பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”
‘கொள்கைக்காகவே பலியான மகனுக்காகப் பெருமை அடைகிறேன்’
“பெரியார் என்ற தலைவர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரது கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (மார்ச் 31) அளித்த பேட்டியில் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் தந்தை ஆர் ஹமீது (54) கூறியிருக்கிறார். “தந்தை பெரியாரின் கொள்கைகளை நான் படிக்கத் தொடங்கி விட்டேன்” என்றும் அவர் கூறினார். கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பிலால் எஸ்டேட் எனும் குறுகிய வீதியில் அவரது சிறிய வீட்டில் அமர்ந்து பேசிய அவர், “நான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைவது என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். “மூட நம்பிக்கை களுக்கு எதிராக நான் போராடப் போகிறேன். ஆனால் மதங்களுக்கு எதிராகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. நம்முடைய ‘ஆன்மா’தான் கடவுள் என்று நம்புகிறேன்” என்றார் அவர். “இது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு நான் எடுத்த முடிவு அல்ல. நன்றாக சிந்தித்து எடுத்த முடிவு” என்றும் அவர் கூறினார். “இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் கலந்து பேசவிருக்கிறேன்; அதற்குப் பிறகு மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் போராட்டத்தில் எப்படிப் பங்காற்றுவது என்பது குறித்து முடிவு செய்வேன்” என்றும் அவர் கூறினார்.
என்னுடைய மகன் கொள்கைகளை பேசியதற்காகவே கொலை செய்யப்பட்டான். வேறு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார். “கொலை செய்தவர்களின் ‘ஆணை’யை ஏற்று, எனது மகன் மத – இறை மறுப்புக் கொள்கைகளை கைவிடுவதாக கூறியிருந்தால் அவன் உயிரோடு இருந்திருப்பான். ஆனால், என் மகன், அவன் ஏற்றுக் கொண்ட தத்துவத்தில் உறுதியாகவே இருந்தான். இப்படி ஒரு மகனுக்கு தந்தையாக இருப்பதில் பெருமைப்படு கிறேன்” என்றார் ஹமீது.
கொலையோ, வன்முறையோ எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வை வழங்கிடாது என்ற செய்தியை நான் சமுதாயத்துக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று கூறிய அவர், “இஸ்லாம் வன்முறையை போதிக்கவில்லை. மதத்தின் பெயரால் கொலை செய்யும் உரிமை – எவருக்குமே இல்லை” என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தான் ஹமீதின் சொந்த ஊர். 8ஆம் வகுப்பு வரை படித்தார். 1983இல் உக்கடம் ‘பிலால் எஸ்டேட்’ பகுதியைச் சார்ந்த நஃபீஷாவை 1983இல் திருமணம் செய்து கொண்டார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பம் சென்னைக்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறியது. மீண்டும் 2003இல் கோவை உக்கடம் பகுதிக்கே திரும்பியது. கொலை செய்யப்பட்ட பாரூக் 10ஆம் வகுப்பை முடித்து விட்டு பழைய இரும்பு பொருள்களை விற்கும் தொழிலை நடத்தி வந்தார்.
இதற்கிடையே பாரூக்கின் தந்தை ஹமீது சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு விடுதியின் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 16ஆம் தேதி இரவு 12.10 மணிக்கு பாரூக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி செய்தியை உறவினர்கள் தொலைபேசி வழியாக தெரிவித்த போது ஹமீது சென்னையில்தான் இருந்தார். “என்னுடைய மனைவிக்கும், மருமகள் ரஷீத்தா வுக்கும், பாரூக் திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டது தெரியும். ஆனால், எனக்கு இந்த செய்தி தெரியாது. கோவையில் இந்து முன்னணி பொறுப்பாளர் சசிகுமார், கொலை செய்யப்பட்ட போது கோவையில் நடந்த கலவரத்தையொட்டி எனது மகன் கைது செய்யப்பட்டபோதுதான் அவன் திராவிடர் விடுதலைக் கழகத்தில் சேர்ந்து செயல்படுகிறான் என்பதே எனக்குத் தெரிந்தது. பாரூக் வழக்கை திராவிடர் விடுதலைக் கழகமே எடுத்து நடத்தியது. பாரூக் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பொய்யாக போடப்பட்டது. அறிவுரைக் குழுமத்தில் அந்த சட்டம் நீக்கம் செய்யப்பட்டு பாரூக் விடுதலை செய்யப்பட்டதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் தான் காரணம் என்றார் ஹமீது. (அறிவுரைக் குழுமத்தில் பாரூக் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது – ஆர்)
இவ்வாறு ‘டைம்ஸ் அப் இந்தியா’ தனது செய்திக் கட்டுரையில் எழுதியிருக்கிறது.
பெரியார் முழக்கம் 06042017 இதழ்