தாம்பரம் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் உரை சேது சமுத்திரத் திட்டம்: ஜெயலலிதாவின் இரட்டை வேடம்

ஆடம்ஸ் பாலத்தை ராமன் பாலம் என்று இந்துத்துவ பார்ப்பன சக்திகள் கூறி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மதவெறி கருத்துகளையே முன் வைத்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்திவிட்டு, ‘ராமன் பாலத்தை’ இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மத்திய அரசிடம் உச்சநீதி மன்றம் கருத்து கேட்டுள்ளது. இந்த நிலையில் ‘இராமன் பாலத்தை’ தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி, தனது பார்ப்பன இந்துத்துவா ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இதே ஜெயலலிதா கடந்த காலங்களில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து அமுல்படுத்தக் கோரி தேர்தல் அறிக்கைகளில் கூறியதையும் ‘ராமன் பாலம்’ என்ற கற்பனைக்கு எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லை என்பதையும் விளக்கி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து:

இந்தப் பிரச்சனையின் பின்னணி உங்களுக்குத் தெரியும். பல காலமாக இந்த செய்தி பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும்கூட இந்த பிரச்சனை எப்போது முன்னுக்கு வந்தது என்றால், 2002 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற வைஷ்னவா நியூஸ் நெட் ஒர்க் என்ற இணைய தளத்தில் ஒரு செய்தி போடப்பட்டது.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடை யில் இருக்கின்ற மணல் திட்டு என்பது, நாசாவால் ஆய்வு செய்யப்பட்டது. அது 17 லட்சத்து 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கிறது என்று நாசா ஆய்வு நிறுவனம் கூறியதாக செய்தி போட்டிருந்தார்கள். (நாசா என்பது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்) இந்த செய்தி வெளியிட்ட திலிருந்து தான் இந்த பிரச்சனை தொடங்கியது என்று கூறலாம்.

பி.டி.ஐ. (பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா) என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் உண்மையை அறியாமல் அதை மற்றப் பத்திரிகைகள் எல்லாம் வெளியிட்டு விட்டன.

பகுத்தறிவு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இணையதளத்தில் வந்திருக்கும் இந்த செய்தி உண்மை தானா என்று கேட்டு, நாசாவுக்கு கடிதம் எழுதினார்கள். ‘நாசா’ தனது பதிலில், “விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டிருப்பது உண்மை. ஆனால், அது கடவுளால் உருவாக்கப்பட்டதா, அல்லது மனிதர்களால் உண்டாக்கப்பட்டதா என்பதெல்லாம் தெரியவில்லை. அந்தப் படங்கள் எங்களுடையது, அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் விளக்கம் எங்களுடையதல்ல” என்று நாசா ஆய்வு மையத்தைச் சார்ந்த அதிகாரி மார்க் ஹெஷ் என்பவர் சொன்னார். அவர் சொன்ன மறுப்பும் பத்திரிகையில் வந்தது. ஆனால் முதலில் வந்த செய்தியை (இராமன் கட்டிய பாலம்) எந்த அளவிற்கு பெரிதாக போட் டார்களோ அந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த மறுப்பு பெரிதாக வராமல், ஏதோ ஒரு மூலையில் சிறியதாக போட்டுவிட்டார்கள். எனவே அந்த மறுப்பு வந்ததே பலருக்கும் தெரியவில்லை.

இதேபோல் இதற்கு முன்பு வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி என்ற ஒரு ஆறு பூமிக்கு அடியில் இருப் பதாகவும், அதை நாசா படம் எடுத்திருப்பதாகவும் சொன்னார்கள். இதேபோல் நாசாவின் பெயரைச் சொல்லி பல பித்தலாட்டங்களை பரப்பி வந்தார்கள். 1998 இல், “கணினிக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் என்று நாசா ஆய்வு செய்து சொல்லியிருப்பதாகவும், அதை நாசாவைச் சார்ந்த ரிக் பெட்ஸ் என்ற விஞ்ஞானி சொன்னதாகவும் சொன்னார்கள். அப்போதும் இதேபோல் நாசாவுக்கு விவரம் கேட்டு கடிதம் எழுதப்பட்டது. இது பொய்ச் செய்தி, யாரும் நம்ப வேண்டாம், எங்கள் நிறுவனத்தில் ரிக் பெட்ஸ் என்ற பெயரில் யாரும் இல்லை என்று நாசா பதில் அளித்தது.

1999 இல் இன்னொரு பித்தலாட்டம்… என்.எஸ். இராஜாராம் என்பவரும், டாக்டர் நட்வர்ஜா என்பவரும் சேர்ந்து, சிந்துவெளியில் இருக்கின்ற நாகரிகத்தைப் பற்றி ஆய்வு செய்வதாகச் சொல்லி, சிந்துவெளியில் இருக்கின்ற முத்திரையான காளைமாட்டு சின்னம் உள்ள ஒரு பிளேட்டை எடுத்து, அதில் உள்ள மாட்டின் திமிலை கொஞ்சம் மறைத்து, இது குதிரை, குதிரை அங்கு இருப்பதால், ஆரியர்கள் அங்கு வந்த பின்னால்தான் சிந்து சமவெளி நாகரிகம் உருவானது. காரணம், குதிரை இந்தியாவின் பரம்பரை விலங்கு அல்ல, ஆரியர்களின் வருகையின்போது ஆரியர்களால் கொண்டு வரப்பட்ட மிருகம் குதிரை. எனவே சிந்துவெளி நாகரிகத்தில் ஆரியர்களின் பங்கும் உண்டு என்று சொன்னார்கள். அதேபோல் சிந்துவெளியில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கிறது என்றும் சொன்னார்கள். (சிந்துவெளி நாகரிக காலம் கி.மு.4500/6000 என்று சொல்கிறார்கள். சமஸ்கிருதம் உண்டானதே ஒரு 2000/2500 ஆண்டுகளுக்கு முன்னர்தான்) சிந்து சமவெளி நாகரிக காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழியே தோன்றவும் இல்லை என்று, ஹார்வார்டு பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மைக்கேல் விட்ஸல் என்ற சமஸ்கிருத பேராசிரியர் சொன்னார். அதேபோல் மற்ற ஆய்வாளர்களும் ஆய்வு செய்து, அது காளை மாட்டின் சின்னம் தானே தவிர குதிரையின் சின்னம் அல்ல என்று சொன்னார்கள்.

பிறகு இதே மோசடி கருத்துகளை சேது சமுத்திர திட்டத்திலும் பரப்பினர். இத்திட்டம் ஏன் அவசிய மானது என்றால் மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் அனைத்தும் ஆப்பிரிக்காவைச் சுற்றித் தான் இங்கு வரவேண்டும். இந்தியாவில் இருந்து, சென்னைக்கு வருவதாக இருந்தாலும், கொழும்புக்குச் சென்று அதை சுற்றிக் கொண்டுதான் இங்கு வர முடியும். ஏனென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தி (பாக் நீர் இணை) ஆழம் குறைவான கடல் இதை பிரிட்டிஷ்   கப்பல் படையைச் சார்ந்தவர்கள் சுட்டிக் காட்டியதால் அது பற்றி 1860-லிருந்து, நிறைய ஆய்வுகள் நடந்து இருக்கின்றன. இந்திய விடுதலைக்குப் பின்னர் 1960, 61 இல் இருந்துதான் வேகமாக அதைப் பற்றி பேசத் தொடங்கினார்கள். இருந்தாலும் ஐந்தாண்டு திட்டங்களில் சேர்க்கப்பட வில்லை. 2002க்கு பிறகுதான் அதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில்தான் அதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

கடலில் புதிய பாதை அமைக்க வேண்டும். ஆனால் நடுவில் மணல் திட்டு இருக்கின்றது. இங்கு மட்டும் அல்ல, உலகம் முழுவதும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் பல மணல் திட்டுகள் உள்ளன. 1961 இல் மண்டபம் அருகே நிலத்தை வாய்க்காலாக தோண்டி அந்தப் பக்கமாக செல்லலாம் என்று முதலில் ஒரு ஆலோசனை சொல்லப்பட்டது. இதற்கு அதிக செலவு ஆகுமென கருதி இராமேஸ்வரத்தில் இருந்து செல்லலாம் என்று சொன்னார்கள். இராமேஸ்வரத்தில் கோதண்டசாமி கோவில் உள்ளது. அங்கு தான் விபீசணனுக்கு இராமன் பட்டம் சூட்டினான் என்று கூறி அந்தக் கோவிலை இடிக்கக் கூடாது என்று 1963 வாக்கில் ஒரு பிரச்சனை வந்தது. எனவே இதுவும் கைவிடப்பட்டது. பிறகு மூன்றாவது பாதை, நான்காவது பாதை என்று பார்க்கின்றபோது, எல்லா இடங்களிலும் ஒன்று பவளப் பாறை பாதிக்கப்படும், அல்லது அந்த வழியில் உள்ள நீரியல் தாவரங்கள் பாதிக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆய்வாக நடத்தி இப்போது ஆறாவது பாதை வழியாகத்தான் கால்வாய் வெட்டப்படுகின்றது. இந்த ஆறாவது பாதையை ஆய்வு செய்வதற்காக 2002 இல் (மேலே சொல்லப்பட்ட பி.டி.ஐ. செய்தி, அதன் மறுப்பு ஆகியவற்றிற்குப் பின்னால்) அப்போதைய கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சர் பா.ஜ.க.வைச் சேர்ந்த உமாபாரதி, இந்தியாவின் புவியியல் ஆய்வுத் துறைக்கு இத் திட்டம் பற்றி ஆய்வு செய்யும்படி கடிதம் அனுப்பினார்.

2002 செப்டம்பர் மாதம் கடிதம் அனுப்பி 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆய்வு செய்தார்கள். நான்கு கி.மீ.க்கு ஒரு இடம் என்ற வீதத்தில், மொத்தம் பதினான்கு இடங்களில் போர் (ஆழ் துளை) போடுகிறார்கள். அதன் மூலம் எடுக்கப்பட்ட மண்ணை ஆய்வு செய்து, இது இயற்கையான மணற்திட்டு என்றும், இராமேஸ்வரம் இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான பகுதி என்றும், அதற்கு கீழே உள்ள பகுதிகள் சமீபத்தில் மெல்ல மெல்ல பத்தாயிரம், ஐந்தாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான பகுதிகள் என்றெல்லாம் அறிவித்தார்கள். அங்கு இருப்பது மணல், பவளப் பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் ஆகிய மூன்றும் தான். எனவே இந்த ஆறாவது பாதையில் கால்வாய் அமைப்பதால், சுற்றுச் சூழ லுக்கோ, கடல்வாழ் உயிரினங்களுக்கோ, கடலின் சூழலுக்கோ ஆபத்தில்லை என்று, இந்திய கடல் எல்லையில் நடத்திய அந்த 2003 ஆம் ஆண்டு ஆய் வறிக்கையில் பரிந்துரை செய்தார்கள். விண்ணியல் ஆய்வு துறையினரும் ஆய்வு செய்தார்கள்.

இறுதியாக தேசிய சுற்றுச் சூழல் அமைப்பிற்கு அனுப்புகிறார்கள். இப்படி பல துறைகள் ஆய்வு செய்துதான் இந்த ஆறாவது பாதையை தேர்ந்தெடுத்தார்கள்.

வாஜ்பேயி பிரதமராக இருக்கும்போது, இந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்காக முன்னூறு கோடி ரூபாய்  நிதியும் ஒதுக்கப்பட்டது. (தற்போது இதற்கு ஆகும் செலவாக திட்டமிடப் பட்டுள்ள தொகை 2427 கோடி ரூபாய்) மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வந்ததற்கு பின்னால், அப்போது கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோரெல்லாம் வந்து இத் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

2001 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா, “இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கில் இருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத் திட்டத்தின்படி இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில், கப்பல் போக்குவரத்திற்கு தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம். சேது சமுத்திர திட்டத்தால் நம்நாடு மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசிய நாடுகளும், கடலோர பகுதியில் அமைந்துள்ள நாடுகளும் பயனடையும். வாணிபமும் தொழிலும் பெருகும். அன்னிய முதலீடு அதிகரிக்கும். அன்னிய செலவாணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயணத் தூரம் வெகுவாக குறைவதால், எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, இராமநாதபுரம் போன்ற மிக மிக பிற்படுத்தப்பட்ட தமிழக தென்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சியடையும்” என்று அந்த அறிக்கை கூறியது.

2004 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில்… “நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்த தொழில் மேம்பாடடிலும், முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க, மைய ஆட்சி பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருக்கும்.  தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கு அறியும். இத் திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று, அமையவிருக்கும் மைய அரசை கழகம் வலியுறுத்தும்” என்றும் ஜெயலலிதா சொன்னார்.

ஆக, திட்டத்தை மத அடிப்படையில் இப்போது எதிர்க்கிற பா.ஜ.க. ஆட்சியில் தான் திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது எதிர்க்கின்ற ஜெயலலிதாவும் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் திட்டத்தை வலியுறுத்தியவர்தான். அதுவும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றுதான் சொல்லப்பட்டிருந்தது, இராமர் பாலம் என்றல்ல.

தற்போதைய விவகாரத்தின் தொடக்கமே சுப்ரமணிய சாமியின் வழக்கு மனு தான் . இந்திய அரசியல் சட்ட 49 பிரிவின்படி, இந்த இராமர் பாலம் என்பதை, இந்தியாவின் பழமையான ஒரு நினைவுச் சின்னம் என்பதை ஏற்றுக் கொண்டு, அதை பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், சுப்பிரமணியசாமி ஒரு வழக்குப் போட்டார். (இதற்கு முன்னரே 2005 ஆம் ஆண்டு முதல் ஜார்ஜ் பெர்னாண்டர்ஸ், சுவாமி ஓம்காரநந்தா, இராமகோபாலன், உட்பட பலர் வழக்குத் தொடுத்தார்கள்) வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாச இராமாயணத்திலும், இராமரின் வரலாறு சொல்லப்பட்டிருக்கின்றது. அதில், சீதையை மீட்பதற்காக இராமர் பாலம் கட்டிப் போனார் என்றும் சொல்லப்படுகின்றது. அது திரேதா யுகத்தில் பதினேழு லட்சத்து ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. அந்தப் பாலத்தை நினைவு சின்னமாக அறிவித்து, அதை காப்பதற்கான முயற்சியில் இந்திய அரசு ஈடுபட வேண்டும் என்பதுதான் சுப்ரமணியசாமியின் மனு.

உச்சநீதிமன்றத்தில் இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, தொல்லியல் ஆய்வு துறைக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டது. ‘திரேதாயுகம்’ என்று சொல்லப்படும் காலத்தில் மக்கள் வாழ்ந்தார்களா? இல்லையா? என்று பல ஆய்வுகள் நடந்தன. இவர்கள் கூறும் திரேதாயுகத்தில் கார்பன் டேட்டிங் என்று ஒரு ஆய்வு முறை உள்ளது. அந்தப் பகுதி பொருளை எடுத்து எரித்து அந்த கரியை ஆய்வு செய்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது என்று சொல்ல முடியும். இமயமலை ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்று ஒரு செய்தி உண்டு. பூமியில் ஒவ்வொரு கண்டங்களும் தனித் தனி பிளேட்டுகளாக உள்ளது. அவை ஒன்றோடொன்று இடிக்கும்போது இமயமலை உயர்ந்தது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இமயமலையின் மேல் சென்று அங்குள்ள கடல்வாழ் உயிரினங்களின் எலும்புத் துண்டுகள் முதலானவற்றை ஆய்வு செய்து இதை நிரூபிக்க முடியும். எனவே தொல்லியல் துறை இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் வந்தது.

வால்மீகி இராமாயணமோ, துளசி தாச இராமாயணமோ சொல்லுகிறபடி, நிகழ்ச்சிகள் நடந்ததாகவோ, அதில் சொல்லப்படுகிற கதாபாத்திரங்கள் இருந்ததாகவோ தெரியவில்லை என்று தொல்லியல் துறை கூறியது. எங்கள் ஆய்வின்படி, அது இயற்கையாக அமைந்த ஒரு அமைப்பே தவிர, மனிதரால் உண்டாக்கப்பட்டதல்ல என்று தொல்லியல் துறை உச்சநீதிமன்றத்தில் கூறியது.  பாலத்தைப் பற்றி எது சொன்னாலும் பரவாயில்லை, இராமனே இல்லை என்று சொல்வதா? என பி.ஜே.பி. பிரச்சனையை கிளப்பியது. அப்போது குஜராத்தில் தேர்தல் வரவிருந்ததால் மத்திய அரசு பயந்து பின்வாங்கிக் கொண்டது. அந்த மனுவை திரும்பப் பெற்றதுடன், தொல்லியல் துறையைச் சார்ந்த ஆய்வாளர்கள் இருவரை பணி இடை நீக்கம் செய்தது மன்மோகன் ஆட்சி. மூன்று மாதம் காலக்கெடு கேட்டார்கள். (மூன்று மாதத்தில் தேர்தல் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்)

இது குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றபோது, ஈரோட்டில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், இராமன் என்று ஒருவன் இருந்தானா? அவன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து, பாலம் கட்டினான்? என்று கலைஞர் கருணாநிதி பேசினார். இராமர் என்று சொல்லாமல் இராமன் என்று மரியாதை இல்லாமல் சொல்லுகிறாரே? இவ்வளவு பெரிய தலைவருக்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லையே? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். சிவன், கிருஷ்ணன் என்பதை சிவர், கிருஷ்ணர் என்றா கூறுகிறோம்? பிறகு இது அரசியல் ஆக்கப்பட்டது. இராம் விலாஸ் வேதாந்தி என்ற ஒருவர், கலைஞர் கருணாநிதியின் நாக்கை அறுக்க வேண்டும், தலையை வெட்ட வேண்டும், எடைக்கு எடை தங்கம் பரிசு என்றெல்லாம் பேசினார். கருணாநிதியின் தலையைக் கொண்டு வந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு என்று பெங்களூரில் இருக்கும் மார்க் தர்ஷன் மண்டல் (விஸ்வ ஹிந்து பரிசத் இன் வழிகாட்டி அமைப்பு) தலைவர் விஜயகுமார் ரெட்டியும் அறிவித்தார். இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஏடுகளிலும் வெளி யானது. ஆனால் தமிழ்நாட்டில் இராம்விலாஸ் வேதாந்தி சொன்னதைப் பற்றி மட்டும் பேசப் பட்டது. அது குறித்து கேட்டதற்கு… “ஆம் சொன்னது உண்மைதான், தெய்வ நிந்தனை பேசுபவன் நாக்கை அறுக்க வேண்டும், கழுத்தை வெட்ட வேண்டும் என்றுதான் மனுதர்மமும் சொல்கிறது. சட்டம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், நான் சாஸ்திரத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவன். இப்போதும் அதையே சொல்கிறேன்” என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 05042012 இதழ்

You may also like...