“பேய்” புரளிக்கு ப.குமாரபாளையத்தில் கழகத் தோழர்கள் தந்த பதிலடி
சில தொலைக்காட்சிகள் முன் ஜென்மம் ஒன்று இருப்பதாகவும் பேய்கள் நடமாடுவதாகவும் விஞ்ஞானத்துக்கு எதிரான மூடநம்பிக்கைகளை பரப்பும் முயற்சியில் வெட்கமின்றி மனித விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ‘விஜய்’ தொலைக்காட்சி இதில் இப்போது முன்னிலையில் உள்ளது. நாமக்கல் வட்டத்திலுள்ள ப. குமாரபாளையத்துக்கு விஜய் தொலைக்காட்சிக் குழு வந்து ‘பேய்’களைப் படம் பிடிப்பதாக ஊரில் செய்திகளைப் பரப்பியது. பயந்து போன பொது மக்கள் பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பிக் கொண்டு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை அஞ்சி நடுங்கி வீட்டிலேயே பதுங்கி இருந்தனர். மரத்தில் இருந்த பேயை விஜய் தொலைக்காட்சிக் குழு படம் பிடித்துச் சென்றதாக வதந்தி பரவியது. இதை சவாலாக ஏற்று பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் களத்தில் இறங்கினர்.
‘பேய்’ மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என்று மக்களிடம் எடுத்துக் கூறி விளக்கினர். ஒரு அலைபேசி காமிரா வழியாக அங்குள்ள சில பெண்களை படம்பிடித்து பிறகு அந்தப் பெண்களோடு ‘பேய்’ உருவம் இருப்பதுபோல காட்டினர். பிறகு அந்த பேய் உருவ பொம்மைகள் இணையதளம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டு, அலைபேசி காமிராவில் படம் பிடித்துப் பெண்களோடு இணைக்கப்பட்டதையும் செய்து காட்டி தொலைக்காட்சிகள் இப்படித்தான் ஏமாற்றுகின்றன என்பதை விளக்கினர். உண்மையில் ‘பேய்’ இருப்பதாக எவராவது நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாகவும் அறிவித்தனர். அதற்குப் பிறகுதான் மக்களிடம் அச்சம் நீங்கியது. இது காமிராவைக் கொண்டு, இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களால் நடததப்பட்ட விளையாட்டு என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.
தோழர்கள் கேப்டன் அண்ணாதுரை, மாதுராஜ், தண்டபாணி, மாதேசுவரன், பகலவன், மு. சாமிநாதன், வெங்கிடு (நாம் தமிழர்) ஆகியோர் இந்த பகுத்தறிவுப் பணியை செய்தனர்.
பெரியார் முழக்கம் 16022012 இதழ்