பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி
தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் தபால்காரர் பதவிகளை நிரப்பக்கோரி கடந்த ஆண்டு 21.10.2016 அன்று தமிழ்நாடு தபால் வட்டத்தின் சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பதவிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இருந்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து நுழைவுத்தேர்வும் எழுதினர்.
இத்தேர்வில் தமிழில் கட்டாயமாக 25 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதவேண்டும்.இதன் முடிவுகள் நான்கு நாட்களுக்கு முன்னர் இணையத் தில் வெளியிடப்பட்டது. தமிழில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் மற்ற தாள்களில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழில் தோல்வி அடைந்து இருந்தனர். ஏதோ, தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு தேர்வு நடப்பதுபோல் அவ்வளவு கடினமாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு, தமிழில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றவர்களின் பட்டியலைப் பார்த்ததும் நம்மவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை, தமிழர்களும் இல்லை அனைவரும் அரியானா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஒருவருக்கும் தமிழ் தெரியவில்லை தொடர்பு கொண்ட சற்று நேரத்திற்கு பின் இவர்களின் அலைபேசிகள் அனைத்தும் அணைக்கப்பட்டு விட்டது.
தமிழ்நாடு தபால்துறை யின் இணைய பக்கத்தில் இருந்த இத்தேர்வின் முடிவுக்கான இணைப்பும் நீக்கப்பட்டு இருப்பதும், இதில் மேலும் மர்மத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ரயில்வே, பாதுகாப்பு, வருமானவரித்துறை, சுங்கம், கலால், ஏ.ஜி அலுவலகம், வருங்கால வைப்பு நிதி, ஈ.எஸ்.அய். ஆகிய அலுவலகங்களில் இந்தி பேசுவோர் பல ஏமாற்றுகள், மோசடிகள் புரிந்து பணிகளில் நுழைந்து பணியாற்றி வருகின்றனர். தமிழர்களின் உரிமைகளை முறைகேடுகள் செய்து பறித்து வருகின்றனர். இதேபோல் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளின் மோசடித் தனங்களை பல முறை மத்திய அரசிற்கு கொண்டு சென்றும், போராட்டங்கள் பல நடத்தியும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு கொண்டு சென்றும் பலனில்லை. இன்று நேரடியாகவே முறைகேடு செய்து, மோசடி செய்து தமிழ் மொழித்தாள்களில் அதிக மதிபெண்கள் பெற்றதாகக் காட்டி தபால் ஊழியர் பணியிடங் களுக்கும் இந்தி பேசுபவர்கள் பணி நியமனம் பெறப்போகிறார்கள்.
தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், தமிழகத் தில் இருந்து சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் களும் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுப்பீர்களா?
பெரியார் முழக்கம் 30032017 இதழ்