பொள்ளாச்சியில் கராத்தே போட்டி: இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
பொள்ளாச்சி கராத்தே கழகம் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் போட்டி பொள்ளாச்சியில் பல்லடம் ரோடிலுள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் வந்தனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த 2 கராத்தே வீரர்கள், பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதை அறிந்த பொள்ளாச்சி நகர பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் ம.தி.மு.க.வினர் கராத்தே போட்டி நடத்தும் நிர்வாகிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எக்காரணம் கொண்டும் இலங்கை வீரர்கள் இங்கு வரக்கூடாது. எங்கள் எதிர்ப்பையும் மீறி அவர்கள் பொள்ளாச்சி வந்தால் மீண்டும் இலங்கை செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தனர்.
இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள், ‘நீங்கள் பொள்ளாச்சி சென்று கராத்தே போட்டியில் பங்கேற்கக் கடும் எதிர்ப்புள்ளது. எனவே இங்கிருந்து திரும்பி விடுங்கள்’ என்றனர். அதன் பேரில் அவர்கள் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர்.
பெரியார் முழக்கம் 26072012 இதழ்