நீதி கேட்கும் 21 ஆண்டுகாலப் போராட்டம்!
21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை நேரில் சந்தித்தார், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தியாளர் கோபு மோகன். நீதி கேட்டு போராடி வரும் இந்த மூன்று தமிழர்களின் மன உணர்வுகளை நேர்மையாக மனித உரிமைப் பார்வையில் பதிவு செய்திருக்கிறார், செய்தியாளர். ‘இந்தியன் எக்ஸ்பிரசின்’ புதுடில்லி வாரப் பதிப்பில் (பிப்.12-18) வெளியான இந்தக் கட்டுரையின் தமிழாக்கம்.
அந்த சிறை அதிகாரியின் சிறையில் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்கிறார்கள். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தருகிறார்கள். பிறகு அவர்களுக்கு உடல் அடையாளங்கள் பரிசோதிக்கப் படுகின்றன. சில படிவங்களில் கைரேகையை பதிவு செய்கிறார்கள். சிறைக் கதவு திறக்கப்படுகிறது. அவர்கள் இப்போது சுதந்திரமாக வெளியே போகலாம். இந்தக் காட்சிகளை ஒவ்வொரு நாளும் அதே அறையில் எங்கள் முன்னால் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் இந்த இளைஞன், இப்படி சுதந்திரமாக விடுதலைப் பெற்று வெளியேறு வோரை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவரது மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் உணர முடிகிறது. அதைப் புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல. சிறையிலிருந்து விடுதலைப் பெற்று வெளியில் வாழக்கூடிய வாழ்க்கையின் உன்னதங்களையும் மதிப்புகளையும் உணரக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், வேறு எவருமல்ல; அது ஏ.ஜி. பேரறிவாளன்தான். அந்த இளைஞர் 21 ஆண்டுகாலமாக சிறைக் கதவுகளுக்குள் கழித்திருக்கிறார். வெளியில் சுதந்திர மனிதனாக வாழ்ந்த காலத்தைவிட இரண்டு மடங்கு காலம், கூடுதலாக அவரது வாழ்க்கை சிறையில் கடந்திருக் கிறது.
பலருக்கும் சுதந்திரம் என்பது ஒரு கருத்தியல் தான். அவர்களின் புரிதல், அந்த எல்லையோடு முடிந்துவிடும். ஆனால், அந்த சுதந்திரத்தை இழக்கும்போதுதான், அதன் மேன்மை புரிய வரும். அதை எந்த தருணத்திலும் இழந்துவிடவே முடியாது என்பதை உணர முடியும். அதே போன்றதுதான் உண்மை. நீதி என்பவையும். 1991 மே 21 ஆம் தேதி ராஜீவ் காந்தி, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டை யில் கைது செய்யப்பட்டவர் பேரறிவாளன். இந்த கொலை சதியில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் அவருக்கு கிடைத்தது மரண தண்டனை. இந்த வழக்கு விசாரணையில் முதன்மையாக பலியிடப்பட்டது, ‘உண்மை’தான், என்கிறார் பேரறிவாளன். இந்த வழக்கில் என்னதான் நடந்தது? தொடக்கத்திலிருந்தே உண்மைகளை மனம் திறக்க விரும்பினார், அவர்.
அனைவராலும் ‘அறிவு’ என்று அழைக்கப்படும் அந்த இளைஞனை மத்திய சிறப்பு புலனாய்வுத் துறையினர் கைது செய்தபோது, அடுத்த இரண்டு மாதங்களில் அவர் 20 வயதை எட்டுவதற்கு இருந்தவர். ஜூன் 10 ஆம் தேதி நள்ளிரவில் ஜோலார்பேட்டை யில் உள்ள அவரது இல்லத்துக்கு அவரைத் தேடி, புலனாய்வுத் துறையினர் வந்தனர். அடுத்த நாள் காலை அவரது தந்தை டி.ஞானசேகரன் (குயில் தாசன்), தாயார் கே. அற்புதம், மகன் அறிவு இருந்த சென்னைக்கு புறப்பட்டார்கள். திராவிட கட்சிகளின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைமை யகமான பெரியார் திடலில் அறிவை சிறப்புப் புலனாய்வுத் துறையினரிடம், அவரது பெற்றோர்கள் ஒப்படைத்தனர்.
“ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கேற்ற வர்கள், ஆதரவு தெரிவித்தவர்கள், ஏன், அனுதாபிகள் கூட எல்லோரையும் ஏதோ விசாரிக்கப் போகிறார்கள்; அவர்களுக்கு இதுபற்றி தகவல்கள் தேவைப்படுகிறது போலும்; அடுத்த நாளே எங்களை விடுவித்து விடுவார்கள் என்றுதான் நாங்கள் நம்பினோம்” என்றார் அறிவு. அப்படி 21 ஆண்டு களுக்கு முன், அவர் கைது செய்யப்பட்ட நாள் ஒரு செவ்வாய்கிழமை.
இப்போது, பல சிறை மாற்றங்களுக்குப் பிறகு அவர் 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேலூரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில்தான் அவரது சொந்த வீடு இருக்கிறது. பூட்டப்பட்ட கொட்டடியில் இருக்கும் அவரால் குறுகிய தூரத்திலுள்ள அவரது வீட்டை தனது கற்பனைகளில், எண்ணங்களில்தான் சென்றடைய முடியும். ஆனால், அவரது தாயார் அற்புதத்துக்கு, அப்படி இல்லை. அறிவு கைது செய்யப்பட்ட மூன்றாம் நாளிலிருந்து அவரது பயணமும், அலைச்சலும் தொடங்கியது. 20 ஆண்டுகளாகவே, அவர் அலைந்து கொண்டே இருக்கிறார். சிறையில் அடைபட்டவர்களின் நிலை என்னவாகுமோ என்ற சிந்தனை உலகின் பார்வையில் படிப்படியாக மங்கிப் போன நிலையிலும், அற்புதம் அம்மாளின் பயணம் மட்டும், தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவருக்கு இப்போது வயது 65. சிறைகள், நீதிமன்றங்கள், அரசியல் தலைவர் களின் வீடுகள், தூக்குத்தண்டனைக்கு எதிராக ஆதரவாளர்கள் நடத்தும் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள், குடியரசுத் தலைவருக்கு தனது நியாயங்களை விளக்கி வேண்டுகோள் மடலாக, பேரறிவாளன் எழுதிய நூல் அறிமுக நிகழ்ச்சிகள் என்று அவர் அலைந்து கொண்டும், ஓடிக் கொண்டும் இருக்கிறார். அவரது உணர்வுகளும், உறுதி தளராமையும் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமானது. அவரது மகனுக்கு ஈடு இணையற்ற ஒரே சக்தி, அற்புதம் அம்மாள் மட்டுமே! ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறையை நோக்கிய அவரது பயணம் தொடங்கிவிடும். அவரது தோள் பையில் அண்மையில் வெளிவந்த ஆங்கில, தமிழ் பத்திரிகைகளை அறிவுக்காக சுமந்து செல்வார். சந்தித்துத் திரும்பி வரும்போது அறிவு படித்துவிட்டு, அடையாளக் குறியிட்ட செய்திகள், வழக்கு தொடர்பான செய்திக் குறிப்புகள், மரண தண்டனைக்கு எதிரான செய்திகள் – அத்தனையும் எடுத்து வருவார். அவைகளை வெட்டி, ஒட்டி ஆவணப்படுத்த வேண்டும்.
ஒரு செவ்வாய்கிழமையில் நாம் அறிவை சந்தித்தோம். பார்வையாளர்கள் வாரம் இரு முறை சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நாளில் – அது ஒன்று. அன்று தான், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத தோழர்களை, ஆதரவாளர்களை, தமிழ் உணர்வாளர்களை சந்தித்துப் பேசுகிறார். ஒவ்வொரு சந்திப்பிலும் புதியவர்கள் வருகிறார்கள். தன்னுடைய கடந்தகால கதையையும், எதிர்காலத்தையும் அறியவே அவர்கள் வருகிறார்கள் என்பது அறிவுக்கு தெரியும். தூக்கு தண்டனை நீங்கி, விடுதலையாகி வெளியே வந்தால், என்ன செய்யத் திட்டம் என்ற கேள்வியை பலரும் அவரிடம் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பல நூறு முறை அறிவு பதில் தந்தாகி விட்டது. ஆனாலும், சலிப்படையாமல் தனது கருத்துகளையும், விளக்கங்களையும் முறையாக ஒழுங்குபடுத்தி, கோர்வையாக தொடர்ச்சிக் குன்றாமல் எடுத்துரைக்கிறார்.
‘ராஜீவ் கொலையாளி’ என்று தன்னை அழைப்பதை அவர் முற்றாக வெறுக்கிறார். தன்னை சந்திப்பவர்களிடம் தன் மீது புனையப்பட்டது பொய்யான வழக்கு என்பதற்கான காரணங்களை, தேதி வாரியாகவும், சட்டப் பிரிவுகள், பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டியும் விரிவாகப் பேசுகிறார். அவர் கோருவது எல்லாம் நீதியைத்தான்; கருணையை அல்ல.
இத்தனைக்கும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பட்டியலில் அவர் குறியிடப்பட்டது 18வது இடத்தில்தான். ஆனாலும்கூட மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறையில் அவர் பெற்றிருந்த டிப்ளோமா பட்டம்தான், அவரைக் கடுமையான குற்றவாளியாக மாற்றிவிட்டது. கைது செய்யப்பட்ட பலரில் ஓரளவு மின்னணு தொடர்பான தகவல் தெரிந்த ஒரு சிலரில் அறிவும் ஒருவர். மூத்த புலனாய்வு அதிகாரி இராதா வினோத் ராஜீ (அப்போது டி.அய்.ஜி. நிலையில் இருந்தவர்; அதன் பிறகு, தேசிய புலனாய்வு நிறுவனத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்), அறிவிடம் கேட்ட முதல் கேள்வியே, “நீதான் வெடிகுண்டை தயாரித்தாயா?” என்பதுதான்.
“நான் படித்த மின்னணு கல்வி, எனக்குப் பயன்பட்டதோ இல்லையோ, இந்த வழக்கில், என் மீது பொய்யாகக் குற்றம்சாட்டி, என்னை தூக்குக் கொட்டிலுக்கு இழுத்துக் கொண்டுவர, இந்தக் கல்வி உறுதியாகப் பயன்பட்டிருக்கிறது” என்றார் பேரறிவாளன்.. குடியரசுத் தலைவருக்கு அவர் எழுதிய மடலிலும், இதைப் பதிவு செய்திருக்கிறார். “வெடிகுண்டை தயாரித்தவன்” என்ற பெயர் சூட்டி, ஊடகங்கள் முழுதும் பரப்பினார்கள். ஆனால், கைது செய்யப்பட்ட 26 பேர் மீதும், 1908 ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் 3, 4 மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், குற்றப் பத்திரிகையில் வெடிகுண்டை தயாரித்தவன் என்ற குற்றச்சாட்டு என் மீது இடம் பெறவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முதன்மை விசாரணை அதிகாரியான கே. இரகோத்தமன், பின்னாளில் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டார். வெடிகுண்டை தயாரித்தது யார் என்ற புதிருக்கு இறுதிவரை விடை கிடைக்கவில்லை என்றார் இரகோத்தமன். அதற்கு பதிலாக வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கான 9 வோல்ட் பேட்டரியையும், ‘ஒயர்லெஸ்’ கருவியை இயக்குவதற்கான கார் பேட்டரியையும் வாங்கித் தந்ததாக அறிவு மீது குற்றம்சாட்டப்பட்டது.
20 ஆண்டு காலம் சிறையில் ஓடிவிட்டது. உச்சநீதி மன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்து 12 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வழக்கில் கவலை கொண்ட ஒவ்வொருவருமே தீர்ப்பின் ஓட்டைகளை சுட்டிக் காட்டுகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் சந்திப்பு அறையில் தூய்மையான வெள்ளை டி சர்ட், கால்சட்டையுடன் அமர்ந்து பேசும் அறிவு, உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், அறிவார்ந்த வாதங்களையே முன் வைத்துப் பேசுகிறார்.
பார்வையாளர்களை சந்திக்காத நாட்களில் சிறைக்குள் உள்ள பள்ளிகளிலும், படிப்பிலும் அவர் கவனம் செலுத்துகிறார். ஒவ்வொரு காலைப் பொழுதிலும் தனது சக தோழர்களுடன் கூடைப் பந்து, கைப் பந்து விளையாடுகிறார். “நான் செய்யாத ஒரு குற்றத்துக்காக பொய் வழக்குகளை எதிர் கொண்டு தூக்குத் தண்டனைக்கு உள்ளாகிய சூழலில், சோர்வும், அயர்வும் என்னைச் சூழ்ந்து மனம் உடைந்தேன். பிறகு இவற்றிலிருந்து விடுபட வேண்டி முக்கியத்துவத்தை, படிப்படியாக உணர்ந்து வழக்கை எதிர்த்துப் போராடும் மனநிலைக்கு தயாரானேன். சிறைக்குள்ளேயே நான் படித்து பி.சி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பட்டங்களையும், 6 பட்டயப் பயிற்சிகளை யும் முடித்தேன். இப்போது ‘எம்.பில்.’ ஆய்வுக்கு பதிவு செய்ய எண்ணியுள்ளேன்” – என் கிறார் அறிவு. இளம் வயதில், அவரிடம் ஒரு கிட்டார் இசைக் கருவி இருந்தது. ஆனால், அதை வாசிக்கும் பயிற்சி எடுப்பதற்கு நேரம் இல்லை. இப்போது சிறையில் வாசிக்கப் பழகிக் கொண்டார். சிறையில் உருவான இசைக் குழுவில் அறிவு தான் கிட்டாரை மீட்டும் கலைஞன். கடந்த கிறிஸ்துமஸ் விழாவில் இந்த இசைக்குழு நிகழ்ச்சியை சிறைக்குள் நடத்தியது.
சிறைக்குள் இருக்கும் சக தோழர்களை படிப் பதற்கு அறிவு ஊக்கப்படுத்துகிறார். சிறைக்கம்பி களுக்குள் வாழும் காலத்தை வீணடிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறார். சிறைக்குள்ளே செயல் படும் ஒரு பள்ளிக்கு, அறிவுதான் ஆசிரியர்களில் ஒருவர். சிலர் அவரை ‘கல்வி அமைச்சர்’ என்று அழைக்கிறார்கள். இப்படி ஆசிரியராக வேண்டும் என்ற ஆர்வத்துக்கு அவரது தந்தை காரணமாக இருக்கலாம். அறிவின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். தமிழ் ஆர்வலர்; இலக்கிய வட்டத்தில் அவரது பெயர் குயில்தாசன். திராவிடர் கழகத்தை நிறுவிய பெரியார் ஈ.வெ.ராமசாமியின் தீவிரமான தொண்டர். அதனால்தான் தனது ஒரே மகனுக்கு பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளிலிருந்து பேரறிவாளன் என்று பெயரைத் தேர்வு செய்தார். சிறைக்குள்ளே எல்லோருமே அறிவின் கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்களாகக் கூற முடியாது. ஆனால் அறிவு எடுத்துரைக்கும் கருத்துகளை ஆர்வத்துடன் செவி மெடுக்கிறார்கள். சிறை ஊழியர்கள், அதிகாரிகள், அறிவிடம் மென்மையாகவே நடந்து கொள் கிறார்கள். சில நேரங்களில் மரியாதையை வெளிப்படுத்துகிறார்கள்.
சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அந்த அறையில் இருந்த மற்ற இருவரை நாம் கவனிக்க நேர்ந்தது. ஒருவர் வெள்ளை கால் சட்டையிலும், மற்றவர் வெள்ளை வேட்டியிலும் இருந்தார். அவர்கள் சிறீதரன் என்ற முருகன் மற்றும் சாந்தன். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். மூவருமே தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருப்பவர்கள். அறிவைப் போலவே இவர்களும் தங்கள் எதிர்காலத்துக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள், இலங்கைத் தமிழர்கள்; வேறு நாட்டுக் காரர்கள் என்று வண்ணம் பூசப்பட்டு, அதே கண்ணோட்டத்துடன் சிலரால் பார்க்கப்படு கிறார்கள். (இப்படி ஈழத் தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது குறித்து அறிவு தனது நூலில் எழுதி யிருக்கிறார். விசாரணையில் இருந்த காலத்தில் ஒரு ஆய்வாளர், அறிவின் கன்னத்தில் அடித்து, ‘ஏனடா, என்ன துணிவு இருந்தால், கடல் கடந்து எங்கள் நாட்டுக்குள் வந்து, எங்கள் தலைவரை கொலை செய்வாய்?’ என்று அறிவை ஈழத் தமிழர் என்று நினைத்து கூச்சல் போட்டிருக்கிறார். அந்த ஆய்வாளர் பெயர் மோகன்ராஜ். சில மாதங்களுக்கு முன் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டுக்காக, அவரிடம் பேசினோம். அப்போது, இந்த சம்பவம் குறித்து கேட்டபோது, தனக்கு நினைவில்லை என்று கூறினார். 20 ஆண்டு காலத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி ஆய்வாளர் மோகன்ராஜ், வேலூர் சிறைக்குச் சென்று மூன்று பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, “நான் தூக்குத் தண்டனைக்கு எதிரானவன் அல்ல. ஆனால், இந்த வழக்கில், இம் மூவரைப் பொறுத்த வரை, இவர்கள் சதியில் தொடர்பில்லாதவர்கள் என்று எந்த நீதிமன்றத்திலும் வந்து கூறத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதை ‘இந்தியன் எக்ஸ்பிரசிடம்’ அவர் தெரிவித்தார்.)
வழக்கில், 2 மற்றும் 3வது குற்றவாளியாக்கப்பட்ட சாந்தன், முருகன் இருவருமே ஆன்மிகப் பாதைக்கு திரும்பிவிட்டனர். சிறையிலுள்ள கோயிலுக்கு சாந்தன்தான் பொறுப்பு. சபரிமலை போகும் காலங்களில் இருவருமே விரதம் இருக்கிறார்கள். முருகனின் மனைவி நளினி இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக்கப்பட்டவர். அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டது. முருகனின் கவலை எல்லாம் அவரது மகள் அரித்திரா எனும் மேகராவைப் பற்றித்தான். தப்பிக்க இப்போது முயற்சித்த காலத்தில், இவர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள். மகள் சிறைச் சாலைக்குள் பிறந்தவர். அரித்திரா அய்ரோப்பிய நாடு ஒன்றில் படிக்கிறார். “பெற்றோர்கள் ஆதர வின்றியே அவர் வளர வேண்டியவராகிவிட்டாரே என்பதே என் கவலை. மனம் தளர வேண்டாம் என்று நான் அவரிடம் கூறி வருகிறேன். “வாழ்க்கை சோதனையில் நாங்கள் தோற்றுவிட்டோம் அந்த நிலை என் மகளுக்கு நேரிடக் கூடாது” என்று கவலையை வெளிப்படுத்துகிறார் முருகன். விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சார்ந்தவர் என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இருமுறை இவரை மகள் சந்தித்திருக்கிறார். இறுதியாக சந்தித்தது 2006 ஆம் ஆண்டில்தான்.
தூக்குக் கொட்டடியில் இருக்கும் இவர்களுக்கு ஆதரவாக பலரின் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த வழக்கை தலைமையேற்று விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டி.ஆர். கார்த்திகேயன், உச்சநீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் (ஆனால், நளினியின் தூக்குத் தண்டனைக்கு எதிராக தீர்ப்பு எழுதியவர்) ஆகியோர் இவர்களுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்று கூறுகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதி முன்னாள் கேரள சட்ட அமைச்சர் வி.ஆர். கிருஷ்ணய்யர், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மாலனி மற்றும் கோலின் கோன்சால்வஸ் உள்ளிட்ட பலரும் இவர்களுக்காக வாதாடி தூக்குத் தண்டனையை எதிர்த்து வருகிறார்கள். சந்திப்புக்கான நேரம் முடிவுக்கு வந்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் நம்பிக்கையுடன் விடை பெற்றபோது கூறியது இதுதான் –
“சிறைக்கு வெளியே மீண்டும் சந்திப்போம்”.
– தமிழில் ‘இரா’
பேரறிவாளன் எழுப்பும் கேள்வி
1987 ஆம் ஆண்டில் தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு நடத்தப்பட்டதாலேயே நான் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டேன் என்றார் அறிவு. காவலில் விசாரணை கைதி தரும் ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிராக நீதிமன்றம் பயன்படுத்தக் கூடாது என்று 1872 ஆம் ஆண்டு இந்திய சாட்சிகள் சட்டம் கூறுகிறது. ஆனால் தடா சட்டமோ, காவலில் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்கலாம் என்று கூறுகிறது. தடா சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும்.
60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தடா சட்டம் கூறுகிறது. எனவே 59வது நாள் கடும் சித்திரவதைகளுக்குப் பிறகு, பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த வழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வராது என்பதால், தடா சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.பி.வாத்வா தனது தீர்ப்பில் கூறினார். ஆனால், ‘தடா’ சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தண்டனையை உறுதி செய்துவிட்டது.
இந்த கொலை சதி பற்றி சிவராசன், தனு, சுபா மூவருக்கு மட்டுமே தெரியும் என்று சி.பி.அய். தரப்பில் சான்றாதாரமாக முன் வைக்கப்பட்ட ஆவணம் கூறியது. அதற்கு நேர் மாறாக இந்த சதியில் எனக்குப் பங்கு உண்டு என்று தண்டனை வழங்கிவிட்டார்கள். நான் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட 9 வால்ட் பேட்டரி எல்லா கடைகளிலும் விற்கப்படுவதுதான்; எவருமே வாங்க முடியும்” – என்று தனது தரப்பின் நியாயங்களை விளக்கினார் ‘அறிவு’.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’
பெரியார் முழக்கம் 16022012 இதழ்