விஞ்ஞானிகள்-உயரதிகாரிகள் அணுஉலை தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதால் அச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், அதுவரை, புதிய அணுஉலைகள் தொடங்க தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் விஞ்ஞானிகள், உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள் பொது நலன் வழக்கை தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழக்கை விசாரணைக்கு அனுமதித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும் அணுசக்தி தொடர்பான அமைப்புகளுக்கும் தாக்கீது பிறப்பித்துள்ளது.
‘பொது நலன்’அமைப்பின் இயக்குனர், ‘பொது நல வழக்கு மய்ய’த்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஈ.ஏ.எஸ்.சர்மா (எரிசக்தித் துறை முன்னாள் செயலாளர்), டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் (முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர்), பேராசிரியர் டி.சிவாஜிராவ் (ஆந்திர மாநில மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் உறுப்பினர்), என்.கோபால்சாமி (முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்), கே.ஆர்.வேணுகோபால் (பிரதமரின் முன்னாள் செயலர்), டாக்டர் பி.எம்.பார்கவா (தேசிய அறிவுசார் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்), அட்மிரல் லக்ஷ்மிநாராயணன் இராமதாசு (முன்னாள் கடற்படை தளபதி), சுர்ஜித் தாஸ் (உத்தரகாண்ட் மாநில முன்னாள் தலைமை செயலாளர்), டாக்டர் பி. விஷ்ணுகாமத் (பெங்களூர் பல்கலை வேதியல் பேராசிரியர்), டாக்டர் கே. பாபுராவ் (வேதிய தொழில்நுட்ப நிறுவன மூத்த விஞ்ஞானி), பேராசிரியர் என்.வேணுகோபால்ராவ் (முன்னாள் ஆந்திர விவசாய பல்கலை பேராசிரியர்), டாக்டர் என்.பாஸ்கர்ராவ் (ஊடக ஆய்வு மய்ய நிறுவனர்), எஸ்.கே. கவுசுபாட்சா (ஆந்திர விஞ்ஞான கழகம்) ஆகியோர் இணைந்த இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
பெரியார் முழக்கம் 29032012 இதழ்