திட்டக் குழுவும் கல் முதலாளிகளும்

நகரத்தில் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.32 வருமான  வந்தாலும், கிராமத்தில் ரூ.28 வருமானம் வந்தாலும் அவர் வறுமைக்கோட்டைத் தாண்டி விட்டார் என்கிறது திட்டக்குழு. திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியா, உலகமயமாக்கல் கொள்கையின் தீவிர ஆதரவாளர். அமெரிக்க முதலாளியின் கருத்தை செயல்படுத்தும் ஏவலர். ரூ.28 வருமானம் வந்தவருக்கு வறுமை ஒழிந்தவிட்டது என்று கூறிய இவர், டெல்லியிலுள்ள தனது திட்டக் குழு அலுவலகத்தின் இரண்டு கழிப்பறைகளை சீரமைக்க ரூ.35 லட்சம் செலவிட்டுள்ளார். ‘ஸ்மார்ட் கார்டு’ கையில் வைத்திருப்போர் மட்டுமே, இந்தக் கழிப் பறையை பயன்படுத்த முடியுமாம். வெளி நாட்டுப் பயணங்கள் வேண்டாம், நட்சத்திர ஓட்டல் கூட்டங்கள் வேண்டாம் என்று மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை அறிவிக்கும்போது இரண்டு கழிப்பறைகளை திருத்தி அமைக்க ரூ.35 லட்சம் செலவிடலாமா என்ற கேள்விகள் எழுப்பப்படு கின்றன. நியாயமான கேள்விதான். வறுமை கோட்டுக்கும் நவீன கழிப்பறை சொகுசுவுக்கும் இடையே உள்ள பாகுபாடு, ‘பிராமண-சூத்திர’ பாகுபாடுகளின் மறு வடிவம் தானே. ‘மனுதர்ம’ தத்துவமே வெவ்வேறு வடிவங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஏடுகளில் வந்துள்ள மற்றொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும். காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த நாராயணன் என்ற தொழிலதிபர் ரூபாய் ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரம், அபயஹஸ்தம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினாராம்.

‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏடு (ஜூன் 14, 2012) மற்றொரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு நாளும் 9 காலப் பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மடப் பள்ளியின் போதும் முருகனுக்கு படைக்கப்பட்ட சோறு, கவளம் கவளமாக யானைக்கு போடப் பட்டதாம். வேறு சிலர் அதை மாடுகளுக்கு வாங்கிப் போனார்களாம். இவ்வளவுக் கும் பிறகு, ஒவ்வொரு நாளும் 193 கிலோ சோறு கடலில் கொட்டப்பட்டு வந்ததாம். நீண்ட காலம் இந்த ‘கிரிமினல் விரயத்தை’ பார்ப்பன புரோகிதர்கள் செய்து வந்தனர்”. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த பிறகுதான், கடந்த மே 5 ஆம் தேதியிலிருந்து அந்த சோற்றில் மிளகு, சீரகம் சேர்த்து பக்தர்களுக்கு ‘மிளகு சம்பா’ என்ற பெயரால் பிரசாதமாக வழங்கத் தொடங்கியுள்ளார்களாம்.

பாழும் கல்லின் மீது குடம்குடமாக பாலைக் கொட்டி அழும் பாலாபிஷேகம், ‘அக்னி’யை வளர்த்து, வேத மந்திரம் ஓதி, அதில் நெய்யையும், பருப்பையும் கொட்டி பாழடிக்கும் பார்ப்பனர்கள் நடத்தும் யாகங்கள்; இப்படி மக்களுக்கு எதிரான வீண் விரயங்கள், பார்ப்பன சவுண்டிகளால் ஒவ்வொரு நாளும் நடக்கிறதே. அலுவாலியாவின் 32 லட்சம் கழிவறையாவது மலத்தை வெளியேற்றப் பயன்படுகிறது. இந்த பார்ப்பனக் கும்பல் நடத்தும் படையலும், யாகமும் அதற்குக் கூடப் பயன்படுவதில்லையே! எந்தப் பார்ப்பனராவது எந்த ஆன்மீகப் புலியாவது, இதைக் கண்டு சீறியது உண்டா? மக்களாவது இந்த வீண் விரயத்தை உணர்ந்தார்களா? காரணம்…. மனுதர்ம சிந்தனை. அப்படி ஒரு மூளை விலங்கை அழுத்தமாகப் போட்டு வைத்துள்ளது என்பது தானே?

தொகுப்பு: இரா

பெரியார் முழக்கம் 14062012 இதழ்

You may also like...