சாதி அமைப்பைத் தகர்க்காமல் புரட்சி மலராது: மாவோயிசப் பெண் போராளி கூறுகிறார்

பார்ப்பனர்கள் உருவாக்கிய சாதியமைப்பு இந்து மதத்தின் கோட்பாடாகி அதுவே சமூக அமைப்பாக கெட்டிப் படுத்தப்பட்ட நிலையில் சாதியமைப்பு தகர்க்கப்படாதவரை எந்த சமூகப் புரட்சியையும் கொண்டு வர முடியாது என்று பெரியாரும் அம்பேத்கரும் கூறினார்கள். சாதியக் கட்டமைப்பின் இறுக்கத்தைப் புரிந்து கொள்ளாத இடதுசாரிகள் வர்க்கப் போராட்டம் வெற்றிப் பெற்றால் சாதியை ஒழித்து விடலாம் என்றனர். இப்போது, தமிழ் தேசியம் பேசும் சில அமைப்புகள்கூட தமிழ் தேசியம் கிடைத்தால் சாதியை ஒழித்து விடலாம் என்கிறார்கள்.

சாதி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தாமலே தமிழ் தேசியத்தைக் கூர்மைப்படுத்திவிட முடியும் என்று கருதுகிறார்கள். இடதுசாரி கட்சிகள் சாதியப் பிரச்சனையைக் கடப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்ற முடிவுக்கு வந்து இந்தியாவில் வர்க்கமும் சாதியும் ஒன்றாகவே இருப்பதாகக் கூறி வருகிறார்கள். மார்க்சிய லெனினிய, மாவோயிச, புரட்சிகர குழுக்கள் நிலபிரபுத்துவ எதிர்ப்புப் புரட்சியை முன் வைக்கிறார்கள். ஆயுதம் தாங்கிய புரட்சியை முன்னெடுக்கும் மாவோயிச புரட்சியாளர்களும் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். இந்த இயக்கத்திலும் சாதிப் பிரச்சனைகள் விவாதத்துக்கு வந்துள்ளன.

தண்டகாரண்யா பகுதியில் பழங்குடி மக்களிடம் தங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அனுராதா காந்தி, இந்திய பொதுவுடைமை கட்சியின் (மாவோயிஸ்டு) தத்துவார்த்த சிந்தனையாளராகவும் களப் போராளியாகவும் செயல்பட்டவர். மலேரியா நோயில் மூளை பாதிக்கப்பட்டு, 12.4.2008 இல் 54 ஆவது வயதில் அவர் மரணமடைந்தார். தாம் சார்ந்துள்ள மாவோயிச இயக்கம், சாதியப் பிரச்னையில் சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று அவர் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளி வந்துள்ளது.

“மாற்றத்துக்கான எழுத்துகள்” என்ற தலைப்பில் அவரது கட்டுரைகள் ஆங்கிலத்தில் நூலாக வெளி வந்துள்ளது. நூலின் வெளியீட்டு நிகழ்வு அனுராதா நினைவுக் குழு சார்பில் ஏப்ரல் முதல் தேதி சென்னையில் நடந்தது. அந்த நூலில் “உழைக்கும் மக்களின் போராட்டம் சாதியமைப்புக்கு எதிரான போராட்ட இலக்கை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார். சாதியமைப்பை தகர்க்காமல் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்த முடியாது என்று கூறும் அவர், பகவத் கீதை, மனுஸ்மிருதி, பார்ப்பனத் திமிர், பூணூல் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு கருத்துகளை இயக்கமாகப் பரப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சாதி ஒழிப்புக்காக அவர் முன் வைத்துள்ள செயல் திட்டங்கள்:

  • புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கும் பாட்டாளி வர்க்கம் சாதிக்கு எதிரான போராட்டத்தை அதன் பிரிக்க முடியாத பகுதி என்பதை உணர வேண்டும்.
  • சாதியால் பின்னப்பட்ட நிலவுடைமை அதிகாரத்தைத் தகர்க்காமல் அரசியல் அதிகாரம் சாத்தியமில்லை.
  • ஒடுக்கப்படும் நிலமற்ற ஏழை விவசாயிகளின் மீட்சி ‘உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்’ என்பதை நடைமுறைப்படுத்துவதில்தான் உள்ளது.
  • மனுஸ்மிருதி, கீதை மற்றும் வேதங்கள் உணர்த்தும் சாதியப் பாகுபாட்டை அம்பலப்படுத்துவது மற்றும் பார்ப்பன சாதியத் திமிருக்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்துவதே இன்றைய தேவை.
  • பூணூல் அணிவது போன்ற அனைத்து சாதியச் சடங்குகளுக்கும் எதிரான போராட்டங்களை அயராமல் நடத்துவது.
  • சைவ உணவைச் சுத்தமானது; சுகாதாரமானது என்னும் பிரசாரத்தை எதிர்ப்பதோடு மாட்டுக்கறி, பன்றிக் கறி உண்பதற்கு எதிரான சமூக இழிவுப் போக்கையும் எதிர்க்க வேண்டும்.
  • சாதிய அடையாளங்களையும், சில சாதிகளை இழிவுபடுத்தும் சொல்லாடல்களையும் முறியடிக்கக் களம் காண வேண்டும்.
  • தலித் இன மக்களின் சுயமரியாதைக்காகவும் மதமாற்றம் மற்றும் கோயில் நுழைவுக்கான உரிமைக்காகவும் தோளொடு தோள் நின்று குரல் கொடுக்க வேண்டும்.
  • சாதிப் பாகுபாட்டை நிலைநிறுத்தும் வண்ணம் வழங்கப்படும் வீட்டுவசதித் திட்டங்களைப் புறந்தள்ள வேண்டும். சமபந்தி சாப்பாடு, பொதுக் கிணறு, உணவகம், விடுதி, கழிவறை ஆகியவற்றுக்குப் போராட வேண்டும்.
  • சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் மற்றும் அவற்றிற்கான சலுகைகளைக் கோரிப் பெற வேண்டும்.
  • சாதிப் பெயர்களைப் பயன்படுத்துவதையும் அரசு, தனியார் ஆவணங்களில் பதிவதையும் எதிர்க்க வேண்டும்.
  • பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்குப் பங்கம் நேரக்கூடிய வகையில் செயல்படும் ஒடுக்கப்பட்ட சாதித் தலைவர்களை அம்பலப்படுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஏழை எளிய மக்கள் சமூகத் தளத்தில் அவர்களின் சாதியைச் சார்ந்த பணக்காரர்களுக்கு இணையாகக் கருதப்படுவதில்லை. உண்மையில் அவர்களைப் பிறசாதிகளைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களே அரவணைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
  • நடைமுறையில் சாதி வெறியர்களாக உள்ள போலி கம்யூனிஸ்ட்டுகளை மக்களிடம் இனம் காட்ட கம்யூனிஸ்ட்டுகள் தவறக் கூடாது.
  • சாதிய மோதல் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கலவரத் தடுப்பு குழுக்களைக் கட்டமைக்க வேண்டும்.
  • பொருள் முதல் வாதக் கருத்துக்களையும், இறை மறுப்புக் கொள்கையையும் பரவலாக பரப்புரை செய்ய வேண்டும்.

(அனுராதா காந்தி நினைவுக் குழுவின் தமிழ் நாடு கிளை வெளியிட்டுள்ள சிறு வெளியீட்டில், அனுராதாவின் இந்த செயல் திட்டங்கள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன)

நூல் வெளியீட்டு நிகழ்வில் எஸ்.வி. இராஜதுரை, அகராதி வழக்கறிஞர் பானுமதி, கோவை ஈசுவரன், பம்பாய் வழக்கறிஞர் சூசன், சமூக ஆய்வாளர் ஆனந்த் டெல்டும்பே ஆகியோர் உரையாற்றினர்.

பெரியார் முழக்கம் 05042012 இதழ்

You may also like...