தமிழக முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் உருக்கமான கடிதம்

தமிழக சிறைகளில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக்கு உரிய தகுதி பெற்ற சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து முஸ்லீம்கள் அமைப்பு முதல்வருக்கு (ஜமா அத்துல் உலக மாசபை) வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதம் விவரம்:

தமிழகத்தில் மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று சிறப்பான முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்களுடன், எங்கள் சமூகத்தின் சார்பாக ஒரு முக்கிய கோரிக்கையை உங்கள் முன் வைத்திட விரும்புகின்றோம்.

முந்தைய தி.மு.க. அரசு சிறைக் கைதிகள் பொது மன்னிப்பு விடுதலையின்போது முஸ்லிம் சிறைக் கைதிகள் விஷயத்தில் குறிப்பாக அரியானா மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் (உய சூடி,30.2005) வழங்கிய உத்தரவு வழிகாட்டுதலை புறந்தள்ளி பாரபட்சமான முறையில் நடந்து கொண்டது. தமிழக அரசு பொது மன்னிப்பு விடுதலையில் தகுதியற்ற வழக்குகள் எவையெல்லாம் என்பதனை அரசாணை எண். 1762/87 இல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில் இவ்வரசாணையில் குறிக்கப்பட்டுள்ள எந்த குற்றப் பிரிவிலும் தண்டிக்கப்படாத பொது மன்னிப்பில் விடுதலைக்கு தகுதி பெற்ற முஸ்லிம் கைதிகள் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளின்போது விதிகளுக்குப் புறம்பாக பாரபட்சமான முறையில் தி.மு.க. அரசால் விடுதலை மறுக்கப்பட்டனர்.

கடந்த காலங்களில் இஸ்லாமிய சமூகத்திலுள்ள சிலரின் தவறான வழிகாட்டுதலால் வழி பிறழ்ந்த இளைஞர்கள் பலர் அதற்கு ஈடாக நீண்ட நெடும் சிறைவாசத்தை தண்டனையாக அனுபவித்து விட்டனர். சிறைக் கைதிகளின் குடும்பங்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர். 1997 மற்றும் 1998 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர்கூட மத ரீதியான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கோ தண்டனையோ சுமத்தப்படவில்லை என்பதும் அவர்கள் அனைவரும் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருவதும் தண்டிக்கப்பட்ட முஸ்லிம் கைதிகளின் அமைதியான மனநிலையை காட்டுகிறது.

இதனை தங்களின் மேலான கவனத்தில் கொண்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டு அரசு வழங்கிடும் விடுதலை ஒன்றே தீர்வு என்ற நிலையில் உள்ள 20 முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளுக்கும் மற்றும் விடுதலைக்கு தகுதியுள்ள அனைத்து முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளுக்கும் கருணை அடிப்படையில் விடுதலை அளித்திட வேண்டுகின்றோம். விடுதலை செய்யப்படக் கூடிய கைதிகளால் இனி வரும் காலங்களில் எவ்வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளையாது என்பதை நாங்கள் பொறுப்பேற்று உறுதியளிக்கின்றோம்.

தற்போது சீர்மிகு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு முந்தைய தி.மு.க. அரசின் பல்வேறு தவறுகளை சீர் செய்து வரும்போது முஸ்லிம் சிறைக் கைதிகளின் விஷயத்தில் தி.மு.க. அரசு மேற்கொண்ட அநீதிக்குப் பகரமாக விடுதலை மறுக்கப்பட்ட மற்றும் அரசாணை எண்.1762/87-ன் கீழ் தகுதியுள்ள அனைத்து முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகளுக்கும் விடுதலை வழங்கி உத்தரவிட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையில் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்பின் சார்பாக பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம் என்று அந்த வேண்டுகோள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் முழக்கம் 06092012 இதழ்

You may also like...