சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வெறுப்பை வளர்க்கும் சாதிய வாழ்க்கைக்கு முடிவு கட்டுவோம்

பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் கழகத்தின் 15 நாள் பரப்புரை இயக்கம் தொடங்கியது

உசிலம்பட்டியில் சாதி வெறியர்கள் கல்வீச்சில் தோழர் படுகாயம்; சலசலப்புகளுக்கு அஞ்சாமல் பயணம் தொடருகிறது

இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு போன்றவற்றிற்கு எதிராக பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், இந்த ஆண்டு ஊர் – சேரி என்று இருப்பதற்கு எதிராக, பரப்புரை பயணத்தை துவங்கியுள்ளது. அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், சாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கழகம் பயணத்தை துவங்கியது.

தாழ்த்தப்பட்டவர் மத்தியில் மட்டுமே பேசிய சாதி ஒழிப்பு இயக்கங்களுக்கு மாறாக, பிற்படுத்தப் பட்டவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, அவர்களிடத்திலே தீண்டாமை கொடுமைகளை விட்டொழிக்குமாறு வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பரப்புரை செய்து வரும் கழகம், இவ்வாண்டு தாழ்த்தப்பட்ட அமைப்புகளோ, சாதி ஒழிப்பு அமைப்புகளோ இதுவரை நுழைய முடியாத ஊர்களுக்கும் செல்வது என்று புறப்பட்டுள்ளது.

முதல் இரண்டு நாட்கள் எந்த இடையூறும் இல்லாமல் நடந்த பரப்புரை மூன்றாவது நாளான 16.4.2012 திங்கள்கிழமை அன்று இரவு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிரச்சாரத்தை துவக்கியவுடன் தோழர்கள் மீது மர்மநபரால் கல் வீசப்பட்டது. இராவணன் இடது கை மணிக்கட்டு அருகே பலமான காயம் ஏற்பட்டது. பாது காப்புக்காக இருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், இராவணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அதன் பின்னரும் தோழர்கள் அஞ்சாமல், எந்தவிதமான சலசலப்பும் இல்லாமல், எந்தவிதமான தடைகள் வந்தாலும், நமது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்ற உறுதியோடு பரப்புரை பணிகளை நிறுத்தாமல் செய்தனர். தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு.நாகராசு, சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வெறுப்பை வளர்க்கும் பார்ப்பனிய  அமைப்பான சாதியைவிட்டு ஒழிக்க வலியுறுத்திப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். சிலர், கழக வெளியீடுகளை வாங்கியும் சென்றனர். சாதி ஒழிப்பு சம்பந்தமான பிரச்சாரம் அந்த பகுதியில் இவ்வளவு நேரம் நடந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தகுந்தது.

பயணம் துவங்குவதற்கு முதல் நாளான 13.4.2012 அன்று இரவே பயணத்தில் பங்கேற்கும் தோழர்கள் அனைவரும் திண்டுக்கல் கருந்தினை இல்லம் வந்து சேர்ந்தனர். அடுத்த நாள் காலை ஒரு தனி சிற்றுந்தில் ஒலி பெருக்கிகளை அமைத்து பரமக்குடி நோக்கிப் புறப்பட்டனர். தியாகி இமானுவேல் சேகரன் பேரவை (தி.இ.பே) தோழர்களால் பயணக் குழுவினர் வரவேற்கப்பட்டனர். பரமக்குடி தேவேந்திர பண்பாட்டு கழக திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகி இமானுவேல் சேகரன் பேரவை பொதுச் செயலாளர் சந்திரபோசு மற்றும் அந்த அமைப்பைச் சார்ந்த சுமார் 20 பெண்கள் உள்பட 50 தோழர்கள், கழகத் தோழர்கள், பயணக் குழுவினர் என 80 தோழர்கள் மாலை 6 மணிக்கு, தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் திரண்டு சாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். கழகத் தலைவர் உறுதிமொழியை சொல்ல, அதை அனைவரும் வழிமொழிந்தனர்.

இரவு 7 மணிக்கு பரமக்குடி காந்தி சிலை அருகே பரப்புரையின் துவக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பறை முழக்கத்துடன் துவங்கிய இப்பொதுக் கூட்டத்தில் தி.இ.பே. தோழர் சந்திரசேகர், சாதி ஒழிப்புப் பாடல் ஒன்று பாடினார். தோழர்கள் திருச்சி புதியவன், சூலூர் வீரமணி, வெள்ளமடை நாகராசு ஆகியோர் உரையாற்றி யதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் பெரியார் குணாஹாசன், தந்தை பெரியாரின் அடிப்படை கொள்கை சாதி ஒழிப்பு, அதற்காகவே அவர் கடவுள் மறுப்பு பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை விளக்கி உரையாற்றினார்.

பரப்புரை பயணத்தை துவக்கி வைத்து உரையாற்றிய சந்திரபோசு, ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து சாதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. நமது முன்னேற்றத்திற்கு, அடிப்படையில் சாதி தடையாக இருக்கிறது என்பதை விளக்கிப் பேசியதோடு, கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு, ஈழப் பிரச்சினை ஆகிய பிரச்சினைகளில் நாம் போராடி வெற்றிப் பெறாமல் போனதற்கு காரணம், நாம் சிறு சிறு சாதி குழுக்களாக பிரிந்து கிடப்பதே என்றும் தெளிவுபடுத்தினார். தமிழராய் ஒன்றிணைவோம் என்று கூறுகிற எந்த பிற்படுத்தப்பட்ட தமிழ் தேசியவாதிகளும், தீண்டாமை கொடுமைகளைப் பற்றி பேச முன் வரவில்லை என்றும், ஈழத்தில் இருக்கும் தமிழன் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர்கள், தமிழ்நாட்டில் பரமக்குடியில் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஒரு சிலரைத் தவிர, பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து, இட ஒதுக்கீடு கொள்கை சந்தித்த நெருக்கடிப் பற்றியும், அதற்காக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே முதன்முதலாக திருத்து வதற்கு காரணமாய் இருந்தவர் பெரியார் என்பதையும் விளக்கிப் பேசினார். சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காக சட்டமா? என்ற கேள்வி எழுந்தபோது, மக்களுக்காக தான் சட்டம் இருக்க வேண்டும், சட்டத்தையே எரிப்பேன் என்று சொன்ன பெரியாருக்கு, பின்பு நமக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லை. இன்று பெரியார் திராவிடர் கழகம் சாதியை ஒழிக்கப் போராடுகிறார்கள் என்றால் அன்று பெரியாருக்கு பின்னால் லட்சக்கணக்கில் திரண்ட சூத்திரர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள் இன்று போராட முன் வரவில்லை. காரணம் அன்று பிற்படுத்தப் பட்டவர்கள் அனுபவித்த கொடுமைகள் பெரியாரின் முயற்சியால் நீங்கியது. எனவே, இவர்களுக்கு பெரியாரின் இயக்கங்கள் இன்று தேவைப்படவில்லை. எல்லோரும் தங்கள் சொந்த சாதியில் இணைந்து கொள்கிறார்கள் என்று குறிப்பிட்ட சந்திரபோசு, அப்படி இவர்கள் இணையும் சொந்த சாதி அவர்களுக்கு பாதுகாப்பாகவா இருக்கிறது? என்ற கேள்வியை முன் வைத்தார். எனவே அனைவரும் சாதியை விட்டொழித்து வாருங்கள் என்று பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும், பயணக் குழுவிற்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தும் உரையை நிறைவு செய்தார்.

நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இப் பயணத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருக்கும் இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டத்தின் போதும், இரட்டை சுடுகாடு களுக்கு எதிராக பரப்புரை செய்து, இதை தடுக்காத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்து மூடும் போராட்டத்தின் போதும் கழகத்தினர் தான் கைது செய்யப்பட்டனர். அந்தக் கொடுமைகள் அப்படியே நீடிக்கிறது என்றாலும், இந்தப் பிரச்சினைகள் ஆங்காங்கே விவாதத்திற்கு வந்திருக்கிறது. மக்கள் கவனத்திற்கு நாம் எடுத்துச் சென்றுள்ளோம். எனவே இப்பயணத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் நியாயங்களை முன் வைப்போம். அதேபோல கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வன்கொடுமை சம்பந்தமான மேல் முறையீட்டு வழக்கில் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் பல்வேறு தீண்டாமை கொடுமைகள் இருக்கிறது என்றும் இதை தடுக்காத மாவட்ட ஆட்சியர் மீதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள். இதன்படி நாம் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க முடியும். இறுதியாக தோன்றியது முதலில் மறையும் என்பது சமுதாய விதி. எனவே இறுதியாக தோன்றிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக பரப்புரை செய்வோம் என்று தெரிவித்தார்.

தி.இ.சே. பேரவையின் மாநிலச் செயலாளர் ச.இராசு, சி.தே.சிங்குராசா, முனியாண்டி, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத் தலைவர் அ.நடராஜன், தலைமை கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் தாமரைக் கண்ணன், மதுரை முருகேசன், வழக்கறிஞர் பெரியசாமி, சேகர், மன்னார்குடி, காளிதாசு, சிவகங்கை மாவட்ட கழகத் தோழர்கள் நா.முத்துக்குமார், சி.ராசீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

15.4.2012 அன்று மதுரை மேலவளவு முருகேசன் நினைவிடத்தில் சாதி ஒழிப்பு உறுதி மொழியேற்ற பயணக் குழு இதுவரை மேலூர், திருப்பரங்குன்றம், செக்கானூரணி, சோழவந்தான், உசிலம்பட்டி, தேனி ஆகிய பகுதிகளில் பரப்புரை நடத்தியுள்ளது.

முதலில் தோழர்கள் பறை முழக்கம் எழுப்புவது, தொடர்ந்து மேட்டூர் முத்துக்குமார், சாதி ஒழிப்பு பாடல் பாடுவது, அடுத்து கருத்துரை என்ற முறையில் பரப்புரை நடைபெற்று வருகிறது.தோழர்கள் துண்டறிக்கை விநியோகம் மற்றும் உண்டியல் வசூல் மூலமாகவும், பரப்புரை நோக்கத்தை மக்களிடையே விளக்குகிறார்கள். முத்துராசு, கழக வெளியீடுகளை விற்பனை செய்து வருகிறார். ஒரு நாளைக்கு மூன்று இடங்களிலும், ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை இந்த பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது. தோழர்கள் தாமரைக் கண்ணன், பாண்டி யன், ஆல்பர்ட் ஆகியோர் முன்னேற் பாடுப் பணிகளை க் கவனிக்கிறார்கள்.

பயணத்தில் முழுமையாக கலந்து கொள்ளும் தோழர்கள்: இராவணன், திருப்பூர், சம்பூகன், இரா. மூர்த்தி, விஜயன், வெள்ளமடை – நாகராசு, மேட்டூர் முத்துக்குமார், முத்துராசு, முத்துரத்தினம், மூர்த்தி, கோவிந்தராசு; கரூர் – ஸ்ரீகாந்த், பழனி – பத்மநாபன், பல்லடம் – வடிவேல் ஆகியோர்.

பெரியார் முழக்கம் 19042012 இதழ்

You may also like...