பொய் வழக்கிலிருந்து கழகத் தோழர்கள் விடுதலை !

திருப்பூர் மாஸ்கோ நகர் பல்வேறு தரப்பட்ட உழைக்கும் மக்கள், சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதி மக்களை குற்றப்பரம்பரையினர் போல் பாவிக்கும் திருப்பூர் மாவட்ட காவல்துறை, நடவடிக்கை எனும் பெயரில் திடீரென சோதனைகள் செய்வது,பொய் வழக்குகள் போடுவது என தொடர்ச்சியாக பொது மக்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தது.

முதன்முறையாக காவல்துறை போட்ட பொய் வழக்கை நீதிமன்றத்தில் தகர்த்துள்ளது திராவிடர் விடுதலைக்கழகம்.

மாஸ்கோ நகர் பகுதியில் இருந்து கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டு ஜாதிவெறி, மத வெறியர்களுக்கு எதிராக துணிச்சலுடன் களச் செயல்பாடுகளில் இயங்கிவந்த தோழர்கள் மாதவன், நாகராசு ஆகியோர் மீது 2015 ஆம் ஆண்டு காவல்துறை துணையுடன் மத, ஜாதி வெறியர்கள் பொய் வழக்கை பதிவு செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப் பட்டு  26 நாட்கள் சிறையில் அடைத் தார்கள். அப்போது இக் கைதைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்கின் தீர்ப்பு 05.03.2017 அன்று வழங்கப் பட்டது. தோழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். விடுதலை செய்யப்பட்ட தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தோழர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு, மாவட்டச் செயலாளர் நீதி ராசன், மாவட்ட அமைப்பாளர் அகிலன், மாணவர் கழக அமைப்பாளர் அரிஷ்குமார், தெற்கு மாவட்ட அமைப்பாளர் ராமசாமி, திருவள்ளுவர் பேரவை துரை, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 16032017 இதழ்

You may also like...