இந்தத் துணிச்சலுக்குப் பெயர்தான் பெரியார்
இந்தி எதிர்ப்புப் போரில் இளைஞர்கள், பெண்கள், அவர்களுடன் சில கைக்குழந்தைகள் என எல்லோரும் சிறை சென்றனர். இறுதியில் 1938 டிசம்பரில் பெரியாரும் சிறை புகுந்தார். அவர் சிறை சென்ற நாளில், தமிழ்நாடே ஆர்ப்பரித்து நின்றது. அப்போது அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் வரலாற்றுப் புகழ் பெற்றது. நீதிபதியின் முன்னால் நின்று, தன்னுடைய கூற்றை எழுதிப் படித்தார் பெரியார்.
“இந்த நீதிமன்றம் காங்கிரஸ் மந்திரிசபைக்குக் கட்டுப்பட்டதாக உள்ளது. நீங்களும் ஒரு பார்ப்பனர் வகுப்பைச் சேர்ந்தவர். எனவே இந்த நீதிமன்றத்தில் நான் நியாயத்தை எதிர்பார்க்கவில்லை” என்று வெளிப்படையாகக் கூறினார். இப்படி ஒருவர் எங்கேனும் நீதிமன்றத்தில் கூறியிருப்பாரா என்று தெரியவில்லை. இறுதியில் அவர் கூறியுள்ள வரிகள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. அந்த வரிகளை அப்படியே பார்க்கலாம்:
“எனவே கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம், எவ்வளவு அதிகத் தண்டனை கொடுக்கமுடியுமோ அவ்வளவையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு உண்டோ அதையும் கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை இத்துடன் முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.”
இந்தத் துணிச்சலுக்குப் பெயர்தான் பெரியார்!