சென்னை சுயமரியாதை கல்விக் கழகம் சிறப்பான முயற்சி
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்து பயிலரங்கம்: பகுதி மக்கள் பேராதரவு
15.4.2017 அன்று மாலை 4 மணியளவில் சென்னை மந்தைவெளி செயின்ட்மேரீஸ் சாலையில் அமைந்துள்ள அப்துல்கலாம் சமுதாய நலக் கூடத்தில் மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் முயற்சியால் சுயமரியாதைக் கல்விக் கழகம் என்ற ஒரு துணை அமைப்பை உருவாக்கி, 10, ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் அரசு வேலை வாய்ப்பு களுக்கான பயிலரங்கம் நடத்தப்பட்டது. இப்பயிலரங்கத்தில் மாணவ மாணவியர் 70 பேர், அவர்களுடைய பெற்றோர் மற்றும் கழகத் தோழர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிலரங்கத்தில் வகுப்புகள் நடத்த ம. வீரபாகு, (வருமான வரித் துறை அதிகாரி, தலைவர், கூட்டுறவு சங்கம்), கோ. குணவதி (தலைவர், வருமானவரி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சங்கம்), கு. தனசேகர் (வருமானவரி ஆய்வாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். கழகத் தோழர் ஆ. சிவக்குமார் தலைமை தாங்கினார்.
கோ. குணவதி, மாணவர்களிடையே உள்ள தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறியும் விதமாக தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துகளை முன் வைத்தார். “அரசு வேலைக்கு செல்ல இலஞ்சம் கொடுக்க வேண்டுமா?” என்று மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு “அப்படியெல்லாம் இல்லை நாங்கள் யாரும் இலஞ்சம் கொடுக்காமல் தேர்வு எழுதித் தான் வேலைக்குச் சென்றோம்” என்று எடுத்துக் கூறி, எப்படி அரசு வேலைக்கு வந்தார் என்பதையும் விளக்கினார். அதிலும் குறிப்பாக, ‘இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தப் பின்தான் அரசு வேலைக்கான தேர்வே எழுதினேன்’ என்று சொல்லி, எல்லா பெண்களும் தடைகளை உடைத்தெறிந்து வரவேண்டும் என்பதையும் மாணவர்களோடு மாணவர்களாக ஒன்றி நின்று விளக்க உரை யாற்றினார்.
ம. வீரபாகு அவர்கள் என்னென்ன அரசு வேலைகள் இருக்கிறது, அஞ்சல் துறை, சிவில் சர்வீஸ், வங்கித் துறை, இரயில்வே, காப்பீட்டுத் துறை, வருமான வரித் துறை, பாதுகாப்புத் துறை என அரசு வேலை வாய்ப்புகள் உள்ள அனைத்து துறை சம்பந்தமாகவும், அதற்கான வயது வரம்பு, தேர்வு முறைகளை உரையாகவும், திரைக் காட்சி வடிவமாக வும் விளக்கி இரண்டரை மணி நேரம் வகுப் பெடுத்தார்.
வீரபாகு தம்பி வெங்கடேஷ் வருமான வரித்துறை அதிகாரியாக உள்ளார். அவர் இராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை விரிவாக விளக்கினார். வெங்கடேஷ் 35 வயது வரை இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின் வருமான வரித் துறையில் தேர்வு எழுதி இன்று வருமானவரித் துறை அதிகாரியாக உள்ளார். வகுப்புகள் முடிந்து கேள்வி நேரம் நடந்தது. அனைத்து கேள்விகளுக்கும் வீரபாகு, குணவதி பதில் அளித்தனர். தனது மகளோடு, துணையாக இந்த பயிற்சிக்கு வந்திருந்த 40 வயது பெண், நான் என் மகளை இந்த வகுப்புக்கு அழைத்து வந்தேன். ஆனால் நீங்கள் என்னையும் அரசு வேலைக்குச் செல்லும் ஆசையை தூண்டி விட்டுள்ளீர்கள். நான் தேர்வு எழுதலாமா? அரசு வேலைக்குச் செல்லலாமா? நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன் என்று கேட்க, அதற்கு வீரபாகு, தாராளமாக செல்லலாம். தேர்வு எழுதுங்கள். தேர்வில் நாம் பிளஸ் 2 வரை படித்ததிலிருந்துதான் அதிகமாக கேட்பார்கள். தினசரி பத்திரிகை படியுங்கள். அதுவும் பரபரப்பு செய்திகளை விட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் படியுங்கள் என்று கூறி, எத்தகைய செய்திகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பட்டிய லிட்டார்.
பெரும்பான்மை மாணவர்களின் அய்யமாக இருந்தது, ஆங்கிலம் பற்றித்தான். அது ஒரு தடையே இல்லை. தமிழிலேயே எழுதலாம். என்றும் நீங்கள் எல்லாம் எங்களைப் போன்று எங்கள் துறைக்குள் வரவேண்டும். அதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு வேலைகளில் தமிழர்கள் குறைந்து வரு கிறார்கள் என்று தன்னம்பிக்கைகளை ஊட்டினார்.
இந்த பயிலரங்கத்திற்காக 5 ஆயிரம் துண்டறிக்கைகளை அச்சேற்றி, மாணவர்கள், பொது மக்கள், பயிற்சி மய்யங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வகிக்கும் குடிசைப் பகுதிகளில் வாழும் இளைஞர் களுக்கு விநியோகிக்கப்பட்டன. பயிலரங்கு குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. பி.காம். படித்த ஒரு இளைஞர் மிகவும் உற்சாகம் பெற்று, பயிலரங்குக்கு உதவிட முன் வந்தார். அவரே வரவேற்புரையும் ஆற்றினார். அதில் சுயமரியாதை கல்விக் கழகத்தின் நோக்கத்தை உணர்வுபூர்வமாக பாராட்டினார்.
இறுதியாக, நாராயணமூர்த்தி (வருமான வரித் துறை பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கப் பொருளாளர்) நன்றி கூறினார். சுயமரியாதை கல்விக் கழகம் ஏற்பாடு செய்த இந்த பயிலரங்கில் வருமான வரித் துறை பிற்படுத்தப்பட்டோர் சங்கமும் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டது. வருமானவரி ஆய்வாளர் அன்பு தனசேகர், அறிமுகவுரை ஆற்றினார். இரவு 8 மணி வரை பயிலரங்கம் நடந்தது. கழகத் தோழர்களின் இந்த ஆக்கப்பூர்வ செயல்பாட்டுக்கு பொது மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 20042017 இதழ்