ஜூன் 4 – தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு ஜூன் 5 – மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்புப் போராட்டம் சென்னையில் இரு பெரும் நிகழ்ச்சிகள்

நடுவண் பா.ஜ.க. ஆட்சியின் இந்தித் திணிப்பைக் கண்டித்து ஜூன் 5ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகப் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த இருக்கிறது.

போராட்டத்துக்கு முதல் நாள் ஜூன் 4ஆம் தேதி சென்னையில் “இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” எனும் முழக்கத்தை முன் வைத்து திறந்த வெளி மாநாடு நடக்கிறது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மாநாட்டுப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

திருவான்மியூர் – தெப்பக்குளம் மைதானத்தில் இந்தி எதிர்ப்பு போராளிகள் “தாளமுத்து-நடராசன் நினைவு அரங்கில்” மாநாடு நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள், பறை இசையுடன் தொடங்கும் மாநாட்டில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கழகத் தலைவர், பொதுச் செயலாளரும் பங்கேற்கிறார்கள். தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு என்று மாநாட்டுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுதும் மாநாடு – போராட்டத்தை விளக்கி சுவரெழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.

4ஆம் தேதி மாநாட்டிலும் அடுத்த நாள் போராட்டத்திலும் பங்கேற்க தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் திரண்டு வருகிறார்கள். மாநாடும் போராட்டமும் தமிழகம் தழுவி நடத்துவது என, கழக தலைமைக் குழுவில் முடிவு செய்யப்பட்டது. 4ஆம் தேதி இரவு தோழர்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் காவிப் படைகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்திட –

இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்த –

தமிழகம் இழந்து வரும் உரிமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க –

திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாநாட்டையும் போராட்டத்தையும் அறிவித்திருக்கிறது.

தோழர்களே! சென்னைக்கு திரளுவீர்!

 

பெரியார் முழக்கம் 25052017 இதழ்

You may also like...