தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்

தாழ்த்தப்பட்ட பெண்கள் இரவிக்கை அணிவதையே பெரியார் எதிர்த்ததாக உண்மைக்கு மாறான ஒரு செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.  பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்த செய்தியை பரப்பியபோது, அதை மறுத்து பெரியார் ஆற்றிய உரை ‘விடுதலை’ 15.12.1968 இல் இடம் பெற்றுள்ளது. உரை விவரம்:

இன்றைய தினம் பெருமை மிக்க மேயர் (வேலூர் நாராயணன்) அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டேன். சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72-75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தீன் ரீ-ஆக்ஷன் தான் அது வேறொன்றுமில்லை. உங்களுக்கு வயது அதிக மானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். வேறொன்றுமில்லை என்று சொல்லி ஒரு ஊசியைப் போட்டு என்னை இரண்டு நாள்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். சாயந்திரம் பேச வேண்டுமே என்று சொன்னேன். நல்லா பேசுங்க என்று சொன்னார். அதன் பின் தான் கூட்டத்திற்கு வர முடிந்தது.

நான் கூட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது எனக்கு போன் வந்தது. போனில் பேசியவர்கள் நம்முடைய  மாண்புமிகு அமைச்சர், அம்மையாரவர் களை (திருமதி சத்தியவாணி முத்து) மேயரவர்கள் சாதியைக் குறித்துக் கேவலமாகப் பேசியதாக குறிப்பிட்டார்கள். அதற்கு நான் அவர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன். அவர் படித்தவர், பெரிய பதவி வகிப்பவர், சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் அப்படிப்பட்ட வார்த்தையை உபயோகித்திருக்க மாட்டார். அப்படி அவர் சொல்லியிருந்தால் நானே கண்டிக்கின்றேன். மன்னிப்பு கேட்கச் செய்கின்றேன் என்று சொன்னேன்.  மேயரவர்களைக் கேட்டதற்கு நான் சொல்லவில்லை என்று சொன்னார்.

சாதி சம்பந்தமான காரியங்களில் நான் ரொம்ப முயற்சி எடுப்பவன். அதற்காகவே வாழ்வதாகக் கருதுபவன். பறையன் – சக்கிலி – வண்ணான் – பரியாரி என்பது அவமானமல்ல. தொழிலின் காரணமாக வந்தது. பார்ப்பனர் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்ளவும் நம்மை இழிசொல்லாக்கி விட்டான். ஆனால், நம் எல்லோரையும் சேர்த்து பார்ப்பான்  தேவடியாள் மகன் என்று சொல்கின்றான். சொல்வது மட்டுமல்ல, சாஸ்திரத்திலும் அப்படியே எழுதி இருக்கின்றான். சட்டத்திலே (இந்தியாவிலே) தாசி புத்திரன் என்றே இருக்கிறது. அனுபவத்திலு மிருக்கிறது என்று சொன்னால் கோயிலுக்குப் போகிறவன் அத்தனை பேரும் தேவடியாள் மகன் தானே! இது அண்ணாதுரைக்கும் தான், ‘ராஜா சர்’ருக்கும் தான். வேறு பார்ப்பனரல்லாத எல்லோருக்கும் தான்.

பறையன் என்று சொல்லக் கூடாது என்று தான் சொன்னார்களே தவிர, தண்ணீருக்கு எப்படி ஜலம் என்று சொல்கின்றானோ அதுபோல பார்ப்பான் காந்தியாரைப் பிடித்து பறையன் என்கிறதை நிலை நிறுத்துவதற்காக அரிஜன் என்று சொல்லி இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

பறையன் என்று சொல்லக் கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குக் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரூ.55,000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன். நான் அதை இதற்காக  செலவிடாமல் அப்படியே வைத்து விட்டேன். மற்ற மாகாணக்காரர்கள் எல்லாம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக் கேணி, கோயில், பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன். நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து  கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில், பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். நம் மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும் என்று எழுதினேன். அதற்கு  அவர் அதுபோல செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.

“நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ் களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்ட சிலர் என்னிடம் வந்து நீ எப்படி சொல்லலாம் என்று கேட்டார்கள். நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது, போட்டால் துணியே போடக் கூடாது. அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது? இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடிய வில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய் வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும்” என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.

இன்று காலை ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அய்க்கோர்ட் ஜட்ஜ் கைலாசக் கவுண்டரின் மகளுக்கும் ராஜா சர் முத்தய்யா செட்டியாரின் தங்கை மகனுக்கும் (ப. சிதம்பரம்) நடைபெற்ற திருமணம். இதைக் கலப்புத் திருமணம் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை எது கலப்புத் திருமணம் என்றால் மனித ஜாதிக்கும் மிருகத்திற்கும் நடப்பதே கலப்புத் திருமணமாகும்.

ஒரே ஜாதி மனித ஜாதி என்பது மாத்திரமல்லாமல் மணமக்கள் இருவருமே சூத்திர ஜாதி நாலாஞ் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதோடு நாலாம் சாதி நடுத்தர சாதியாக இருப்பதைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படாத சாதியைச் சார்ந்தவர்களாவார்கள். நான் தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கும் பார்ப்பானுக் கும், பார்ப்பனத்திற்கும் தாழ்த்தப்பட்ட ஆணுக்கும் இன்னும் இது போன்று பல சாதி கலப்புள்ள நூற்றுக்கணக்கான திருமணங்களைச் செய்து வைத்திருக்கின்றேன்.

ஜாதி என்பது ஒன்றுதான். இரண்டு பேர்களும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி பிள்ளைகள்தான். ஜாதியைக் காப்பாற்றத் தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் இராஜாஜிகூட தன் மகளைச் சூத்திரரான காந்தியின் மகனுக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றார். காங்கிரசினால் காமராஜரும் அவருடைய கம்பெனியும் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் இராஜாஜியின் சீடர்கள்தான். இராஜாஜி  அவர்கள் நம்மோடு தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடுவார். தன்னுடைய மகளைச் சூத்திரனான காந்தியின் மகனுக்குக் கொடுத்திருக்கிறார் என்றாலும் பிள்ளைகளை (பேரன்களை)யெல்லாம் பூணூல் மாட்டிப் பார்ப்பானாக்கி விட்டார்.

தேவதாசி வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை ஜாதியைக் காப்பதற்கென்றே பத்திரிகை நடத்துகின்ற ‘கல்கி’ பத்திரிகையின் அதிபர் சதாசிவம் என்ற பார்ப்பனர் திருமணம் செய்து கொண்டார். அவருக்குத்தான் இராஜாஜி முன்னோடும் பிள்ளையாக இருக்கிறார்.

இப்படி ஏராளமான பெரிய இடம் என்று சொல்லும்படியான இடங்களிலெல்லாம் நடை பெற்று இருக்கிறது. நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பிலேயே மாறுபட்ட ஜாதியைச் சார்ந்த பலரைத் திருமணம் செய்து வைத்திருக்கின்றேன். அதற்கெல் லாம் இராஜா சர் (முத்தையா செட்டியார்) வந்து பாராட்டியிருக்கின்றார். இராஜா சர் எனக்கு ரொம்பவும் வேண்டியவர். நான் செய்கின்ற காரியங்களை எல்லாம் பாராட்டுபவர். எனது மதிப்பிற்குரியவர். பணத்தில் மட்டுமல்ல, உண்மையிலேயே பெருந்தன்மை வாய்ந்த பெரியவர். அவர் அந்த சமுதாயத்தையே திருத்த வேண்டிய வராவார். அவர் இத்திருமணத்திற்கு வராததன் மூலம் தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பையே இழந்து விட்டார் என்று தான் சொல்லுவேன்.

பார்ப்பானைத் தவிர ஜாதியைப் பற்றி பேசுகின்றவன் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனேயாவான். என்னைப் பொருத்த வரை நான் பறையனாக இருப்பதை கேவலமாக கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைவிட பறையனாக இருப்பதை பெருமையாகக் கருதுகின்றேன். எனக்குப் பிள்ளை இல்லை என்பது பற்றி ரொம்ப சந்தோசப்படுகின்றேன். ஒரு சமயம் பிள்ளையிருந்தால் அதுவும் பெண்ணாக இருந்தால், மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன். இதுபோல தாழ்ந்த சாதி பையன்களைப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அய்யா (வேலூர் நாராயணன்) அவர்கள் அப்படி கருதி இருப் பாரானால் அவர் முன்னேற்றக் கழகத்திலிருப்பதற்கே லாயக்கற்றவர்தான். அவர்களைப் பார்த்து பறையர் என்று சொல்லி விட்டோம். அவர்களிலே வைப் பாட்டி மகன் இல்லை. நம்மில் தான் வைப்பாட்டி மகன் என்று இருக்கிறது. தாழ்த்தப்பட்ட பெண் தானாகப் போனால்கூட பார்ப்பான் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

நாம் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் நாட்டில் இரண்டே ஜாதி தான் இருக்கிறது. ஒன்று பார்ப்பான். மற்றொன்று சூத்திரன். இதைத் தான் ஒழிக்க வேண்டும். ஒழியாமல் பாதுகாப்பதற்காகத் தான் பார்ப்பான், செட்டி, முதலி, நாயக்கர், கவுண்டன், படையாச்சி என்று நமக்குள் பல சாதிகளைப் பிரித்து அதில் ஒன்றுக்கொன்று நம்மை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்திருக்கின்றான்.

நாங்கள் தமிழர்கள், சூத்திரர்கள் அல்லர். இந்துக்கள் அல்ல என்கிற உணர்ச்சி நம் மக்களுக்கு வரவேண்டும். இன்றைய தினம் இந்த பேச்சு பேசியதற்கு அம்மையாரிடம் அய்யா மேயர் அவர்களிடமிருக்கிற அன்பைவிட அதிகமான அன்பு கொண்டிருக்கின்றேன். அம்மையாரும் பெருமைமிகு மேயரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். நமக்குள் இதெல்லாம் இருக்கக் கூடாது.

(‘விடுதலை’ 15.12.1968)

பெரியார் முழக்கம் 26092013 இதழ்

You may also like...