதிகார அரசியல் இருக்கிறது என்றும், இது தொடர்ச்சியாக தலித் மக்களின் மீது வன் கொடுமைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக் கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

அதற்குப் பதிலளித்த ஜல்லிக்கட்டு மீட்புக் குழுவின் உறுப்பினர் இராஜேஷ், 1996இல் ஜாதிக் கலவரம் ஏற்படுவதற்கு ஜல்லிக்கட்டு முக்கிய காரணமாக இருந்தது என்றும், 2004, 2005 ஆம் ஆண்டு வரை இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் (ஜாதியினர்) விளையாடும் விளையாட்டாகத்தான் இருந்தது என்றும், 2006க்குப் பின் உச்சநீதிமன்றக் கட்டுப் பாடுகள், தடை வந்தபின்பு இந்த நிலைமை மாறிவிட்டது என்றும், இன்று அனைத்து ஜாதியினரும் விளையாடுகிறார்கள் என்றும் கூறினார்.

இராஜேஷின் பேச்சிலிருந்து தமிழ்த் தேசியவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டி யது – ‘ஜல்லிக்கட்டு எப்போதும் ஒட்டு மொத்த தமிழர்களின் விளையாட்டாக இருந்தது இல்லை; 2000 ஆண்டுகளாக – அதாவது 2006 வரை – முக்குலத்தோரின் சாதி விளையாட்டாகத்தான் இது இருந்துள்ளது. நீதித் துறையும், காவல் துறையும் இதில் தலையிட ஆரம்பித்த பின்பு தான், அனைத்துச் ஜாதியினரும் உள்ளே வர ஆரம்பிக்கிறார்கள்.’

இது எப்படி என்றால், குடித்துவிட்டு சண்டை போடுபவர்கள், போலீஸ் வந்ததும், கட்டிப் பிடித்துக் கொண்டு, எங்களுக்குள் பிரச்சினை ஒண்ணும் இல்லையே என்பார்களே… அதுபோலத்தான்.

கட்டுப்பாடு, தடை வந்ததும் எல்லா சாதிகளின் ஆதரவைத் தேடும் முக்குலத்தோர், நாளை தடையும், கட்டுப்பாடுகளும் நீங்கிய பின்பு, அதே ஆதிக்க அரசியலைத் தொடர்வார்கள். அதைத்தான் தமிழகத்தின் ஒவ்வொரு ஜாதிப் பிரச்சினையிலும் நாம் பார்த்து வருகிறோம்.

***

ஜல்லிக்கட்டு மூலமாகத்தான் நாட்டு மாடுகள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழ்த் தேசியவாதிகளின் மற்றுமொரு வாதம். இது உண்மை என்றால், ஜல்லிக்கட்டு நடைபெறாத 27 மாவட்டங்களில் நாட்டு மாடுகளே இல்லாமல் இருந்திருக்க வேண்டும் அல்லவா?

1970களின் தொடக்கத்தில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நாட்டு மாடுகள் இருந்தன. விவசாயிகள் தங்களது விவசாயத் தேவைகளுக்காக நாட்டு மாடுகளை வளர்த்தார்கள். பசு மாடு என்றால் பால் – உணவு, சாணம் – உரம் என்ற பயன்பாடு இருந்தது. காளை மாடு என்றால் உழவு, மாட்டு வண்டி என்ற பயன்பாடு இருந்தது. வெண்மைப் புரட்சி வந்தபோது, விவசாயிகள் ஜெர்சி பசுக்களுக்கு மாறினார்கள். டிராக்டர்கள் வந்தபின்பு காளை மாடுகளை விற்றுவிட்டார்கள்.

பாலுக்கு விலை இல்லை, தீவனத்துக்கு அதிகம் செலவாகிறது எனும் நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இன்று ஜெர்சி மாடுகளை வைத்திருப்பவர்கள் எல்லாம் அவற்றை விற்றுவிடுவார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. ஜல்லிக்கட்டு மூலமாக நாட்டு மாடுகளைக் காக்கப்படுகிறது என்பதே, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட பின்பு உருவாக்கப்பட்ட கோஷம்தான். இதை யாராவது ஆதாரத் துடன் மறுக்க முடியுமா?

ஜல்லிக்கட்டு மாடுகளையும், விவசாயத்தை யும் தொடர்புபடுத்திப் பேசுபவர்களிடம் மறுபடியும் சொல்கிறோம், காளை மாடு களை விவசாயிகள் எப்போதோ கைகழுவி விட்டார்கள்.

வேண்டுமானால், இப்படி பரிசோதிக்க லாம். பத்து ஜோடி காளை மாடுகளை வெவ்வேறு கிராமத்து எளிய விவசாயி களுக்குப் பரிசளியுங்கள். ஓர் ஆண்டு கழித்துப் போய் பாருங்கள். அவர்கள் அவற்றை விற்றிருப்பார்கள். காரணம், காளை மாடுகள் அவர்களுக்கு இன்னொரு சுமை. தீவனம், பராமரிப்புக்கு ஆகும் செலவில் நூற்றில் ஒரு பங்குகூட திரும்ப வருவது கிடையாது.

இன்றைக்கு ஜல்லிக்கட்டு காளை மாடுகளை வளர்ப்பவர்கள் யாரென்று பார்த்தால், பொருளாதாரத் தன்னிறைவு அடைந்தவர்களாகவோ, அல்லது காலம் காலமாக ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப் பவர்களாகவோ தான் இருக்கிறார்கள். எத்தனை எளிய விவசாயிகள், எத்தனை தலித் மக்கள் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்க் கிறார்கள் என்று கணக்கெடுத்தால் உங்கள் வாதத்தின் பலவீனம் புரியும்.

***

ஜல்லிக்கட்டு மூலமாகத்தான் பொலி காளைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்று சிலர் கூறுகிறார்கள். அப்படி என்றால், ஜல்லிக் கட்டு நடைபெறாத 27 மாவட்டங்களில் என்ன செய்திருப்பார்கள்? சினை பிடிப்பதற்காக திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு பசுக்களை ஓட்டி வந்தார்களா? அப்படி எல்லாம் ஏதும் நடக்க வில்லை. அந்தந்த ஊர்களில் இருந்த காளை மாடுகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

உழவு, பாரம் இழுத்தல் ஆகியவற்றுக்கு டிராக்டர்கள் வந்தபின்பு, காளைமாடுகளை விற்றுவிட்டு, சினை ஊசி போடத் தொடங்கி விட்டார்கள். பயனில்லாத காளை மாடுகளை வளர்ப்பதைவிட, சினை ஊசி போடுவதற்கு ஆகும் செலவு மிக மிகக் குறைவு என்பதை அறிந்த யதார்த்தவாதிகள்தான் நமது விவசாயிகள்.

ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாடுகள்தான் வீரியமான கன்றுகளைப் பெற பயன்படுத்தப் படும் என்றும் சொல்கின்றனர்…

அறிவியல்ரீதியாக இதில் எந்த உண்மையும் இல்லை. ஆரோக்கியமான ஆணும், ஆரோக்கியமான பெண்ணும் இணைவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பதுதான் மருத்துவ அறிவியல்.

பலமான ஆண்தான் நல்ல குழந்தையைத் தரமுடியும் என்றால், அர்னால்ட், முகமது அலி, மைக் டைசன், போன்ற வீரர்கள் போன்றவர்கள்தான் உலகின் எல்லா குழந்தை களுக்கும் தந்தையாக இருந்திருக்க வேண்டும்.

வீரியமான கன்றுகளுக்காக கவலைப்படு பவர்கள், ஜல்லிக்கட்டு மாடுகளிடம் படக் கூடாத இடத்தில் உதை வாங்கி, ஆண்மையை இழக்கும் மாடுபிடி வீரர்களைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை?

***

இன்று ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் தங்கள் போராட்டங்களில் தவறாமல் சொல்லும் வாதம் – ‘நாட்டு மாடுகளைக் காப்பாற்ற வேண்டும்’.

பெரியாரியவாதிகள் தாங்கள் நம்பும் செய்திகளை வெறும் பிரச்சாரத்துடன் நிறுத்தி விடுவதில்லை. சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று இருந்த காலத்திலேயே ஊர் ஊராக சுய மரியாதைத் திருமணங்கள் நடத்தினார்கள்; தங்களது மாநாடுகளில் தாலியைக் கழற்றி வீசினார்கள்; எந்தக் கூட்டம், விழா நடந் தாலும் மாட்டுக்கறி உணவு பரிமாறினார்கள்.

நாட்டு மாடுகளைக் காக்கப் போராடும் அரசியல் கட்சிகள், இயக்கங்களே… ஊருக்கு ஒரு நாட்டு மாட்டை வாங்கி, தங்களது அலுவலக வாசலில் கட்டி, வளர்க்கலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. நாட்டு மாடுகளைக் காக்க நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆகும் செலவில் பாதியை இதற்கு செலவழித்தால் போதும்..! ஆளாளுக்கு வளர்க்கத் தொடங்கினாலே நாட்டு மாடுகளைக் காப்பாற்றி விடலாம். செய்யலாமே…!

***

ஜல்லிக்கட்டை ஒழிக்க பார்ப்பனர்களும் துடிக்கிறார்கள், பெரியாரியவாதிகளும் துடிக்கிறார்கள் என்று பார்ப்பனர்களோடு, பெரியாரியவாதிகளைக் கோர்த்துவிடப் பார்க்கிறார்கள்.

ஜல்லிக்கட்டை தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் ஆதரிக்கிறது; தமிழ்த் தேசிய இயக்கங்களும் ஆதரிக்கின்றன என்று பெரியாரியவாதிகள் குற்றம் சாட்ட முடியும் அல்லவா?

பசுமாட்டை வளர்க்க வேண்டும் என்கிறார்கள் இந்துத்துவாவினர்.

நாட்டுக் காளைகளை வளர்க்க வேண்டும் என்கிறார்கள் தமிழ்த் தேசியவாதிகள்.

‘ரெண்டையும் வளர்த்துக் கொண்டு வாங்க… நாங்க அடிச்சு சாப்பிடணும்’ என்கிறார்கள் பெரியாரியவாதிகள்.

நன்றி:  கீற்று நந்தன்

பெரியார் முழக்கம் 19012017 இதழ்

You may also like...