நமக்கு இலக்கியம் உண்டா
பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான். அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால் சுவாமிகள், அடிகள், நாயன்மார், ஆழ்வார் ஆகிவிடுவார்கள். அவர்கள் அதிகமாகப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிந்து பக்கத்தில் உள்ள கடவுள்களைப் பற்றிப் பாடிய பாட்டுக்கள் பிரபந்தங்கள் ஆகிவிடுகின்றன.
அக்கோவில்கள்பாடல்பெற்றகோவில்‘ஸ்தலங்கள்’ஆகிவிடுகின்றன. பாட்டு ‘தேவ ஆரங்கள்’ ஆகிவிடுகின்றன. யாரோ ஒரு சில புலவர்கள் வள்ளுவர், அவ்வை, கபிலர் போன்றவர்கள் நீதிநூல், நீதி மஞ்சுரி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சதகம், நாலடி முதலிய பல நீதிகளைப் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ள இலக்கியங்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார்கள்.
60, 70 ஆண்டுகளுக்கு முன் நான் திண்ணைப் பள்ளிகளில் படிக்கும்பொழுது இவையே தலைசிறந்து விளங்கின. இப்போது அவை குப்பைமேட்டிற்கு போகச் செய்யப்பட்டு விட்டன. அந்த இடங்களைப் புராணங்கள், இதிகாசங்கள், கைப்பற்றிவிட்டன. மக்களுக்குள் 50 ஆண்டுக்கு முன்பிருந்த ஒழுக்கம் இன்று ஏன் இல்லை என்றால், ஒழுக்கத்தைப் போதிக்கும் இலக்கிய நூல் எங்கே இருக்கிறது? ஒழுக்கத்திற்காக இலக்கியம் இல்லை என்பது மாத்திரமல்லாமல் ஒழுக்கத்திற்கானகல்வியும் இல்லை.ஒழுக்கத்திற்கானமதமும் இல்லை. ஒழுக்கத்திற்கான அரசும் இல்லை. ஒழுக்கக் கேட்டிற்கும் மோசடி வஞ்சத்திற்கும், துரோகத்திற்கும் கல்லூரி சகலகலாசாலை என்று சொல்லத்தக்க வண்ணமே இவை இருக்கின்றன.
‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான்’… நூலிலிருந்து
நிமிர் ஜனவரி 2017 இதழ்