அம்பேத்கரிய சிந்தனைகளை ஆழமாக அலசிய கருத்தரங்கம்
“அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள்; ஆழமான புரிதலுக்கு அழைக்கிறோம்” என்ற அறிவிப்போடு வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த ஏப்.23 அன்று மிகச் சிறப்பான கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. பெரம்பூர் மேம்பாலம் அருகே உள்ள ‘பகுஜன் சமாஜ் கட்சி’யின் அரங்கில் இந்தக் கருத்தரங்கை நடந்த கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட் ராங் கழகத் தோழர் களுக்கு மகிழ்ச்சி யுடன் அனுமதி அளித்தார். அண்மை யில் திராவிடர் விடுதலை கழகத்தில் தங்களை இணைத் துக் கொண்ட பெண் தோழர்கள் சா.ராஜி, வ. சங்கீதா ஆகியோர் முன்னின்று, இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தனர். வடசென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். சா. ராஜி தலைமையில் வ.சங்கீதா வரவேற்புரையாற்ற, மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கரை திசை திருப்பும் சதி’ எனும் தலைப்பில் அம்பேத்கர் இந்துத்துவ ஆதரவாளராக சித்தரிக்க முயலும் சங்பரிவாரங்களுக்கு பதிலளித்து. வரலாறுகளையும் அம்பேத்கர் கருத்துகளையும் முன் வைத்து, ஒன்றரை மணி நேரம் பேசினார். தொடர்ந்து எழுத்தாளர் வே.மதிமாறன், ‘அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம்’ என்ற தலைப்பில் பார்ப்பனியத்தை இடைநிலை ஜாதியினர் பரப்பி வருவதையும் தீண்டப்படாத மக்கள் மாட்டுக்கறி உணவுக்குத் தள்ளப்பட்ட வரலாற்றுச் சூழல்களையும், இடைநிலை ஜாதியினரின் பார்ப்பனியத்தை எதிர்த்து, அந்த சமூகத்தினரிடமே பேசிய ஒரே தலைவர் பெரியார் என்பதையும் விரிவாக விளக்கினார்.
அரங்கு முழுதும் ஏராளமான பெண்களும், இளைஞர்களும் திரண்டிருந்தனர். நிகழ்வில் மூன்று இளைஞர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ‘நிமிர்வோம்’ இதழை விடுதலை இராசேந்திரன் வழங்கினார். நா. பாஸ்கர் நன்றி கூற 9 மணியளவில் கருத்தரங்கம் நிறைவடைந்தது.
பெரியார் முழக்கம் 27042017 இதழ்