டெல்லி பல்கலையில் ‘இந்து’ ராம் திணறல்; மாணவர்கள் அதிரடி கேள்விகள்
ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எதிராக நஞ்சை கக்கி எழுதியவரும், ராஜபக்சேயின் தமிழகப் பிரதிநிதியாக செயல்பட்டவருமான ‘இந்து’ ராம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் மாணவர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். கடந்த 14.3.2012 அன்று மாலை ஜவகர்லால் நேரு பல்கலை விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் ‘ஊடகங்களின் ஒழுங்கு’ என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருந்தார். உரை முடிந்தவுடன், மாணவர்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர். “நீங்கள் ஊடக ஒழுங்கைக் காப்பாற்றினீர்களா? ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் பத்திரிகை ஒழுங்கைப் பின்பற்றாமல், ராஜபக்சேயின் முகவராக செயல்பட்டது தான், ஊடக ஒழுங்கா? கண்மூடித்தனமாக சீனாவை விமர்சனமின்றி ஆதரிப்பது சரியா? ‘இலங்கா ரத்னா’ விருதை இலங்கை அரசிடமிருந்து பெற்றது ஏன்? கொலைக் குற்றம் சாட்டப் பட்ட இளைய சங்கராச்சாரி விஜயேந்திரனை ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு வரும்போது எல்லையில் நீங்களே காரில் சென்று அழைத்து வரலாமா? என்ற கேள்விகளை சரமாரியாகத் தொடுத்தனர்.
“போருக்குப் பிறகு தமிழர் பகுதியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளதை நான் பார்த்தேன்; நீங்கள் போய்ப் பாருங் கள்” என்று ‘இந்து’ ராம் கோபத்துடன் கூறினார்.
“ராஜபக்சே உங்களை அனுமதிப்பார்! எங்களை அனுமதிப்பாபரா?” என்று மாணவர்கள் திருப்பிக் கேட்டனர்.
பல கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிய ‘இந்து’ ராம், தொங்கிய முகத்துடன் வெளியேறினார். அவரது வாழ்நாளில் இப்படி ஒரு எதிர்ப்பை சந்தித்திருக்க மாட்டார் என்று மாணவர்கள் கூறினர்.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 22032012 இதழ்