“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”
இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் தந்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தாலும் அவர் கழகத்தில் இணைவதைவிட அவரது பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்” என்று கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தி:
“பாரூக்கின் தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்தாலும் கோவை மாவட்ட கழகத்தின் தோழர்கள் பாரூக்கின் தந்தை பாதுகாப்பே முக்கியம். அது பற்றித் தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று கூறினார்கள். இப்போது எங்கள் கவலை எல்லாம் பாரூக்கின் இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் கல்வி வழங்க வேண்டும் என்பதுதான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது ஒரு குழந்தையின் விருப்பம். அது குறித்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம். மற்றபடி பாரூக்கின் தந்தை எங்களது கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள் கழகம் முனைப்பு காட்ட வில்லை” என்று கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் நேருதாசு கூறினார்.
பாரூக்கின் குடும்பத்தினரும் இதே கவலையைத்தான் தெரிவித்தார்கள். பாரூக்கிற்கு நேர்ந்த கதி அவரது தந்தை ஹமீதுக்கும் நேர்ந்து விடக் கூடாது என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
மத அடிப்படைவாதிகளால் ஹமீதும் குறி வைக்கப்படலாம் என்ற பயம் இருக்கிறது. எனவே அவரை தனியாக எங்கும் நாங்கள் வெளியே அனுப்பவோ பயணம் செய்யவோ அனுமதிப்ப தில்லை” என்று பாரூக்கின் மைத்துனர் அய். ஷாஜஹான் கூறினார். ஹமீது எங்கு சென்றாலும் – ஷாஜஹான் துணையாக செல்கிறார்.
பெரியார் முழக்கம் 06042017 இதழ்