கே.தொட்டியப்பட்டியில் ஜாதி வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களை சந்தித்து கழகம் ஆறுதல் 04042017
04.04.2017 செவ்வாய்க்கிழமையன்று விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள கிராமம் கே.தொட்டியப்பட்டியில் ஆதிக்க நாயக்கர் ஜாதி வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அருந்ததியின மக்களை திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
கழக அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி,பரப்புரைச்செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன்,மதுரை மாவட்டச்செயலாளர் மா.பா.மணிகண்டன்,மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி ஆகியோர் ஜாதிய வன்கொடுமைக்கு ஆளான மக்களை சந்தித்து நடந்த சம்பவங்களை குறித்து விசாரித்தறிந்தனர்.
பாதிக்கப்பட்ட சமூகமான அருந்ததியின மக்களுக்கான நீதி வேண்டிய போராட்டத்திலும்,தொடர்ச்சியாக அம்மக்களின் உரிமைப்போராட்டங்களிலும் திராவிடர் விடுதலைக் கழகம் என்றென்றும் அம்மக்களோடு துணை நிற்கும் என உறுதியளித்தனர்.
மேலும் இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படும் வகையில் வழக்கை நடத்திடவும்,உடமைகளை இழந்து நிற்கும் அம்மக்களுக்கு உடனடியாக தக்க நிவாரணம் வழங்க கோரியும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர்.
ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில்தொடர்ந்து நிலவிவரும் ஆதிக்க ஜாதியினரின் ஜாதிய வன்கொடுமை தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அப்பகுதிகளில் பிரச்சாரப்பயணம் நடத்த ஆவண செய்ய உள்ளதாகவும் கூறினார்கள்.