ஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்

இந்தி, சமஸ்கிருத திணிப்புகளை ஒவ்வொரு நாளும் மோடி ஆட்சி அரங்கேற்றி வருகிறது.

  • தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னிடம் விமான நிலையத்தில் இந்தியில் பேசிய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம், தனக்கு இந்தி தெரியாது என்று கூறியவுடன், நீங்கள் இந்தியர் தானா என்று கேட்டார் அந்த அதிகாரி.
  • ‘ஆயுஷ்’ மருத்துவ அமைச்சகம் நடத்திய ஒரு இணைய கருத்தரங்கில் அந்தத் துறையின் செயலாளர் இந்தி மொழியில் பேசினார். தென்னாட்டிலிருந்து பங்கேற்ற பிரதிநிதிகள் தங்களுக்கு இந்தி தெரியாது; நீங்கள் பேசுவது புரியவில்லை என்றவுடன், தனக்கு இந்தி மட்டும்தான் தெரியும்; புரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று திமிருடன் பேசினார் அந்த அதிகாரி.
  • காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி மோடி ஆட்சி இணையம் வழியாக தமிழ்நாட்டில் மாணவர் மாணவிகளுக்கு நடத்திய புதிர் போட்டியை, இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தி தமிழை புறக்கணித்தனர்.
  • அரியலூர் மாவட்டத்தில் தேசியமய வங்கியின் நிர்வாகி உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டு வந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவரிடம் இந்தியில் பேசினார். தனக்கு இந்தி தெரியாது என்று மருத்துவர் பதில் கூறினார். அப்படியானால் உங்களுக்கு கடன் கிடையாது என்று இறுமாப்புடன் கூறினார் அந்த அதிகாரி.
  • தெற்கு இரயில்வே நிர்வாகம், தமிழ்நாட்டில் பயணிகள் முன்பதிவு குறித்து வெளியிடும் அலைபேசி குறுஞ்செய்தியை இந்தியில் மட்டும் வெளியிட்டது.
  • ‘நேஷனல் இன்சூரன்ஸ்’ என்ற பொதுத் துறை நிறுவனம், தமிழ்நாட்டிலுள்ள வாடிக்கை யாளர்களுக்கு தமிழில் கடிதங்கள் – தகவல்களை வெளியிடவில்லை. இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிட்டு வருவதை சுட்டிக்காட்டி நிறுவனத் தலைவருக்கு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதி யுள்ளார்.
  • 12,000 ஆண்டுகால இந்தியப் பண்பாடு குறித்து ஆய்வு செய்ய மோடி ஆட்சி அமைத்த குழுவில் தென்னாட்டைச் சார்ந்தவர்களோ, வடகிழக்கு மாநிலத்தவர்களோ, தலித், இஸ்லாமிய பிரதிநிதிகளோ இடம் பெறவில்லை. பார்ப்பனர்களே – அதிக இடம் பிடித்துள்ளனர்.
  • தமிழ்நாட்டில் நடைபெறும் அகழ்வாய்வுப் பணிகளிலிருந்து ஒன்றிய ஆட்சியின் அகழ்வாய்வுத் துறை, தன்னை முற்றாக விலக்கிக் கொண்டு விட்டது. இப்போது மாநில அரசின் அகழ் வாய்வுத் துறையே ஆய்வுகளை நடத்தி வருகிறது. தமிழர் நாகரிகம் குறித்து ஏராளமான தொன்மச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. ஆதிச்ச நல்லூரில் நடந்த அகழ்வாய்வுப் பணிகள் குறித்த அறிக்கையை வெளியிட நடுவண் ஆட்சி மறுக்கிறது.
  • தொல்லியல் பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தகுதியில் சமஸ்கிருதம், பாரசீகம் உள்ளிட்ட செம்மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில் செம்மொழி தகுதி பெற்ற தமிழை நீக்கி நடுவண் ஆட்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, கடும் எதிர்ப் புக்குப் பிறகு தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • தொழிலாளர் காப்புறுதிக் கழக (ஈ.எஸ்.அய்.) நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசக் கூடிய தொலைபேசி சேவையில் தமிழ்மொழி இல்லை. இந்தி, ஆங்கிலத்தில் தான் பேச முடியும். பல இலட்சம் பேர் தொடர்பு கொள்ளக் கூடிய தொலைபேசியில் தமிழ் இல்லை. தொழி லாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இப்படி ஒவ்வொரு நாளும் தமிழ் புறக்கணிப்பு; சமஸ்கிருதம், இந்தித் திணிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

 

பெரியார் முழக்கம் 15102020 இதழ்

You may also like...