தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது !
தொட்டியப்பட்டி அருந்ததியின மக்கள் மீது நடத்தப்படுள்ள ஜாதிய வன்கொடுமை தாக்குதலை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது !
தாக்குதல் நடத்திய நாயக்கர் ஜாதிவெறியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் !
தமிழக அரசே,!
பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்களுக்கு தக்க இழப்பீடு வழங்கு !
அம்மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடு !
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள கிராமம் கே.தொட்டியப்பட்டி.இக் கிராமத்தில் நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 150 குடும்பங்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் எதுவும் இல்லை. ஆதிக்கசாதியான நாயக்கர் ஜாதி பகுதி குடியிருப்பில் குடிநீர் குழாய்கள் உள்ளன.
கிராமத்திற்கு தள்ளி சுடுகாட்டு பகுதியில் குடிநீர்த்தொட்டி அமைந்துள்ளது.அந்த குடிநீர்த்தொட்டியின் கீழ் உள்ள குழாயில்தான் அருந்ததியின மக்கள் குடிநீர் பிடித்து வந்தார்கள்.ஆதிக்க ஜாதியினர் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்தும் மேலும் தங்கள் தண்ணீர் தேவைக்காக சுடுகாட்டு பகுதில் அருந்ததியின மக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த குழாய்க்கும் தண்ணீர் பிடிக்க ஆதிக்க ஜாதியினர் வந்துள்ளனர். இந்நிலையில் தண்ணீர் பிடிப்பதில் இரண்டு சமூகத்திற்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. காவல்துறை தலையிட்டு இரண்டு சமூகத்தினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு சமூகத்தினரும் ஒரே நேரத்தில் தண்ணீர் பிடிக்க வேண்டாம் என கூறி இரு சமூகத்தினருக்கும் தனித்தனியாக தண்ணீர் பிடிக்க நேரம் ஒதுக்கி உள்ளனர்.
அதன்படி அருந்ததியின மக்களுக்கு பிற்பகல் 2.00 முதல் 4.00 மணி வரையும்,ஆதிக்க நாயக்க சாதியினர் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 30.03.2017 அன்று அருந்ததியின மக்கள் ஒரு விசேச நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட காரணத்தால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரமான மதியம் 2.00 முதல் 4.00 மணிக்கு அவர்களால் தண்ணீர் பிடிக்க வர இயலவில்லை. அதனால் அவர்கள் ஆதிக்க ஜாதியினர் பிடிக்கும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் முடிந்த பின் 6.15 மணிக்கு தண்ணீர் பிடிக்க வந்துள்ளனர்.அப்போது ஆதிக்க ஜாதியினர் அருந்ததியின பெண்களை தண்ணீர் பிடிக்கவிடாமல் தடுத்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அருந்ததியின மக்கள் தாங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வர இயலாத காரணத்தை கூறியும்,மேலும் நாயக்கர் ஜாதியினருக்கு ஒதுக்கிய நேரத்திற்கு வராமல் அந்நேரம் முடிந்த பின் வந்ததையும்,தங்களுக்கான தண்ணீரைத்தான் தொட்டியில் இருந்து பிடிக்க வந்ததைக் கூறியும் ஏற்க மறுத்த ஆதிக்க ஜாதியினர் தண்ணீர் பிடிக்கச்சென்ற அருந்ததியின பெண்களை ஆபாசமாக பேசியும்,கொலை மிரட்டல் விடுத்தும் ஜாதியைச்சொல்லி இழிவுபடுத்தியும் விரட்டியடித்துள்ளனர்.
இதனை கேள்விப்பட்ட அருந்ததியின இளைஞர்கள் 5 பேர் அங்கு சென்று ஆதிக்க ஜாதியினரிடம் தங்கள் பெண்களை இழிவாக பேசியதை கேள்வி கேட்டதையடுத்து அவர்கள் மீது 30 பேர் கொண்ட ஆதிக்க ஜாதி கும்பல் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர் . அப்போது தலித் பெண்கள் இத்தாக்குதலை தடுக்க முற்பட்ட போது அந்த பெண்களின் சேலையை பிடித்து இழுத்து உருவி அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்களையும் தாக்கவும் செய்துள்ளது அந்த ஜாதிவெறி கும்பல். தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக கூறி தங்கள் குடியிருப்பு பகுதிக்கு திரும்பிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்கசாதியினர் பெருமளவில் திரண்டு இரவு அருந்ததியினர் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.பெண்கள,குழந்தைகள் என கண்மூடித்தனமாக ஜாதிவெறித் தாக்குதல் நடத்திய ஆதிக்க ஜாதியினர் 3 வீடுகளுக்கு தீவைத்தும் எரித்துள்ளனர். மேலும் வீடுகளை சேதப்படுத்தியும்,வீட்டினுள் புகுந்து உடைமைகளை சூறையாடியும் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளனர்.
இத்தாக்குதல் நடத்தப்பட்டவிதம் தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் ஆதிக்க ஜாதியினர் நடத்திய தாக்குதல் பாணியை நினைவூட்டுகிறது.ஆதிக்கஜாதியினர் அனைவரும் தலித் மக்களின் மீதான தாகுத்தலில் ஒரே நேர் கோட்டில் தான் இயங்குகிறார்கள்.
இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த தலித் மக்கள் மதுரை, திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
முதலில் தண்ணீர் பிடிக்க ஜாதி அடிப்படையில் நேரம் ஒதுக்கிய காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்து செயல் சட்ட விரோதமானது.
அப்படியே இருப்பின் தலித் மக்கள் தண்ணீர் பிடித்த குழாயில் அதுவும் சுடுகாட்டு பகுதியில் உள்ள குழாயில் மட்டும்தான் நேர ஒதுக்கீடு என்பது அப்பட்டமான ஜாதிவெறிக்கு ஆதரவான செயல் மட்டுமின்றி தலித் மக்களை வஞ்சிக்கும் செயலும் ஆகும். ஆதிக்க ஜாதியினர் பகுதியில் உள்ள குழாய்களில் தலித் மக்கள் குடிநீர் எடுக்கவோ,நேர ஒதுக்கீடோ எப்போதும் இல்லை. காவல்துறையே இப்படி ஜாதிய பாகுபாடு செய்திருப்பது மிகப்பெரிய குற்றம்.
அனைவருக்கும் சம உரிமை என இந்திய அரசியல் சட்ட சாசனம் உறுதியளிக்கையில் எந்நேரமும் எங்கும் யாரும் தண்ணீர் பிடிப்பதை உறுதி செய்வதுதான் சமஉரிமை ஆகும்.. அவ்வகையில் அருந்ததியின மக்கள் எங்கும் சென்று தண்ணீர் பிடிக்கும் உரிமையை அரசு நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும். அதுதான் அரசியல் சட்டத்தை நிறைவேற்றும் வேலை. தலித்துகள் மீது தாக்குதல் அபாயம் இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுதான் காவல்துறையின் வேலை. சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் கடமை. அதனை விடுத்து ஜாதி வெறியர்களுக்கு துணை போவதல்ல.
எனவே, பாதிக்கப்பட்ட தொட்டியப் பட்டி கிராம அருந்ததியின மக்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும்.!
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.!
அக்கிராமத்தில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களிலும் குடிநீர் பிடிக்கும் உரிமையை அரசு நிர்வாகமும்,காவல்துறையும் உறுதி செய்யவேண்டும்.!
இத்தாக்குதலை கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனை பெறும் வகையில் வழக்கை நடத்தவேண்டும் என வலியுறுத்தியும் தோழமை இயக்கங்களை ஒருங்கிணைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும்.
இப்போது இச்சம்பவம் குறித்து வன்னியப்பட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிகிறோம்.
தமிழ் நாட்டில் பதிவு செய்யப்படும் வன்கொடுமை சட்டத்தின் கீழான வழக்குகள் வெறும் வழக்குகளாக மட்டுமே பதிவு செய்யப்படுவதோடு தண்டனைகள் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்க விழுக்காட்டு அளவில்கூட இல்லை என்பது புள்ளிவிவர அடிப்படையில் பதிவாகியுள்ளது.
2011 லிருந்து 2016 வரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 1934 இதில் தண்டிக்கப்பட்டவை வெறும் 108 மட்டுமே. 94 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் இவ்வழக்கை நடத்தும் காவல்துறையினரே ஆவார்கள்.. ஆகவே வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதாது; குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வகையில் வழக்குகளை நடத்தவும் வேண்டும்.
புரட்சியாளர் அம்பேத்கர் காலம் தொட்டு வாழ்வின் உயிர்த்தேவையான தண்ணீருக்கே பெரும் போராட்டம் நடத்தவேண்டிய கொடுமையான சூழலில் தலித் மக்கள் இருக்கும் அவல நிலை இன்றுவரை நீடிப்பது ஒட்டு மொத்த சமூகத்திற்கும், அரசியல் சட்டத்துக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் அவமானகரமான செயலாகும்.
எந்த செளதார் குளத்தில் நீர் எடுக்க தலித்துகளுக்கு அனுமதியில்லை என மறுக்கப்பட்டதோ அந்த குளத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நீர் அள்ளியதைப்போல தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படும் தொட்டயம் பட்டி ஆதிக்க ஜாதியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் தலித் மக்கள் திரண்டு சென்று நீர் எடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் உடனடியாக தயாராக வேண்டும்.
தலித் மக்கள் தங்கள் குநீர் தேவைக்கென தனிக்கிணறு தோண்டுவதும் ஒன்றுதான்,குடிநீர் குழாயில் தனி நேரத்திற்கு ஒத்துக்கொள்வதும் ஒன்றுதான்.
இது போன்றதொரு பிரச்சனையில் 1926 ஆம் ஆண்டு சிராவயலில் ஆதிதிராவிடர்கள் தங்களுக்கென்று தனிக்கிணறு அமைத்துக்கொண்டு அதனை திறக்க தந்தை பெரியாரை அழைத்த போது பெரியார் ஆற்றிய வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
‘பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’