கழக அமைப்பு முறைகளை மாற்றியமைக்க மாநில செயற்குழு முடிவு

7.7.2012 அன்று காலை கழக மாநில செயற்குழுக் கூட்டம், சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

5.7.2012 அன்று காலை சமூக விரோதிகளால் சுடப்பட்டும், வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி (எ) மு. பழனிசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரசும் காவல்துறையும் இதில் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் கழகத்தில் நிலவும் கழகப் பணிகளிலுள்ள சுணக்கம், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தைப் பரப்புதல், தமிழக அரசியல் சூழல், கழகத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இறுதியில், கழகத்தின் அமைப்பு முறையை மாற்றி அமைத்து கழகத்தில் புத்தெழுச்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், கழகத்தின் தலைமை பொறுப்பு முதல் அனைத்து நிலை பொறுப்புகளும் மாற்றியமைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறு அமைப்பு முறைகளில் மாற்றம் செய்யவும், நெறிப்படுத்தும் வகையிலான ஒரு குழுவை ஏற்படுத்துதல் போன்றவற்றை இறுதி செய்யவும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரைசாமி, புதுவை மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன், ஆலோசனைக் குழு உறுப்பினர் தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகியோரைக் கொண்ட குழுவுக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரியார் முழக்கம் 12072012 இதழ்

You may also like...