அரசு மருத்துவர்கள் போராடுவது ஏன்?

தமிழகத்தில் தற்போது 1800 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 330 அரசு மருத்துவமனைகள், 19 அரசு மருத்துவ கல்லூரிகள், 50க்கும் மேற்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் போன்ற மருத்துவத் துறைகளில் சுமார் 16000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். இதில் சுமார் 9000 மருத்துவர்கள் இளநிலை படிப்பு (எம்.பி.பி.எஸ்.) மட்டுமே முடித்துவிட்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றார்கள். இத்தகைய சிறப்பான பணியினாலேயே அனைத்து சுகாதார குறியீடுகளிலும் இந்தியாவில் தமிழகம் முன்னிலையில் இருந்த வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 1500 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் அனைத்திந்திய கலந்தாய்வு மூலம் 50 சதவித இடங்களும், மாநில அரசின் கலந்தாய்வின் மூலம் 50 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இதில் மாநில அரசிடம் உள்ள மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பின் மொத்த 750 இடங்களில் 50 சதவீத இடங்கள் சிறப்பு சேவை ஒதுக்கீடாக சுமார் 375 இடங்கள் அரசு மருத்துவர்களுக்காக கடந்த 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. ஏழை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் இரண்டு வருடம் பணி புரிந்த பிறகு தமிழ்நாடு சேவை இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ முதுநிலை படிப்பு இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடும், அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் சிறப்பு சேவை ஊக்க மதிப்பெண்களாகவும் வழங்கப்பட்டு முதுநிலை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோதே  மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவத் துறைகளில் மருத்துவர்கள் பற்றாக் குறையுள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அளவிற்கு ஓர் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது அரசு பணியில் உண்மையாக உழைத்த மருத்துவர்களிடையே மனவேதனையையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறு இடஒதுக்கீட்டை இரத்து செய்தால், மருத்துவர்கள் சேவை சலுகைகள் இல்லாத அரசு பணியினை விடுத்து செல்வது மட்டும் அல்லாமல், புதிதாக அரசு பணியில் சேருபவர் எண்ணிக்கையும் குறைய நேரிடும். இதனால் ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்ய சிறப்பு மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவதுடன், எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள்கூட இல்லாத நிலை ஏற்படும்.

 

பெரியார் முழக்கம் 04052017 இதழ்

You may also like...