இந்தியா இனி ‘இந்தி’யா?
2011-ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கியிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு…
- ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில்தான் பேச வேண்டும்
- விமானங்களில் இந்தியில்தான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும்.
- இனி, விமானங்களில் வழங்கப்படுகிற செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் 50 சதவிகிதம் இந்தி மொழியில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் டிக்கெட்டுகளிலும் இந்தி பெருமளவு பயன்படுத்தப்பட வேண்டும்.
- மத்திய அரசின் டேராடூன் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் அனைத்துப் பயிற்சி ஏடுகளும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைக்கொண்டதாக இருக்க வேண்டும்.
- பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்படவேண்டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் 10–ம் வகுப்பு வரையில் இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்படவேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி, கொள்கை வகுக்க வேண்டும்.
6 இந்தி மொழி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில், தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் இந்தியில் பதில் அளிப்பதை விருப்புரிமைத் தேர்வாகக் கொள்ள வேண்டும்.
இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது காங்கிரஸ் ஆட்சியின்போது அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவால் முன்மொழியப்பட்டவை. இந்த நிலைக்குழுவின் தலைவரே, தமிழகத்தைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான்.
இந்தியைத் திணிப்பதற்கான காங்கிரஸ் பரிந்துரைகளை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், `இந்தி’யாவின் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கியிருக்கிறார் என்பதுதான் உண்மை. பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள், பண்பாடுகளை அழித்து, இந்தி என்ற ஒற்றைமொழியை அனைத்துமட்டங்களிலும் கொண்டுவரும் நடவடிக்கைதான் இது.
“காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்றார் மோடி. ஆனால், இதையெல்லாம் பார்க்கும்போது, இந்தி தவிர்த்த பிறமொழிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான் நோக்கம்போலத் தெரிகிறது.
நாம் அனைவரும் `இந்தியர்’ என்று இதுவரை சொல்லிவந்ததன் உண்மையான அர்த்தம், இனி `இந்தி’யர் என்பதுதானோ?
இனி, ஆனந்த விகடன் தலையங்கமாவது தமிழில் இருக்கலாமா, அல்லது இதுவும் இந்தியில்தான் இருக்கவேண்டுமா? நன்றி : ஆனந்தவிகடன் தலையைங்கம், 3.5.2017
பெரியார் முழக்கம் 11052017 இதழ்