ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் ! ‘மகுடம்’ இசை முழக்கம் அதிர்ந்தது அரங்கம்

தலைநகர் சென்னையில் நடந்த ‘மகுடம்’ தமிழர் வல்லிசை மண்ணின் இசைக் கருவிகள் மார்தட்டி அணி வகுக்கும் எழுச்சி இசை முழக்கமாய் கடந்த மார்ச் 12ஆம் தேதி ஞாயிறு மாலை காமராசர் அரங்கில் ஒலித்தது. தமிழ்நாட்டில் தமிழர் இசையில் மிளிர்ந்த எத்தனையோ தாளக் கருவிகளும் இசைக் கருவிகளும் காணாமலே போய் விட்டன. இந்த இசைக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்பதற்காக ஜாதிய சமூகம் அவர்களை ஒதுக்கியதுபோலவே தமிழர்களின் அடையாளங்களைப் பேணிய இசைக் கருவிகளையும் அழித்துவிட்டது. அழிந்து வரும் தமிழர் வல்லிசையை மீட்டெடுத்து, அந்தக் கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை ஒரே மேடையில் இசைக்க வைக்கும் கடும் முயற்சியில் இறங்கியது ‘மகுடம்’ அமைப்பு. தலைநகரில் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தொடங்கி தமிழிசை விழாக்களை ‘ஆனா ரூனா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாணவர் நகலக நிறுவனர் மறைந்த நா. அருணாசலம் நடத்தி வந்தார். அவரது நினைவு நாள் நிகழ்வில் அந்தப் பணி தொய்வின்றி தொடரும் என்று அவரது மகன் மாணவர் நகலக உரிமையாளர் சா.அ.சௌரிராசன் அறிவித்தார்.

அறிவிப்பை செயல்படுத்த தமிழிசை விழாவை மக்கள் இசை விழாவாகத் திட்டமிட்டு 3 மாத காலம் தனது நண்பர்கள் குழாமுடன் தீவிர முயற்சிகளில் இறங்கினார். ஓ. சுந்தரம், கலைவாணன் உள்ளிட்ட நட்புக் குழாம் உடன் நின்றது. தமிழகம் முழுதும் பல்வேறு கிராமங்களில் அடையாளமும் அங்கீகாரமும் மறுக்கப்பட்ட கலைஞர்கள் கண்டறியப்பட்டனர்.  அவர்கள்  அனைவரை யும் ஒரே அரங்கில் ஒன்று கூட்டி பல நாட்கள் ஒத்திகைகள் பயிற்சிகள் தரப்பட்டன. ஒவ்வொரு கலைஞரிடமும் புதைந்து கிடந்த ஆற்றல் அனைவரையும் திகைக்க வைத்தது. சுமார் 60 தாள வாத்தியக் கருவிகள் கண்டறியப் பட்டன. இந்தக் கருவிகளை இசைப்போர் வெகு சிலர். சில வகைக் கருவிகளை இசைக்கக் கூடியவர் ஒரே ஒருவராக மட்டுமே இருந்தனர். அத்தனை கலைஞர்களையும் இசையால் இணைய வைத்து அவர்களின் கலை அடையாளங்களுக்கு சுயமரியாதையை சூட்டியது ‘மகுடம்’.

காமராசர் அரங்கம், உணர்வுகளின் சங்கமாய் தமிழர் எழுச்சியாய் தகித்தது. 6.30 மணிக்கு தொடங்கிய நிகழ்வு 9 மணி வரை அரங்கையே அதிர வைத்தது. குடும்பம் குடும்பமாய் திரண்ட தோழர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர், நடனமாடினர். கவிஞர் அறிவுமதியின் உணர்ச்சியூட்டும் பாடலுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. இறுதிக் காட்சியில் 110 கலைஞர்களும் ஒரே மேடையில் இணைந்து நாயன இசையுடன் எழுப்பிய இசையும் தாளமும் ஏற்படுத்திய உணர்வுகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.  நடிகர் நாசர் நிகழ்ச்சி பற்றி குறிப்பிடும்போது, “என் வாழ்க்கையில் இது போன்ற அர்த்தமுள்ள ஓர் இசை நிகழ்வை இதுவரை நான் கண்டதே இல்லை” என்றார்.

கவிஞர் அறிவுமதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, வீர சந்தானம், நடிகர் நாசர், நடிகர் திலகத்தின் மகன் இராம்குமார், கலைப்புலி தாணு உள்ளிட்ட பல கலைஞர்களும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாசு, வேல் முருகன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிப் பிரமுகர்களும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் உள்ளிட்ட ஏராளமான இயக்கங் களைச் சார்ந்தவர் களும், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம் மகேசு, குட்டி ரேவதி உள் ளிட்ட பெண்ணிய போராளிகளும், பெண் களும் ஆண்களுமாய் அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்த்துக் கலைஞர்கள், பெருமை யிலும் உற்சாகப் பூரிப்பிலும் திளைத்தனர். மக்கள் ஆரவாரமும், கை தட்டலும், ஆட்ட மும் சூடேறிக் கொண்டே இருந்தன. கவிஞர் காளமேகத்தின் நரம்பை முறுக்கேற்றும் பாடல் வரிகளோடு நிகழ்வு நிறைவானது.  அனை வருக்கும் பாராட்டும் மரியாதையும் செய்யப் பட்டன.  கலைஞர்கள், உழைத்தவர்கள், உதவி யவர்கள் என அனைவரும் பாராட்டப்பட்டனர்.

பார்ப்பனிய மேட்டுக்குடி மக்களின் – தியாகராஜ கீர்த்தனைகளும், நாமவாளிகளும், தெலுங்கு சமஸ்கிருதப் பாடல்களுமே தமிழ்நாட்டின் இசை என்ற பொய்மையை தகர்த்து, பறை, மகுடம், உறுமி நய்யாண்டி மேளம், நாயனம் போன்ற கருவிகளுடன் களத்துக்கு வந்துவிட்டது தமிழிசை முழக்கம்!

 

“இதுவே தமிழர் இசை; இதை உலகுக்கு கூறுவோம்!”

‘மகுடம்’ விழாவின் தொடக்க உரையாக நிறுவனர் சா.அ. சௌரிராசன் நிகழ்த்திய உரை.

தமிழ் இசை மேம்பட வேண்டுமென்று பாடுபட்ட அய்யா நா.அருணாசலம் (ஆனா ரூனா) அவர்கள் தடத்தில்….

நமது தமிழ் மொழி உருவான காலத்திலேயே தாய் இசைக் கருவியான பறையும் உருவாகியது என்ற நெடிய தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது நமது தமிழரிசை. நமது கருவிகள் பல்வேறு காலங்களில் வளர்ச்சி பெற்று செய்திகளை அறிவிக்க, போருக்கு உண்டான உணர்ச்சியை உருவாக்க, நீண்ட தூர பயணத்திற்கேற்ப,

ஏர் ஓட்ட, ஏற்றம் இறைக்க போன்ற அனைத்து தொழில்களுக்கும் உண்டான இசைக் கோர்வைகளை கொண்டது நமது இசை.

நம் தமிழர் வழிபடும் தெய்வங்களும் ஏதோ ஓர் இசைக் கருவியை வைத்திருப்பதாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது அல்லது இந்த தெய்வத்திற்கு இந்தக் கருவிதான் ஏற்றது என்றும் வைத்துள்ளனர். கோயில் திருவிழாக்கள், குடும்ப விழாக்களுக்கு என்று ஒவ்வொரு வகையான ஒலிக் கோர்வையையும் கொண்டு, ஓசையைக் கேட்கும்போதே அங்கே என்ன நிகழ்வு நிகழ்கிறது என்ற செய்தியையும், இசையால், அதற்கான உணர்வையும் தந்தது நமது மூத்த தமிழ் இசை.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நமது இசை மரபு கலைஞர்களை பெருமைப்படுத்திய தாகும். நமது கலைஞர்கள் மக்களோடு வாழ்ந்து மதிப்புக்குரியவர்களாக திகழ்ந்தனர். அரசர்களின் உற்ற தோழர்களாக விளங்கினர். தலைவனுக்கும், தலைவிக்கும் பிணக்குகள் ஏற்படும்போது அவற்றைப் போக்கக்கூடிய மரியாதைக்குரியவர் களாகவும் செயல்பட்டார்கள் என்று சங்க இலக்கியங்கள் நமக்கு உரைக் கின்றன. ஆனால் இன்று நமது இசையும் நமது கலைஞர்களும் சாதிய அடுக்குகளுக்கிடையே அழுத்தப்பட்டுக் கிடக்கின்றனர். இந்நிலையை மாற்ற முடியுமா? வல்லிசையாக வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எங்களிடம் எழுந்தது; களத்தில் இறங்கினோம்.

நமது இசை வடிவங்கள் தமிழ் நாடெங்கும் அந்த நிலப்பரப்புக்கும், வாழ்க்கை சூழலுக்கும் ஏற்ற வகையில் திணைக் கோட்பாடுகளாக பிரிக்கப் பட்டு மூவாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே வகைப்படுத்தப்பட்டு விட்டன. இதன் தொடர்ச்சியான நம் இசை இன்று கன்னியாகுமரிக்கு செண்டை, திருநெல்வேலிக்கு மகுடம், இராமநாதபுரம், விருது நகருக்கு எருதுகட்டு மேளம், மதுரைக்குப் பறை, நையாண்டி மேளம், தஞ்சைக்கு நையாண்டி மேளம், கோவைக்கு துடும்பு, அந்தியூருக்கு பம்பை, திருவண்ணா மலைக்கு பெரிய மேளம், தர்மபுரிக்கு மொடாமத்தளம், புதுவைக்கு வட்டக்கிளியல், சென்னையில் திருக்கைலாய வாத்தியங்கள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் தத்தம் பகுதிகளில் நுகர்ந்த இசை மட்டுமல்லாமல் மலைவாழ் மக்களிடையே உள்ள இசை வடிவங்கள், கருவிகள் அனைத்தையும் தொகுத்து ஒரே மேடையில் இசைத்தால்? என்ற பெரிய வினாவும், பறையும் செண்டையும் ஒன்று சேருமா? மகுடமும் தவிலும் இணைந்து இசைக்குமா? பெரிய மேளமும் பம்பையும் ஒத்திசையுமா? என்ற பல்வேறு துணை வினாக்களும் எங்கள் முன் நின்றன. அனைத்து கலை வடிவங்களையும் ஒத்திசைக்க முடியுமா? என்ற பெரிய கேள்வியும், அதை ஒட்டிய துணை கேள்வி களுக்கும் உண்டான விடை தான் மகுடம் – தமிழர் வல்லிசை.

உள்ளங்கையில் அடங்கக்கூடிய கருவி, கையளவே உள்ள கருவி, ஒரு பக்கம் இசைக்கக் கூடியது, இரு பக்கமும் இசைக்கக் கூடியது, வெறுங்கையில் தட்டுவது, குச்சி கொண்டு தட்டுவது, மனதை மயக்கும் குழல்கள், மாயக் குழல், உள்ளம் கொள்ளை கொள்ளும் நாயனம், நம்மோடு பேசும் உறுமி, உணர்வை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் உடுக்கை, வீரத்தை ஊட்டும் 16 அடி நீளம் கொண்ட நெட்டுத்தாரை, ஒரு ஆளின் உயரத்திற்கும் மேற்பட்ட 6 அடிக்கு மேற்பட்ட கிணை முரசு, கோயில்களில் வாசிக்கப்படும் திருக்கைலாய வாத்தியங்கள் என்று தோல் கருவிகள், துளைக் கருவிகள், ஊது கருவிகள், உலோக கருவிகள், இயற்கையான சங்கு என ஐம்பதுக்கும் மேற்பட்ட கருவி களுடன் அணி வகுக்கும் மாபெரும் நிகழ்வு மகுடம் – தமிழர் வல்லிசை நிகழ்வாகும்.

தமிழர்களின் அனைத்து இசைக் கருவிகளையும் ஒரே மேடையில்… நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட கருவிகள் பல்வேறு இசை வடிவங்கள் கொண்டது மகுடம் – தமிழர் வல்லிசை. கலைஞர்கள் தங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும், தனி ஒரு கலைஞனின் இசை வெளிப்பாடு, குழுவின் இசை, அனைத்து குழுக்களையும் கொண்டு நூற்றுக்கணக்கானவர்களாக இணைந்து ஒத்திசையாகவும் வெளிப்படும் தமிழர் வல்லிசையே மகுடம் குழுவின் நிகழ்வு.

நிறைவாக, இதுதான் தமிழர் இசை என்பதை உலகுக்கு அறிவிக்கும் எழுச்சி மிக்க வல்லிசை நிகழ்ச்சியாக இதோ, அரங்கேறு கிறது ‘மகுடம்’ – தமிழர் வல்லிசை!

பெரியார் முழக்கம் 16032017 இதழ்

You may also like...