பெரியார் மறைவு – தலைவர்கள் இரங்கல் தொகுப்பு

பெரியார் இறந்த போது பல தலைவர்களும் பத்திரிக்கைகளும் வெளியிட்ட இரங்கல் செய்தியை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென்மொழி இதழில் சுருக்கமாக தொகுத்து வெளியிட்டார். கடைசியில் அவர் ஆசிரியர் குறிப்பாக எழுதியது முக்கியமான ஒன்று.

பெரியார் மறைவுக்குப் பின்னர் அவரைப் பற்றிய பலரின் கருத்துரை
* கவர்ச்சி மிக்கத் தலைவர். எப்பொழுதுமே போராடியவர் – குடியரசுத் தலைவர் வி.வி.கிரி.

* ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர் – தலைமை அமைச்சர், இந்திராகாந்தி

* நாடு மாபெரும் புரட்சியாளரை இழந்து விட்டது. வாழ்க்கை முழுவதும் இந்து குமுகாயத்தில் புரட்சியான மாறுதலை உண்டாக்கியவர் பெரியார் – நடுவணரசு அமைச்சர். செகசீவன்ராம்.

* இடைவிடாமல் சாதிக் கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராடிய வீரர் – நடுவணரசு அமைச்சர். சி.சுப்பிரமணியம்

*ஈ.வெ.இரா. ஆர்வமிக்க குமுகாயச் சீர்திருத்தக்காரர் – தமிழக ஆளுநர். கே.கே.சா.

*குமுகாயச் சமநிலைக்காக அரும்பாடுபட்ட பெரியாரைத் தமிழகம் என்றும் மறக்காது – புதுவை ஆளுநர். சேத்திலால்

* மிகச் சிறந்த குமுகாயப் புரட்சி வீரர்களில் ஒருவரை உலகம் இழந்துவிட்டது – பீகார் ஆளுநர் ஆர்.டி.பண்டாரி.

* பெரியாருடைய வாழ்க்கை உழைக்கின்ற எண்ணங் கொண்டோருக்கு ஊக்கந் தருகின்ர மாமருந்து – தமிழக முதல்வர் மு.கருணாநிதி

* எண்ணற்ற இளந் தலைவர்களை உருவாக்கியும், புதியதொரு விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தும், சாதியின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளான குமுகாயத்திற்குப் புதுவாழ்வு தந்தவர் பெர்ரியார் என்ற தனி மாந்தரே – புதுவை முதல்வர். பாரூக்

* சாதிக் கொடுமைகளையும், குமுகாயக் குறைபாடுகளையும் எதிர்த்து முடுக்கமாக போராடிய வீரர் – கேரள முதல்வர் அச்சுதானந்தன்

* அவர்தாம் உண்மையான சீர்திருத்தக்காரர். சாதிமத வேறுபாடற்ற மக்கட் பிரிவற்ற ஒரு மக்களின் அமைப்பை ஏற்படுத்த அயராது பாடுபட்டுழைத்த அஞ்சா நெஞ்சம் படைத்த ஒரு பெரியார் -கருநாடக முதல்வர் தேவராசு அர்சு.

*பெரியார் தம் கொள்கைக்காக மிகுந்த ஈடுபாட்டுடனும் துணிவுடனும் ஈடு இணையற்ற அறிவு நுட்பத்துடன் பாடுபட்டார் – ஆந்திர முதல்வர் வெங்கல்ராவ்

* மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடிய ஒருவரை இழந்து விட்டோம் – மகாராட்டிர முதல்வர் வி.பி, நாயக்கு

*தமது வாழ்நாள் முழுவதும் குமுகாயக்கொடுமைகளை எதிர்த்துப் போராடியவர் – அரியானா முதல்வர்.பன்சிலால்

* ஒரு மாபெரும் இந்தியரை நாடு இழந்து விட்டது – மேற்கு வங்க முதல்வர். சித்தார்த்த சங்கர் ரே

* தமிழ்க் குமுகாயம் மேம்பாடடைய அயராது உழைத்த மாபெருந் தலைவர் – பஞ்சாப் முதல்வர் செயில் சிங்

*பொதுத் தொண்டுக்கு வருபவர்களுக்குச் சரியான ஓர் எடுத்துக்காட்டு அவர் – அமைச்சர் இரா. நெடுஞ்செழியன்.

* ஒரு தலைசிறந்த கருத்தாளரையும், சாதியுணர்ச்சியை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்ட ஒரு வீரரையும் நாடு இழந்து விட்டது – வெங்காலூர் மாநகராட்சித் தலைவர்

* நமது நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் குமுகாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் அவர் பங்கு மிகப் பெரியது – கு.காமராசர்

* ஒரு தலைசிறந்த குமுகாயச் சீர்திருத்தக்காரரை நாடு இழந்து விட்டது – சங்கர் தயாள் சர்மா

* குமுகாய அடிமைத்தனத்திற்கு எதிரான பேருருவத்தை நாம் இழந்தோம். பழமையின் கொடுமை, அடக்கப்பட்ட மக்களின் இழிவு, மூட நம்பிக்கைகள், மக்களை நிலையான அடிமைகளான வைத்திருக்கும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை எதிர்த்து குமுகாயச் சமன்பாட்டிற்காக அவர் நடத்திஅ அகன்ற போரின் தன்மை, நம் நாட்டின் வரலாற்றில் புகழ்மிக்க பசுமையான பகுதியாக என்றும் திகழும். தமிழக அளவில் மட்டுமின்றி அனைத்து இந்தியாவிலும் ஒப்பிட்டுக் காட்ட முடியாத தனித்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த தலைவர் அவர் – பி.இராமமூர்த்தி

*தமிழக வரலாற்றில் அவர் பதித்துள்ள பாதச் சுவடுகள் என்றும் அழியா. தமிழக வரலாற்றில் இந்த நூற்றாண்டின் தலைவான உறுப்பான்மை அவருடையது. அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். -மணலி கந்தசாமி

* உலகில் தோன்றிய குமுகாயச் சீர்திருத்தப் புரட்சியாளர்களில் தலைசிறந்தவர் இவர். – ம.பொ.சிவஞானம்

* பகுத்தறிவு இயக்கத்தின் மாபெரும் ஆற்றலை நாடு இழந்து விட்டது -பசவலிங்கப்பா

* தொடங்கத்தில் அவர் தேசியத்தையும், தெய்வத்தையும் போற்றுபவராக இருந்து, ஆள்பவர்கள் அவற்றைப் பயன்படுத்திச் செய்த தீமைகளைத் தாளாமல் வெளியேறி மக்கள் ஆற்றலைமுன் வைத்து, மாந்த இனம் மேம்படுவதற்காகக் காலமெல்லாம் கண் துஞ்சாமல் பாடுபட்டவர் – சத்திமோகன் – பார்வர்டு பிளாக் தலைவர்

* அவர் ஒரு நிறுவனம் – தமிழக மேனாள் முதல்வர் பக்தவத்சலம்

* பொதுவாழ்வில் மிகவும் முடுக்கமாகப் பணியாற்றியவர் – கருநாடக மேனாள் முதல்வர் வீரேந்திர பாட்டீல்

* அவர் துணிவுமிக்க கருத்தாளர். சிறந்த பேச்சாளர். அஞ்சாத போராட்ட வீரர். தன்மான இயக்கத்தை முழு மூச்சாக பரப்பியவர் – பி.டி.இராசன்

* தமிழகத்தில் அவருடைய முத்திரை பதியாத துறையே இல்லை எனலாம். கலக்கமில்லாத கருத்துப் பிடிப்பும், கடுமையான உழைப்பும் அவருக்கே உரிய குணங்கள் – குன்றக்குடி அடிகளார்

*மக்கள் மேம்பாட்டிற்கு உழைத்த மாவீரர். இந்துக்களில் தாழ்த்தப்பட்டவர். ஒடுக்கப்பட்டவர் என்ற நிலையில் இருந்த மக்களுக்காக அயராது உழைத்து அவர்களுக்குக் குமுகாயத்தில் உயரிய மதிப்பை ஏற்படுத்தியவர் – செயப்பிரகாசு நாராயணன்

* இந்திய மக்களைத் தட்டியெழுப்பிய அவர் இறுதி நேரம்வரை போராடினார் – கோரா

* தாழ்த்தப்பட்ட குமுகாயத்தின் வளர்ச்சிக்காகக் காலமெல்லாம் அரும்பாடு பட்டுச் சலியாமல் உழைத்தவர் பெரியார் – வி.இராமையா

*மூடப் பழக்க வழக்கங்களையும், சாதி வேறுபாடுகளையும் கடைசி மூச்சு இருக்கும் வரை எதிர்த்துப் போராடியவர் – மன்றாடியார்

*தாழ்த்தப்பட்டமக்கள் விழிப்புணர்ச்சி பெற அவர் பாடுபட்டார் – பி.கக்கன்

* பெரியாரின் மறைவு நாட்டின் பொதுவாழ்விற்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். குமுகாயத்தில் நசுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவில் இருக்கும் – பி.இராமச்சந்திரன் – பழைய பேராயத் தலைவர்

* அவர் ஆற்றியுள்ள குமுகாயப் பணியினை அரசியல் தெளிவோடு, குமுகாயக் கடமை உணர்வோடு, அரசியல் ஊதியத்திற்கு இடமின்று துடிப்புள்ள இளைஞர்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டும் – மணிவர்மா

*பெரியார் அவர்களது மறைவின் மூலம் இந்நாடு மிகச் சிறந்த குமுகாயச் சீர்திருத்தத் தலைவர் ஒருவரை இழந்து விட்டது. குமுக நேர்மையின்மையை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் ஒருவரைச் சாவு நம்மிடமிருந்து பிரித்து விட்டது. -இராம் சேவக் யாதவ்

* ஐயா அவர்களின் மறைவால் பேரிருள் சூழ்ந்துள்ளது – அறிவழகன்

* இரண்டாயிரம் ஆண்டுக்களுக்கு முன் இருந்து இந்து சமயம் மிகவும் இழிவான நிலையை அடைந்து வந்த நேரத்தில் பெரியார் வந்தார். தாங்கள் தனி வாழ்க்கையில் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற உணர்ச்சியை இறை நம்பிக்கையாளர்களுக்குக் கொடுத்தவர் பெரியார்தாம். எனவே பெரியாரின் இழப்பு இண்ட்னு சமயத்திற்கும் மாபெரும் இழப்பாகும் – கே.எம். சுப்பிரமணியம்

* மூடப் பழக்கம் சாதிமத வேறுபாடு ஆகியவற்றை ஒழிக்க அரும்பாடுபட்டவர் பெரியார் – கே.ஆர்.நல்லசிவம்

* அரசியல் பதவி ஆசைகளுக்குத் துளியும் ஆளாகாமல் குமுக இழிவு நீக்க முழுக்க முழுக்கப் பாடுபட்ட தனிப் பெருந்தலைவர் – ஈ.வெ.கி. சம்பத்

* கடைசி மூச்சு காற்றிலே கலக்கும் வரை தமிழ்க் குமுகாயத்துக்கு உழைத்துக் கொண்டிருந்தவர் -எம்.சி.இராமச்சந்திரன்

* இன்று தமிழர்கள் நெஞ்சு நிமிர்த்தி வீறுநடை போடுவதற்கு இவர்தாம் காரணம் -சிவாசிகணேசன்

* தமிழ் மக்களின் வாழ்வு உயரவும் வளம் பெறவும் நமது வாழ்நாளை ஈகம் செய்து கொண்ட பெரியார் அவர்களின் எண்ணம் ஈடேறும் வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோமாக – கண்ணதாசன்

* தமிழக உழைக்கும் மக்களை எண்ணத் தூண்டியமுதல் தலைவர் பெரியார் – குசேலர்

* அவர் ஒரு புதுவகை முன்னறிவிப்பாளர். தென்கிழக்கு ஆசியாவின் சாக்கிரடீசு. சீர்திருத்தத் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற குமுகாயப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் முதல் எதிரி – அனைத்து நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் (unesco)

*தம் மனத்திற்குப் பிடித்த கொள்கைக்காக அவர் கடமையுணர்வுடன் அயராது உழைத்து வந்தது பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியதாகும்- தமிழ்நாட்டு சன சங்கம்

* எந்த வகையில் பார்த்தாலும், எந்த கோணத்திலிருந்து ஆராய்ந்து பார்த்தாலும் பெரியார் பெரியார்தான். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, குமுகாயத்தின் நல்வாழ்வுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், இடைவிடாது பாடுபட்ட தனிப்பெருந் தமிழர் அவர். தமிழ் இனத்தின் தலைக்குனிவுக்கான காரணங்களைக் கண்டுபிடித்து அதைப் போக்குவதற்கான தீர்வுகளை உறுதியுடனும், உள்ளத் தெளிவுடனும் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தி வந்தார் அவர். குமுகாயத்தில் நிலவும் சாதி வேற்றுமைகளைக் கண்டு உள்ளங் குமுறி எரிமலையாக அனல் கக்கியவர். மாந்தனை மாந்தன் அடிமைப்படுத்துவதற்கும் இழிவுபடுத்துவதற்கும் கடவுள் நம்பிக்கைதான் காரணமாக இருக்கிறது என்ற முடிவு செய்து, அதை வேரறுக்க, கருத்துப் பரப்புதலைத் தம் போர்க் கருவியாக ஆக்கிக் கொண்டவர். தம் பேச்சாலும் எழுத்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தன்மான உணர்ச்சியை ஊட்டித் தலைநிமிர்ந்து நடக்கச் செய்த சீர்திருத்த அரிமா அவர். அமைதியான முறையில் வியக்கத் தக்க குமுகாயப் புரட்சிக்கு வித்திட்ட மக்களரசுக் கொள்கையினர் அவர். பேச்சில் அனல் தெரித்தாலும், வன்முறைக் குரல் கேட்டாலும் அவர் என்றும்மே வன்முறையாளராக இருந்ததில்லை, எழுச்சியுற்றுப் பீடுநடை போட்டது என்று வரலாற்றாசிரியர்கள் பெரியாரை பற்றி பெருமையுடன் எழுதத்தான் போகிறார்கள்.
உள்ளத்திலிருப்பதைக் கள்ளங் கபடமற்ற குழந்தையைப் போல்பேசியதால், அவர் பேச்சில் மழலை மிளர்ந்தது. பிறச் பேசத் தயங்கியதை அவர் பச்சையாகக் கூறியதால் அம்மொழி கொச்சையாகவும் இருந்தது. பெரியாரின் மேடைப் பேச்சுக்கு இணையாக வேறொருவர்பேச்சைக் கூறமுடியாது. அதிலும் தனி வழி வகுத்தவர் அவர். அந்தப் பேச்சு தாக்கப்பட்டவர்களைப் புண்படுத்தியதைவிட மிகுதியாக எண்ணத் தூண்டியது. எல்லாவற்ற்குக்கும் மேலாக பெரியார் மாந்தப் பண்புகள் நிறைந்த ஓர் உயர்ந்த மாந்தர். நல்லுள்ளமும் நகைச்சுவையும் நல்லொழுக்கங்களும் நிறைந்த ஒரு நிறை மாந்தர்.
அரசியலோடு தொடர்பு கொண்டிருந்தாலும் உள்ளத்தில் ஒன்று வைத்து உதட்டில் வேறொன்று பேசியறியாதவர். மனத்தூய்மையுடன் கைத் தூய்மையும் மிக்கவர். பதவிகளுக்கு ஆசைப்படாதவர். அரசியல்சட்ட திட்டங்களைத் துரும்பென மதித்தாலும் ஆட்சியிலுள்ளவர்களுக்கும் மதிப்பும் பணிவும் காட்ட என்றுமே அவர் தவறியதில்லை,
பழைமைக் கொள்கையாளர்களுக்கும், புரையோடி விட்ட பழக்கவழக்கங்களுக்க்கும், சாதிவெறியர்களுக்கும், அரசியல் கவடர்களுக்கும் அரிமாக் கனவாக வாழ்ந்த பெரியார். தமது பேரியக்கத்தைப் பொறுப்புணர்ச்சியோடும், நாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்காத வகையிலும் நடத்தி வந்ததை யாரும் மறுக்க முடியாது. குமுகாயத்தின் இழிவுகளைப் போக்க, அவர் கையாண்ட வழிமுறைகள் எல்லாராலும் ஒப்பக் கொள்ளமுடியாமல் இருப்பினும் அவர் சுட்டிக் காட்டிய இலக்கும், ஏற்றி வைத்த அறிவுச் சுடரும் படைத்துத் தந்த மறுமலர்ச்சியும் தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வழிகாட்டிகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
-ஆனந்தவிகடன்

* அவரது உண்மையுணர்வை எவரும் எப்போதும் ஐயுற்றதில்லை. அவர்தம் சீர்திருத்த பணிகளின் மூலம் குமுகாயத்தில் ஒரு புதிய விழிப்பு ஏற்பட்டு, நல்ல பல திருப்பங்கள் தோன்றின என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்வர். பெரியார் ஓர் எரிமலையாக வாழ்ந்தவர். தனிநாட்டு கேட்பது போன்ற சில சமயங்களில் சீறு வெடிப்பார். ஆனால் பெரும்பாலும் தமது நம்பிக்கைகளைப் பரப்பும் பணிகளிலேயே அமைதியாகக் கழித்தார் – தினமணி

* He was a staunch critic of the catse system and dovated his considerable abilities to the mission od eradicating it. force of circumstances led him from this base of demond like secession of tamil nadu. but this was never practical once the DMK most of whose leaders were once his followers, disowned it -The indian express

* To achieve his goal, whatever he did was sincere, devoted as the was to the cause which he responsed. he was fighted a compaiger of high calilse and prolific writer – The mail

*தமிழகத்தின் மாமலை- அவர் தமிழ வரலாற்றில் தன்ச் சிறப்புடைய இடத்தைப் பெறுவார் என்பதில் யாருக்கும் கருத்தூ வேற்றுமை இருப்பதற்கில்லை – சுதேசமித்திரன்

*குமுகாயப் பணி நடத்திய வரலாற்று நாயகன். பழைய கொள்கைகளின் சாக்குருவி. வேத புராணங்களைச் சடசடவென முறித்துப் போட்ட கொள்கைப் புயல் – முரசொலி

* பதவிகளுக்காகப் பாதையை மாற்றாமல், எதிர்ப்புகளுக்கு அஞ்சிக்கொள்கையை கைகழுவாமல் இறுதிவரை வாழ்ந்த கொள்கைச் சுடர் – அலை ஓசை

*உண்மைத் தமிழர்களுக்கெல்லாம் பெரியார் வீட்டுத் தலைவர். தமிழன் நேர்மைக்குப் பகையாக எந்தத் துறையில் கேடடைந்தாலும்,அவர் பெரியாரை நினைக்காமல் இருக்க மாட்டான் – தமிழ் முரசு

* தமிழகத்தின் தனிப்பெருந்தலைவர். நான்கு கோடித் தமிழர்களின் நாயகன் – நவமணி

* மலைகுலைந்தாலும் நிலைகுலையாத மனத் திண்மையுடன் பகுத்தறிவுக் கொவ்வாத பழக்க வழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் சாடினார். தன்னலம் என்பது சிறிதளவும் இல்லாமல் தகர்த்தெறிவதில் ஈடுபட்டார் – நவசக்தி

*பெரியார் அவர்களின் அரை நூற்றாண்டுக்கும் மேலான குமுகாயப் பணியை, இந்தியாவில், ஏன் உலகத்தில் வேறு எந்தத் தலைவரும் செய்ததில்லை. பெரியாருடைய கருத்தை யொத்தவர்கள், வேறு யாராவது எந்த மாநிலத்திலாவது அல்லது எந்த நாட்டிலாவது இருந்தால்கூட என்றாவது ஒருநாள் அவர்களுடைய கருத்தை வெளியிட்டார்கள் என்று இருக்குமே தவிர, அல்லது ஏதோ பல வரிகளை எழுதினார்கள் என்றுதான் பார்க்கமுடியுமே தவிர பெரியாரைப்போல் தமிழகத்தின் காடுமேடு,சந்துபொந்து, மூலை முடுக்குகளிலெல்லாம் இடையறாது சுற்றிச் சுற்றிப் பம்பரம் போலப் பகுத்தறிவுப் பரப்பல் பொதுக் கூட்டங்களில் பேசியவரும் இருக்க முடியாது – நாத்திகம்

* தமிழர் மாமலை! தன்மான இயக்கத்தின் தனிப்பெருஞ்சுடர். பகுத்தறிவு விழிதிறந்த பகலவன். பெரியாரைப் பிரித்துவிட்டால் தமிழகத்தில் புரட்சி வரலாறு வெளிவர முடியாது – புரட்சி மலர்

* அவர் எல்லாக் காலமும் இராமனையே(பழிப்பதாக) நினைத்து வந்ததாலோ என்னவோ உயர்திரு ஈ.வே.இரா அவர்கள் இராம பக்த அனுமானின் திருநாளன்று அமரராகி இருக்கிறார். இது இறைவனின் அருட் செயலன்றி வேறாக இருக்க முடியாது. அவருக்குக் கோயில்களிலும் தெய்வங்களிடமும் நம்பிக்கை இல்லை என்று அவரே சொல்லிக் கொண்ட போதிலும் ஈரோட்டில் அவருடைய குடும்ப ஆளுமையில் இருந்து வரும் கோயில் மிகவும் செம்மையாகவும், ஒழுங்காகவும் காக்கப்பட்டு வருகிறது. அவருடைய முடுக்கமான நாத்திகப் பரப்புதல், பலரை முடுக்கமான ஆத்திர்களாக மாற்றவும், தூண்டுதலாயிருந்திருக்கின்றது. – கல்கி

* சாதி, மதம், தீண்டாமை, சாத்திரம், கோத்திரம் என்பவை எல்லாம் மாந்த வாழ்விற்கு பெரும் முட்டுக் கட்டைகள் இவற்றைத் தகர்த்தெறிய வேண்டும் என்று தமிழ்நாட்டில் முதல் முதலாக நினைத்தவர் ஈரோடு ஈன்ற இளம் அரிமா ஈ வே இராமசாமிப் பெரியார் ஒருவர்தாம். காந்தியடிகளைக்கூட இவருக்கு பின்னர்தான் வைக்க வேண்டும் – மூலிகை மணி

* ஊருக்குத் தகுந்தாற்போல், மேடைக்குத் தகுந்தாற்போல் வந்திருக்கும் கூட்டத்திற்கு தகுந்தாற்போல் தங்கள் பேச்சுகளைச் சிறிதும் வெட்கம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் பேச்சாளர்கள் நிறைந்த நம் நாட்டில் எங்கு பேசினாலும், சரி எவர் வந்தாலும் சரி, தமது கருத்தை மண்டையிலடித்தாற்போல் கூறும் துணிவு கொண்டிருந்தவர் திரு ஈ.வே.இரா. -துக்ளக்

(இவற்றுள் hindu நாளிதழ் ஒன்றுதான் தன்னை முழுக்க முழுக ஆரியர் சார்பினதாகக் காட்டி கொண்டு பெரியாரைப் பற்றி ஒரு சொல்லாலும் புகழ்ந்துரைக்க மனங்கொளாத தன்மையை உண்மைத் தமிழர்கள் நீங்காத நினைவில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும் -ஆசிரியர்)
தென்மொழி, சுவடி-11, ஓலை4-5, 1974

You may also like...