போர்க் குற்றத்திலிருந்து இராசபக்சேயை காப்பாற்ற இந்தியா நடத்தும் நாடகம்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்குச் சென்று போர்க் குற்றவாளி ராஜபக்சேயுடன் பொங்கல் விழா கொண்டாடி, தமிழர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை, திட்டங்களை அறிவித்துள்ளார். போரில் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கி, ரயில்வே திட்டங்களையும் தொடங்கி வைததுள்ளார். இனப்படுகொலையாளரான ராஜபக்சே மிகச் சிறந்த பண்பாளர் என்றும், தம்முடன் விருந்து உண்பதற்காகவே பல மணி நேரம் காத்திருந்ததாகவும் புகழாரம் சூட்டியிருக்கிறார். எஸ்.எம். கிருஷ்ணாவின் பயணத்தினால் தமிழர்கள்  பிரச்னை தீர்ந்து விட்டதாகவும், இனி தமிழக மீனவர்கள் படுகொலை நிறுத்தப்பட்டு விடும் என்றும் தமிழக காங்கிரசார் பேசத் தொடங்கி யுள்ளனர். ஆனால், அவர் பயணம் மேற்கொண்ட அடுத்த சில நாட்களிலேயே இராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.எம். கிருஷ்ணாவைத் தொடர்ந்து இந்திய அதிகார மய்யத்தின் தூதராக செயல்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்தப் பயணங்களின் நோக்கம் என்ன? இத்தகைய நாடகங்களை அவசர அவசரமாக அரங்கேற்றுவதற்கான பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டியது அவசியமாகும்.

ஈழத்தில் தமிழர்கள் இப்போது எந்த நிலையில் உள்ளார்கள்?

  • தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டு விட்டது.
  • தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு சிங்களர் குடி யேற்றம் நடத்தப்பட்டு தமிழர்களின் பாரம்பர்ய பிரதேசம் என்ற அடையாளம் அழிக்கப்பட்டு வருகிறது.
  • தமிழர்களின் கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்களஅடையாளங்கள் திணிக்கப்படுகின்றன.
  • தமிழர்கள் விட்டுச் சென்ற வீடுகளை – நிலங் களை ராணுவம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.

– இந்த அடிப்படையான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், கண்டிக்காமல் இந்தியா – தமிழர்களின் மறுவாழ்வுத் திட்டங்கள் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது.

13 ஆம் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவேன் என்கிறார் ராஜபக்சே. அதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் பெருமைப்படுகிறார். வடக்கு-கிழக்கு மாநிலங்களை இணைத்து தமிழர்களின் தாயகத்தை ‘ஓர்மை’யாக்க வேண்டும் என்ற 13 ஆம் சட்டத்திருத்த முதன்மை யான அம்சமே புறக்கணிக்கப்பட்டுவிட்டது. ராணுவ அதிகாரமோ, நிதி அதிகாரமோ இல்லாத ஒரு ‘மாநிலக் கவுன்சிலை’ முன்மொழிகிறது. இத் திட்டம், தமிழர்களுக்கான இம்மாநில கவுன்சிலுக்கு தமிழ்மண் மீதான உரிமையும் கிடையாது. எந்த நேரத்திலும் இந்த சொற்ப அதிகாரங்களைப் பறித்துக் கொண்டு சிறீலங்கா, தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் ‘தமிழ் மாகாண கவுன்சிலை’க் கொண்டு வந்துவிட முடியும். இப்படி, தமிழர்களுக்கு போலி அதிகாரப் பரவல்களை வழங்கும், இந்த 13 ஆவது சட்டத்திருத்தத்தைக்கூட அமுல்படுத்து வதற்கான காலக்கெடு எதையும் நிர்ணயிக்க ராஜ பக்சே தயாராக இல்லை. அதற்கான உறுதியையும் எம்.எம்.கிருஷ்ணாவுக்கு ராஜபக்சே வழங்கவில்லை.

இந்தியப் பார்ப்பன ஆட்சிக்கு தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்ற முனைப்பும் இல்லை.

ராஜபக்சே அரசு பிரதிநிதிகளோடு தமிழர் களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழர் பகுதியி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த ஆண்டு ஜனவரி முதல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். இந்த பேச்சு வார்த்தை இந்தியாவின் ஆதரவுடன் தான் நடந்து வருகிறது. பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. அரசியல் தீர்வுக்கான திட்டங் களையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே முன் வைத்தனர். சிறீலங்கா அரசுப் பிரதிநிதிகளோ உருப்படியான எந்தத் தீர்வுக்கும் தயாராக இல்லை. திட்டமிட்டே பேச்சு வார்த்தைகளை இழுத் தடித்தனர். ஒரு கட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு காலக் கெடுவை நிர்ணயித்து அதற்குள் தீர்வுத் திட்டம் எதையும் முன் வைக்க வில்லை என்றால், பேச்சு வார்த்தையைத் தொடர முடியாது என்று அறிவித்து விட்டனர். இவ்வளவு கூத்துகளையும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததேதவிர, இலங்கை அரசை தட்டிக் கேட்கவில்லை.இதற்குப் பிறகு இலங்கை அரசு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேச்சைத் தொடரப் போவதில்லை என்று அறிவித்து இலங்கை அரசே நியமிக்கும் நாடாளுமன்றக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்தது. இந்தியா, இதில் எந்த ஆர்வமும் காட்டாத நிலையில், தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை அமெரிக்கா அழைத்துபேசியது. அமெரிக்காவின் அரசு பிரதிநிதி களோடு பேச்சு வார்த்தை நடத்தியது. விரிவான அறிக்கை ஒன்றையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையளித்தனர். பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போய் நிற்கின்றன.

இந்த நிலையில் இந்திய அரசு தமிழர்களுக்கு உரிமைகள் பெற்றுத் தருவதாக நாடகமாடுவதற்கும், புனர்வாழ்வுத் திட்டங்களை மேற்கெள்வதற்கும் ஆழமான அரசியல் சதி அடங்கியிருக்கிறது.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் உள்ள அய்.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் ராஜபக்சே ஆட்சி தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ஆணையத்தின் அறிக்கை விவாதத்துக்கு வர இருக்கிறது. இலங்கை ராணுவம் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்றும், விடுதலைப் புலிகளே எல்லாவற்றுக்கும் காரணம் என்றும் கூறும் இந்த அறிக்கையை பிரிட்டன், கனடா நாடுகள் நம்பகத்துக்குரியதுஅல்ல என்று அறிவித்து விட்டன. அய்.நா.வில் சிறீலஙகாவின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குள்ளாகும் சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் தமிழர்களுக்கான உதவித் திட்டங்கள் தொடங்கி தமிழர் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சிகள் நடந்து வரு கின்றன என்று உலகத்துக்குக் காட்டவும் இலங்கை அரசை மீண்டும் காப்பாற்றவுமே எஸ்.எம்.கிருஷ்ணா வின் இலங்கைப் பயணம் எனும் நாடகம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அய்ரோப்பிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடித்த தோடு மட்டுமின்றி இலங்கை அரசை பாராட்டித் தீர்மானம் கொண்டு வந்து, இனப் படுகொலை ஆட்சியை காப்பாற்றிய இந்தியப் பார்ப்பன ஆட்சி, இப்போதும்,இலங்கையைப் பாதுகாத்து போர்க் குற்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பச் செய்யவே, இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.                                 ட

 

தமிழக மீனவர்களின் “பாரம்பர்ய மீன்பிடி உரிமையும்” இலங்கையிடம் இந்தியா அடகு

இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய ரீதியான உரிமை இருப்பதாக கூறி வந்த இந்திய தரப்பினர், தற்போது அந்தக் கோரிக்கையையும் விட்டுக் கொடுத்துள்ளதாக இலங்கை மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனரத்ன லண்டன் பிபிசி வானொலியில் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை இடையே மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இந்திய இலங்கை தரப்புகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் கடந்த ஜன.14 ஆம் தேதி சனிக்கிழமையன்று கொழும்பில் நடந்தது.

இந்திய உயரதிகாரிகள், இந்திய மீன்பிடித் துறை அமைச்சின் கூட்டுச் செயலர்கள் உள்ளிட்ட தரப்பினர், தமிழ்நாடு ஆந்திர மாநிலங்களின் மீன்பிடித் துறை ஆணையர்கள் இந்திய கடற்படை மற்றும் கடல் எல்லைக் காவல் படையினர் அதேபோல் இலங்கை தரப்பிலும் வெளியுறவு மற்றும் மீன்பிடித் துறை அமைச்சுகளின் பிரதிநிதிகள், யாழ் அரச அதிபர் போன்றோர் இந்தப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பாரம்பரிய உரிமை இருப்பதாக பல காலமாக இந்தியா கோரி வந்த கூற்றை இம்முறை அது விலக்கிக் கொண்டுவிட்டதாக அமைச்சர் சேனரத்ன கூறினார்.

1960களில் இருந்து இத்தகைய பாரம்பர்ய உரிமையை இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. சர்வதேச கடல் எல்லை நியமங்கள் 1975 காலப் பகுதியில் வந்த பின்னர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை பாரம்பரிய உரிமையாக கருத முடியாது என்று இலங்கை மறுத்தது. இப்போது இலங்கையின் பதிலைக் கேட்டு, இந்தியப் பிரதிநிதிகள்  தங்களின்  வாதத்தை கைவிட சம்மதித்தனர் என்ற சேனரத்ன தெரிவித்துள்ளார்.

கடலின் ஆழம் வரை துழாவி மீன்பிடிக்கும் படகுகளுக்கு தமிழ்நாட்டில் இனி புதிதாக அனுமதிக்கப் போவது இல்லை என்றும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள படகுகளும், கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும் என்றும் இந்தியத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக இலங்கை மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனரத்ன பிபிசியிடம் கூறியுள்ளார். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமைகளையும், இந்திய பார்ப்பன ஆட்சி தமிழக மீனவர்களின் கருத்துகளைக் கேட்காமலே இலங்கையிடம் அடகுவைத்துவிட்டது.

பெரியார் முழக்கம் 26012012 இதழ்

You may also like...