மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி

உலகத்தைப் “படைத்த” பிர்மா, தனது தலையிலிருந்து ‘பிராமணனை’யும், தோளிலிருந்து ‘சத்திரியனை’யும், தொடையிலிருந்து ‘வைசியனை’யும், காலிலிருந்து ‘சூத்திரனை’யும்  படைத்ததாக ‘மனுசாஸ்திரம்’ கூறுகிறது. பிறப்பின் அடிப்படையிலே மனுதர்மம் கற்பித்த இந்த ஏற்றத் தாழ்வுகளை, சாதியமைப்பு உள்வாங்கிக் கொண்டது. சாதியமைப்பு,

‘மனு சாஸ்திரத்தை’ அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகிறது. இதன் காரணமாகவே சாதிப் பிளவுகள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. சாதி மாறி திருமணம் செய்து விட்டால், சாதிச் சமூகமும், சாதிக் குடும்பமும் துள்ளிக் குதிக்கின்றன. வாழத் தகுதியற்றவர்களாக்கி, மரண தண்டனை வழங்கவும் குடும்பத்தினரே முற்படுகின்றனர்.

‘பிர்மா’ தனது உடலையே ‘தலை’, ‘தோள்’, ‘தொடை’, ‘கால்’களை ஏற்றத் தாழ்வுக்கு உள்ளாக்கிய இந்த சமூகக் கொடுமை, மனித உடலுக்குள்ளேயே கூறு போடும் இந்த ‘சமூக வக்கிரம்’ சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அதுவே ‘மனித நேயம்’ என்பதற்கு சான்றாக இப்போது ஒரு உள்ளத்தை நெகிழச் செய்யும் செய்தி வந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் படித்த மாணவி சரண்யா, தனது தோழர்களுடன் காரில் சென்றபோது, லாரி மோதியதில் தலையில் அடிபட்டு மூளைச் சாவுக்கு உள்ளாகி விட்டார். இவர் உடன் வந்த 5 தோழர்களும் மரணமடைந்துவிட்டனர். கடந்த மார்ச் மாதம் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற சரண்யா, ‘இன்போசிஸ் மென் பொருள்’ நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சமூகப் பணிகளில் துடிப்புடன் செயலாற்றிய சரண்யா மறைவுக்கு செலுத்தும் சரியான மரியாதை, அவரது உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதே என்ற சரியான முடிவை அவரது பெற்றோர்கள் எடுத்தனர். சரண்யாவின் ஈரல், இரு இருதய வால்வுகள், இரண்டு கண்கள் எடுக்கப்பட்டன.

மூளைச்சாவுக்கு உள்ளானவர்கள் உடல் உறுப்புகள் 48 மணி நேரத்துக்குள் பொருத்தப்பட வேண்டும். சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விமானத்தில் கோவை சென்று, விமானம் வழியாக உடல் உறுப்புகளை கொண்டு வந்து, தனது மருத்துவமனையிலும், வேறு சில தனியார் மருத்துவமனையிலும் 7 நோயாளிகளுக்கு உறுப்புகளைப் பொருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு தரப்பட்டுள்ளது. சரண்யா பிறந்த சாதியைச் சேர்ந்த நோயாளிகளைத் தேடிப் பார்த்து இந்த உறுப்புகள் பொருத்தப்படவில்லை. இவை தேவைப்படுவோரை தேர்வு செய்தே இந்த உறுப்புகள் பொருத்தப்பட்டன.

கடவுளின் தலை, தோள், தொடை, காலில் – ஏற்றத் தாழ்வுகளை நிர்ணயித்த பார்ப்பன மனு வாதத்துக்கு விழுந்த சரியான ‘மரண அடி’யை சரண்யாவின் கண்களும், இருதய வால்வுகளும், ஈரல்களும் தந்துள்ளன.

மரணத்திலும் 7 பேருக்கு மறு வாழ்வு தந்துள்ளார் சரண்யா. அதே நேரத்தில் மரணத்தின் புதை குழிக்குள் ஆழப் புதைக்கப்பட வேண்டியது ‘மனுதர்மம்’ என்பதையும் நிரூபித்துள்ளார்.  சாதி விட்டு சாதி திருமணம் செய்து விட்டால் வெட்டறிவாளையும், பட்டாக் கத்தியையும் தூக்கிக் கிளம்பும் சாதி வெறிக் கூட்டங்களே! இந்த மனித நேயத்தைக் கண் திறந்து பாருங்களய்யா!

பெரியார் முழக்கம் 12072012 இதழ்

You may also like...