கடவுள் மறுப்பு சிந்தனைக்கு கோயில் கட்டலாமா?
கடவுள் – மதங்களை முற்றாக மறுக்கும் கோட்பாடு நாத்திகம். அது அறிவின் எல்லை. உலகம் முழுதும் கடவுள், மத நம்பிக்கைகளின் இறுக்கம் தளரத் தொடங்கி வருவதாகவே ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பின்னணியில் நாத்திக சிந்தனையை மறுப்புகளின் தொகுப்பாகவே மாற்றி விடாமல், ஆக்கத்தின் சிந்தனையாக மாற்றிட வேண்டும் என்ற சிந்தனை, கடவுள் மறுப்பாளர் களால் முன் வைக்கப்படுகிறது. அப்படி ஆக்கபூர்வ நாத்திக சிந்தனையை எப்படி முன்னெடுப்பது என்பதில் நாத்திக சிந்தனையாளர்களிடையே உரத்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. பிரிட்டனில் மிகவும் புகழ் பெற்ற நாத்திக சிந்தனையாளர்கள் அலெய்ன் டேபோட்டன் மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஆகியோர்.
லண்டனில் சர்ச்சுகள் அதிகம் நிறைந்த, பரபரப்பான நிதிப் பரிமாற்றங்கள் நடக்கும் ‘ஸ்கொயர் மைல் நகரம்’ எனுமிடத்தில் 1 மில்லியன் டாலர் செலவில் 151 அடி உயரத்தில் ‘நாத்திக கோபுரம்’ ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார் அலெய்ன் டெ போட்டன். இதை நாத்திகர்களுக்கான கோயில் என்றே இவர் கூறுகிறார். இந்த கோபுரத்தில் 300 மில்லியன் ஆண்டுகளாக மனிதகுலம் கடந்து வந்த வரலாறு, அறிவியல் பார்வையில் விளக்கப்பட இருக்கிறது. நாத்திகர்களுக்கான நட்பு, அன்பு, அமைதி மற்றும் சிந்தனையின் வடிவமாக இதை அமைக்க விரும்புவதாகக் கூறும் போட்டன், இது நாத்திகத்தை மூர்க்கமான சிந்தனையாக்கிவிடாமல் தடுப்பதற்கான முயற்சி என்கிறார். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பாத கட்டுமான நிறுவனங்கள், பாதித் தொகையை நன்கொடையாக ஏற்கனவே வழங்கிவிட்டன. எஞ்சிய தொகையை மக்களிடம் திரட்டப் போவதாக கூறும் போட்டன், 2013 இல் கட்டுமானப் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
மற்றொரு நாத்திகரும், ‘கடவுள் அதீத கற்பனை’என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதியவருமான ரிச்சர்ட்டு டாக்கின்ஸ், இந்த முயற்சியை விமர்சிக்கிறார். “நாத்திகர்களுக்கு கோயில் தேவையில்லை. இந்தத் தொகையை வேறு சிறந்த திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். நாத்திக நெறியை பரப்புவதற்கு செலவிட விரும்பினால், மதச் சார்பற்ற கல்வியை வளர்ப்பதற்கும், மதச்சார்பற்ற பள்ளிகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தலாம். இந்தப் பள்ளிகளில் பகுத்தறிவு, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விஞ்ஞானக் கல்விகளை பாடமாக்கலாம் என்று கூறுகிறார். மாறாக, மத நம்பிக்கையாளாகள் கட்டிக் கலையைப் போற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கும்போது, நாத்திகர்கள் மட்டும் அந்த உணர்வுகளை ஏன் இழக்க வேண்டும் என்கிறார் போட்டன். செயின்ட் கில்ஸ் என்ற மிகப் பெரிய ‘சர்ச்’சுக்கு அருகே இந்த ‘நாத்திக கோயில்’ கட்டப்பட இருக்கிறது.
அந்த சர்ச்சின் அருட் சகோதரியாக இருக்கும் கேத்தரின் ரூமன்சிடம், இதுபற்றி கேட்டதற்கு சர்ச்சுக்கு அருகே நாத்திக கோபுரம் கட்டக்கூடாது என்று அவர் எதிர்க்கவில்லை. மாறாக, “கடவுளிடம் எதையாவது எதிர்பார்த்து வேண்டுகோள் வைத்தால்தானே மன அமைதி கிடைக்க முடியும்?” இத்தகைய வேண்டுதலுக்கு வாய்ப்பில்லாத கோபுரத்தால் எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதி கிடைக்கும்? என்று வேண்டுதலை நியாயப்படுத்துகிறார். ஆனால் ஜார்ஜ் பிட்சர் என்ற மற்றொரு மூத்த பாதிரியார், இந்த முயற்சியை வரவேற்றுள்ளார். “நாம் மதச்சார்பின்மை கொள்கையாளராக இருந்தாலும் மதவாதியாக இருந்தாலும் எல்லாம் ஒரே வாழ்க்கைக்கான விளையாட்டுதான். நாத்திகம் ஆக்கபூர்வ சிந்தனையாக்கப்படு வதை வரவேற்கிறேன்” என்கிறார்.
இப்படி வழிபாட்டு இடத்துக்கு அருகே நாத்திக கோயில் கட்டி னால், நம்ம ஊர் ‘தினமலர்’களும், ‘ராமகோபாலன்’களும் என்ன செய்திருப்பார்கள்? நாத்திகர்களைக் கைது செய், தடை செய் என்று வானத்துக்கும் பூமிக்குமிடையே தாண்டிக் குதித்திருப்பார்கள். இதுதானே பார்ப்பன மதத்தின் யோக்கியதை!
பெரியார் முழக்கம் 16022012 இதழ்