மார்க்சிய லெனினிய தோழர் தொப்பி குமாரின் படுகொலை

சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது ஆட்களின் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து  28.4.2012 அன்று கெலமங்கலத்தில் பெரியார் திராவிடர் கழக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூட்டத்தில் பங்கேற்று, தளி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இக்கூட்டத்தில் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிய-லெனினிஸ்ட்) அமைப்பைச் சார்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.  அடுத்த நாள் 29.4. 2012 அன்று லெனின் பிறந்த நாளுக்காக மார்க்சிய லெனினியக் கட்சி பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்துக்கு காவல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யுமாறு ராமச்சந்திரன் வற்புறத்தவே ஏப்.28 ஆம் தேதி இரவு 10 மணிக்கு, 29 ஆம் தேதி நிகழ இருந்த கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பெரியார் திராவிடர் கழகத்தை, சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக இக்கட்சி தூண்டிவிடுவதாக ராமச்சந்திரனும் அவரது ஆட்களும் கருதினார்கள்.

கூட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திர மாநில கூலி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் தோழர் கோட்டய்யா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பேசி, மே 13 ஆம் தேதி கூட்டம் நடத்த அனுமதி பெற்றுத் தந்தார். கூட்டத்தை எப்படியும் தடுத்தே தீர வேண்டும் என்று கருதிய கும்பல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) செயல் வீரர் கூட்டத்துக்காக இரவு முழுதும் சுவ ரொட்டிகள் ஒட்டிய  தோழர் தொப்பி குமாரை கூட்டத்துக்கு முதல் நாள் மே 12 ஆம் தேதி கெலமங்கலம் நடு வீதியில் வெட்டி படுகொலை செய்தனர். சுவரொட்டி ஒட்டிய கைகளை முதலில் வெட்டி வீசி வயிற்றில் குத்தினர்.

தோழர்கள் தொப்பி குமாரை ஓசூர் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுரை கூறினர். பிறகு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொப்பி குமார் மரணமடைந்துவிட்டார். தொப்பி குமார் உடலை தோழர்கள் எடுத்து வந்து 13 ஆம் தேதி கெலமங்கலம் வீதிகளில் வீரவணக்க ஊர்வலமாக எடுத்துச் சென்று 5.30 மணிக்கு அடக்கம் செய்துவிட்டு 6 மணிக்கு திட்டமிட்டபடி பொதுக் கூட்டத்தை நடத்தினர். தளி பகுதியில் நடந்த மற்றொரு கோர அரசியல் படுகொலை இதுவாகும். தொப்பி குமாருக்கு வீரவணக்கம்!

பெரியார் முழக்கம் 26072012 இதழ்

You may also like...