உக்கம்பருத்திக்காட்டில் கழகத்தின் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம்

சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், காவலாண்டியூர் கிளை கழக சார்பில் 24, 25.05.2017 ஆகிய இரண்டு நாள்கள் கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கில் முதல்நாள் முதல் வகுப்பு “மதவாத அரசியல்” (முஸ்லிம், மாட்டுகறி, சமஸ்கிருதம்) எனும் தலைப்பில் பேராசிரியர் சுந்தரவள்ளி வகுப்பு எடுத்தார். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு “பெரியாருக்கு முன்னும் பின்னும்; நீதிகட்சி சாதனைகள்” குறித்து புலவர் செந்தலை கவுதமன் வகுப்பு எடுத்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு “தி.வி.க. உங்களிடம் எதிர்பார்ப்பது” எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன், “இடஒதுக்கீடு – ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் பால்.பிரபாகரன் ஆகியோர் வகுப்பு எடுத்தனர். இரவு 8.30 மணிக்கு முதல் நாள் வகுப்பு முடிவுற்றது. இரவு உணவுக்கு பின் குறும்படங்கள் திரையிடப்பட்டன.

25.5.17 அன்று காலை “உலகின் தோற்றம் உயிர்களின் தோற்றம்” குறித்து மருத்துவர் எழிலன் வகுப்பு எடுத்தார். தொடர்ந்து “ஜாதி தோற்றம், இருப்பு, ஒழிப்பு” எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன், “கடவுள் மறுப்பு” குறித்து கொளத்தூர் மணி,  “சோதிடப் புரட்டு” குறித்து மருத்துவர் எழிலன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். தொடர்ந்து முதல் நிலைத் தோழர்கள் வீதி நாடக நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். தோழர்கள் இரண்யா, பரத் இந்த நாடகத்தை சிறப்பாக உருவாக்கியிருந்தனர். தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட தோழர்களின் அய்யங்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டன. இரண்டு நாட்கள் தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்ட தோழர்களுக்கு மட்டும் சான்றிதழ் தரப்பட்டது. இரண்டு நாள் பயிலரங்கத்திற்கான உணவு செலவுகளை காவலாண்டியூர் கிளை கழகமும், தோழர்கள் தங்குமிடம் உக்கம் பருத்திக்காடு பெரியார் படிப்பக பராமரிப்பு வேலைகளை உக்கம்பருத்திக்காடு கிளை கழகமும் ஏற்று சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

முதல்நிலைத் தோழர்களுக்கு தோழர்கள் இரண்யா, பரத் ஆகியோர் மூடநம்பிக்கை குறித்து விளக்கம் மற்றும் பாடல், வீதி நாடகப் பயிற்சி அளித்தனர். இரண்டாம் நாள் மதிய நேரத்தில் குழந்தைகளுக்கான பேய் குறித்த பயத்தை போக்க சுடுகாட்டிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று ஒரு பிணக்குழியை சுற்றி நிற்க வைத்து கடவுள், பேய் போன்றவை இல்லை எல்லாம் மன பயமே இதிலிருந்து குழந்தைகள் விடுபட வேண்டும் என விளக்கினர். அதே இடத்தில் குழந்தைகளின் கையில் கோழிக்கறியை கொடுத்து உண்ணச் செய்தனர்.  இருநாள் பயிலரங்கத்திலும் 100 இளம் தோழர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.                                                                – நமது செய்தியாளர்

 

பெரியார் முழக்கம் 01062017 இதழ்

You may also like...