பாரதிதாசன் பல்கலை பார்ப்பனியத்தைக் கண்டித்து பிப்.10 இல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மிக முக்கிய துறையாக இயங்கி வரும் மகளிரியல் துறைக்கு பேராசிரியர் முனைவர் மணிமேகலை தலைவராக செயலாற்றி வருகிறார். இத் துறை மூலம் எண்ணற்ற மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு தரமான, முழுமையான தொழிற் பயிற்சிகளை வழங்கி வருகிறார். பயிற்சிகளோடு அவர்களை விட்டுவிடாமல் மகளிர் தொழில் முனைவோருக்கு அகில இந்திய அளவில் வணிக வாய்ப்புகளையும், சந்தைப்படுத்துதலையும் ஏற்படுத்திக் கொடுத்து பெண்கள் சுயமரியாதையாகவும், சுதந்திரமகவும் வாழ வழிவகை செய்து வருகிறார். தனது துறை சார்ந்த மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பெரியாரியலைப் பரப்புவதில் அக்கறை செலுத்துகிறார். ஆய்வறிஞர் எஸ்.வி. இராஜதுரை இதே பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
அதேபோல தமிழ்நாடு அரசு சார்பாகவே குடிஅரசு தொகுப்பு நூல்கள் வெளிவர தேவையான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த பெரியாரியலாளர் இராமர் இளங்கோ, பாரதிதாசன் உயராய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார். எஸ்.வி. இராஜதுரை, இராமர் இளங்கோ, முனைவர் மணிமேகலை ஆகியோர் இணைந்து தொடர்ந்து பெரியாரியலைப் பரப்பும் வகையிலான பல நிகழ்வுகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இப்பல்கலைக் கழகத்திற்கு மீனா என்ற ஒரு பார்ப்பன அம்மையார் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றவுடன் முதற்காரியமாக எஸ்.வி.இராஜ துரைக்குப் பிறகு பெரியார் உயராய்வு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த நெடுஞ்செழியன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இராமர் இளங்கோ பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து மகளிரியல் துறையின் தலைவரான மணிமேகலையையும் பதவி நீக்கம் செய்ய முயற்சிகளை மேற் கொண்டார். செய்தி அறிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திருச்சியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி துணைவேந்தரைக் கண்டித்hர். அதனால் முனைவர் மணிமேகலையின் பதவி நீக்க நிறுத்தி வைக்கப்பட்டது. அதே சமயம் அவரைப் பதவி நிக்கம் செய்ய கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து திட்டமிட்டு பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து, தற்போது 4.2.12 அன்று தற்காலிக நீக்கம் செய்துள்ளாhர் துணைவேந்தர் மீனா அம்மையார்.
தான் பதவியேற்ற நாளிலிருந்து பெரியார் உயராய்வு மய்யம், மகளிரியல் துறை, பாரதிதாசன் உயராய்வு மய்யம் ஆகிய மூன்று துறைகளையும் திட்டமிட்டு முடக்கிவிட்ட பார்ப்பன மீனா அம்மையாரை வன்மையாகக் கண்டித்தும், பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு முரணாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட முனைவர் மணிமேகலையின் தற்காலிக நீக்க ஆணையை ரத்துக் கோரியும் வரும் 10.2.2012 வெள்ளிக் கிழமை மாலை 10 மணியளவில் திருச்சி புகைவணடிச் சந்திப்பு அருகே காதிகிராஃப்ட்டில் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சிக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பல்கலைக்கழக வாயிலிலும் போராட்டங்கள் நடைபெறும்.
பெரியார் முழக்கம் 09022012 இதழ்