இந்திய தேசியத்தின் முகமூடியைத் கிழித்து புதுவையில் நாள் முழுதும் பரப்புரை

கூடங்குளம் அணுஉலை: மின்சாரம் தயாரிக்கவா? அணுகுண்டு தயாரிக்கவா? அல்லது தமிழர்களைச் சாவு கொடுக்கவா?

முல்லைப் பெரியாறு : மலை யாளிகள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல! தமிழர்களின் முதன்மை எதிரியே இந்திய அரசு தான்!

– எனும் கருத்துக்களை விளக்கிப் பரப்புரைப் பயணம் 22.12.2011 அன்று புதுச்சேரி மாநிலப் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடை பெற்றது.

பரப்புரைப் பயணம் காலை ஒன்பது மணியளவில் புதுவை அண்ணா சிலையருகே துவங்கியது. பரப்புரைப் பயணத்தின்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையம் திறந்தால் ஏற்படும் தீமைகளையும், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயற்சிக்கும் மலையாளி களின் அடாவடித்தனத்தைக் கண்டிக் காத உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வக்கற்ற இந்தியாவைக் கண்டித்து கருத்துரை வழங்கப் பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்கள் ஈருருளியில் வந்து பரப்புரைப் பயணத்தில் கலந்து கொண்டனர். அதில் நான்கு பேர் பெண்கள் ஆவர். பரப்புரைப் பயணத்தின்போது முல்லைப் பெரியாறு உரிமையை மீட்டெடுத்தல் மற்றும் கூடங்குளம் அணு உலையின் ஆபத்தை விளக்கும் துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆபத்தை விளக்கித் தோழர் முத்துக்கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட நூல் குறைந்த விலைக்கு (ரூ.10) விற்கப்பட்டது. புதுச்சேரி வாழ் மக்கள் பரப்புரையினை ஆர்வமுடன் கேட்டதுடன் நூலையும் வாங்கிப் படித்தனர்.

பரப்புரையின்போது கூடங்குளம் அணுஉலையை மூடச் சொல்லியும், நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ் நாட்டிற்கே வழங்கக் கோரியும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தக் கோரியும், இந்தியாவின் தமிழர் விரோதப் போக்கினைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா உடையும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பரப்புரைப் பயணம் புதுவை சாரத்திலுள்ள ஜீவா சதுக்கத்தில் நிறைவுற்றது. நிறைவுரையில் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பலர் உரையாற்றினர். இறுதியாக லோகு அய்யப்பன் உரையாற்றினார்.

குளிரையும் பொருட்படுத்தாமல் பொது மக்கள் உரைகளைக் கேட் டனர். பரப்புரை நிறைவடையும் போது இரவு பத்தே முக்கால் மணி ஆனது.

பரப்புரை நடைபெற்ற இடங்கள்:

காலை – அண்ணாசிலை, சின்ன மணிக்கூண்டு, காந்தி வீதி அமுத சுரபி, நாராயணன் கோவில் சமீபம், அண்ணா சாலையிலுள்ள ஆனந்தா இன் எதிரில், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, முத்தியால்பேட்டை சந்தை.

மாலை – திலாசுப்பேட்டை, கொட்டுப்பாளையம், ராஜீவ் காந்தி சிலை அருகில், சண்முகாபுரம் மீன் சந்தை, மேட்டுப்பாளையம், மூலக்குளம், கம்பன் நகர், சாரம்.

பெரியார் முழக்கம் 19012012 இதழ்

You may also like...