பெருமாள் மலையில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் கருப்புச் சட்டைகளின் வரலாற்றில் அழியா புகழ் கொண்ட பெருமாள் மலையில் நடந்தது. பெருமாள் மலைக்கு ஒரு வரலாற்று சிறப்பு உண்டு என்பது 1985 ஆம் ஆண்டு பக்தர்கள் சிலரால் கடவுளின் சக்தி என்ற முழக்கத்தோடு சென்னிமலை கோவில் படிக்கட்டில் மாட்டுவண்டி ஏற்றினார்கள். அதே சென்னிமலையில் இது கடவுளின் சக்தி அல்ல; மனித சக்தி தான் என்று கூறி பெரியாரிஸ்டுகள் மாட்டு வண்டி ஏற்ற முயன்றபோது காவல்துறை தடுத்தது. அதன் பின்னர் சென்னிமலையைவிட செங்குத்தான படிகளைக் கொண்ட பெருமாள்மலையில் தோழர்கள் மாட்டுவண்டி ஏற்றி கடவுள் சக்தி என்ற புரட்டை முறியடித்தனர். அத்தகைய சிறப்பு மலை பெருமாள் மலை பகுதிக்கு உண்டு.

கூட்டத்திற்கு பொ.இராசண்ணா தலைமையேற்க, மாவட்ட தலைவர் நாத்திகசோதி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். கிருட்டிணகுமார் வரவேற்புரை நிகழ்த்த, ஈசுவரமூர்த்தி, பகுத்தறிவாளர் பேரவை ப. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவை. இளவரசன், ‘மந்திரமல்ல தந்திரம்!’ என்ற நிகழ்ச்சியினை நடத்தி சாமியார்களின் மோசடிகளை விளக்கி உரையாற்றினார்.  அவரைத் தொடர்ந்து இரத்தினசாமி  (தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர்) உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் – ‘சாதி ஒழிப்பே சமூக விடுதலை’ என்ற தலைப்பில் சாதிகளின் இழிநிலை குறித்தும் அதன் மூலம் மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதையும் விளக்கினார்.

தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் கோபி வேலுச்சாமி உரை நிகழ்த்தினார். சோதிடர்களின் புரட்டுகளையும், கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளையும் விளக்கினார். மேலும் பெண்கள் சமூக சிந்தனை இல்லாமல் சின்னத் திரையில் அடிமைப்பட்டு கிடப்பதையும், அய்யப்ப பக்தர்களின் முட்டாள்தனத்தையும் விளக்கினார். இறுதியில் இராமமூர்த்தி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய கழகத் தோழர்கள் மற்றும் ஈரோடு ஒன்றிய கழகத் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்தினை அப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடைசி வரை கேட்டனர். கழக வெளியீடு புத்தகங்கள் ரூ.2500-க்கு விற்பனை ஆனது.

பெரியார் முழக்கம் 01032012 இதழ்

You may also like...