காவல்துறை கெடுபிடிகளை தகர்த்து எழுச்சியுடன் நடந்த வெள்ளோடு கூட்டம்
23.7.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கள்ளுகடை மேடு பகுதியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மனுதர்ம எரிப்புப் போராட்டம் ஏன்? என்பது பற்றிய விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை குடந்தை சிற்பி இராசன் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் பேரவை ப.சிவக்குமார் தலைமை வகித்தார். பெ.சே. மோகன்ராஜ், செல்லப்பன், செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிற்பி இராசன், சாமியார்களின் மோசடிகளையும், கடவுளர்களின் பிறப்புக் கதைகளையும் கூறி, மக்களின் மூளைக்கு வேலை கொடுத்தார். கூட்டத்தில் அமர்ந்திருந்த பக்தர்களிடம் கேள்விகளைக் கேட்டு, கடவுள் நம்பிக்கையை உடைக்கும் விதமான பதில்களை அவர்களிடமிருந்தே பெற்று, அதற்கு விளக்கம் அளித்தார்.
அடுத்தபடியாக மனுதர்ம எரிப்பு ஏன்? என்பது பற்றிய விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு ஒன்றிய அமைப்பாளர் செ.சசிக்குமார் தலைமை வகித்தார். வெள்ளோடு கோபி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சென்னிமலை செல்லப்பன், பகுத்தறிவாளர் பேரவை சிவக்குமார், மாவட்டத் தலைவர் நாத்திகசோதி, தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர்
ப. இரத்தினசாமி ஆகியோர் உரையாற்றினர்.
ப. இரத்தினசாமி தனது உரையில், இந்தக் கூட்டம் நடைபெறுவதைத் தடுக்க, கூட்ட நாளன்று காவல் துறை நடந்த கொண்ட விதத்தையும் விளக்கினார். குறிப்பாக உளவுப் பிரிவு காவலர் ஆறுமுகம் என்பவர் கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பது போன்ற மாயத் தோற்றத்தை இவரே உருவாக்கி, கூட்டம் நடக்கவிருந்த மாரியம்மன் கோவில் திடலுக்கு காலையில் மேடை அமைக்க வந்த தொழிலாளர்களை விரட்டி அடித்தார். பிறகு காவல் துணைக் கண்காணிப்பாளரை வரவழைத்து பொய்யான தகவல்களை மிகைப்படுத்திக் கூறி, பொதுக் கூட்ட இடத்தை மாற்ற முயற்சித்தார்.
தோழர் இரத்தினசாமி, டி.எஸ்.பி. யிடம் பேசும் போது, நாங்கள் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. கடைசி நேரத்தில் இடத்தை மாற்றச் சொன்னால், மாற்ற முடியாது. நாங்கள் தடையை மீறி நடத்துகிறோம். நீங்கள் எங்களை கைது செய்து கொள்ளுங்கள் என்றவுடன், டி.எஸ்.பி. இறங்கி வந்து இந்த இடம் தவிர, நீங்கள் வேறு இடம் காட்டுங்கள் என்றார். ஆனாலும், அந்த உளவுப் பிரிவு காவலர் விடாப்பிடியாக, ஆள் அரவமற்ற, பொது மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தைக் காண்பித்து இங்குதான் எல்லோரும் கூட்டம் நடத்துவார்கள் என்று வாய் கூசாமல் பொய் சொன்னதை டி.எஸ்.பி.யே கண்டித்ததோடு, நமது தோழர்கள் காட்டிய கள்ளுக்கடை மேடு பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி அளித்தார்.
இவ்வாறாக காவல்துறையினரின் கடுமையான அடக்குமுறைகளைத் தாண்டி, பொதுக் கூட்டம் மிகவும் வெற்றிகரமாக, எதிர்பார்த்ததைவிட அதிகமான மக்கள் திரளுடன் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை:
இங்கு தோழர்கள் பேசும்போது இந்தக் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்க மறுத்து அலைக்கழித்த விதத்தை கூறினார்கள். இவர்கள் எல்லாம் இந்த வேலைக்கு வருவதற்குக் காரணமே, தந்தை பெரியாரின் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டமும், அதன் மூலமாக போராடிப் பெற்ற இடஒதுக்கீடு மூலமாகத்தான். இதையெல்லாம் இவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்றால், இவ்வாறு பகுத்தறிவு கருத்துக்களை பரப்ப இடையூறு செய்ய மாட்டார்கள்.
1936 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பு அனைத்து மாகாணங்களிலும் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு இல்லாதபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் இடஒதுக்கீடு இருந்தது. இதற்குக் காரணம் அன்றைய நீதிக்கட்சியும், பெரியாரும் தான். ஆனால், இவ்வாறு போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டை, வெள்ளைக்காரன் கொடுத்த இட ஒதுக்கீட்டை சுதந்திரத்திற்குப் பின் நம் நாட்டை ஆண்ட நம்மவர்கள் பறித்துக் கொண் டார்கள். 2006 ஆம் ஆண்டு வரை இந்த இடஒதுக்கீடு இல்லை. மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடியபோது, அதற்கென அமைக்கப் பட்ட வீரப்ப மொய்லி குழு, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் இந்த ஆண்டு 9 சதவீதம் அடுத்த ஆண்டு 9 சதவீதம் என தவணை முறையில் வழங்கலாம் எனப் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம், வீரப்ப மொய்லி அறிக்கையை எரிக்கும் போராட்டத்தை நடத்தியது. நமது தோழர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்களின் மத்திய அரசு பணிகளுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் கழகத்தின் பங்கு மறுக்க முடியாதது.
இன்றும் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடும் பிற்படுத்தப் பட்டோர், மத்திய அரசுப் பணிகளில் தங்களுக்கான உரிய இடஒதுக்கீடு கேட்டுப் போராட முயலட்டும். மத்திய அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் சதவீதம் 14.5. ஆனால் பிற்படுத்தப்பட்டோரின் சதவீதம் வெறும் 2.5 தான்.
இன்றைக்கு நம் நாட்டிலே இருக்கிற இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அரேபியாவில் இருந்தும்,ஜெருசலேமில் இருந்தும் வந்தவர்கள் அல்ல. அவர்களும் நம்மவர்கள் தான். இந்து மத அடக்கு முறைகள் தாங்க முடியாமல் தான் அவர்கள் பிற மதங்களுக்குச் சென்று விட்டார்கள். அங்கு சமத்துவமாக வாழ்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகத்தினர் பிற மதங்களைத் திட்டுவது இல்லையே என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நாங்கள் எல்லா மதங்களையும் தான் கண்டிக்கிறோம். அங்கெல்லாம் மூட நம்பிக்கைகளும், அந்த மதத் திலேயே உள்ள பிறர் மீதான அடக்குமுறைகளும் குறைவாக உள்ளன. அதனால் குறைவாகக் கண்டிக் கிறோம். ஆனால், இந்து மத அடக்குமுறைகள் அதிகமாக உள்ளதால் அதிகமாக கண்டிக்கிறோம். மக்கள் அனைவரும் சமம், சமத்துவம் என்று சொன்ன இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களும்கூட, இந்தியாவிற்கு வந்த பிறகு, இங்குள்ள இந்து சாதிக் கட்டமைப்பைப் பார்த்து கெட்டுப்போய் சாதிகளாகப் பிரிகின்றன. ஆனால், அவற்றின் அடிப்படைத் தத்துவத்தில் சாதி இல்லை. ஆனால், இந்து மதம் மட்டுமே சாதிகளை ஊக்குவிப்பதோடு அல்லாமல், நான்கு விதமான சாதிகளை நான் தான் படைத்தேன். நான் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது என்று இந்து மதக் கடவுளான கிருஷ்ணனே சொல்வதாக இந்து மதம் சொல்கிறது. எனவே தான் தந்தை பெரியார் சொன்னார் நான் இந்துவாக இல்லை என்று.
இன்று புறப்பட்டுள்ள சிலர் சொல்கிறார்கள், அந்தக் காலத்தில் நம் தமிழ் இனம் அப்படி இருந்தது, இப்படி இருந்தது என்று சங்க காலத்தில் பெண் கவிஞர்கள் பாடல் எழுதினார்கள். அனைத்து சாதி யிலும், கை தேர்ந்த புலவர்கள் இருந்தார்கள். உதாரணமாக பெருந்தச்சன், சாத்தன், வெண்ணிக் குயத்தி, வேட்டுவப்பெண் இளவெயினி என்று இருந்தார்கள். ஆனால், இடையில் கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்த பார்ப்பனர்களால் தான் நம் சமூகத்தில் பிரிவினைகள் தலைதூககி, மக்கள் ஒடுக்கப்பட்டார்கள், அடக்கப்பட்டார்கள். அதனால் தான் பெரியவர்கள் பலரும் சொன் னாhர்கள், பாம்பையும் பார்ப்பானையும் ஒரு சேரக் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று. தந்தை பெரியாரின் போராட்டத்தால் மீண்ட இந்த சூழ்ச்சிக்கார பார்ப்பனர்களை ஏறக்குறைய அரசியலில் இருந்தே விரட்டிவிட்டோம். கல்வியை கைப்பற்றி விட்டோம். ஆனால், சமூக தளங்களில் அடிமைப்பட்டு இருக்கிறோம். இன்றளவும் வட மாநிலங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலவு கிறது. கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்காளத்தில் பார்ப்பன எம்.எல்.ஏ.க்கள் அதிகம் உள்ளனர். இன்றளவும் வட மாநிலங்களில், புரட்சி யாளர்களான பெருந்தலைவர்கள்கூட, தங்கள் பெயருக்குப் பின்னால் சாதி அடைமொழியுடன் இருக்கின்றனர், பானர்ஜி, முகர்ஜி, சட்டர்ஜி என்று. ஆனால், நம் தமிழகத்தில் சாதிக்காக போராடுகிற, சாதிக்கட்சி நடத்துகிற தலைவர்கள்கூட, தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதியை போட முடியாத நிலை உள்ளது. இந்த மாற்றம் பெரியாரால் தான் ஏற்பட்டது.
பெரியார் தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக மட்டும் போராடவில்லை. பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காகவும் தான் போராடினார். கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில்கூட நெசவாளிகளும், தச்சர்களும், ஈழவர்களும் (தென்னை மரம் ஏறுபவர்கள்), சானார் களும் (பனை மரம் ஏறுபவர்கள்) நடக்கக்கூடாத நிலை இருந்தது. இதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய பெரியார் 1924 இல் இரு முறை கைது செய்யப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலய நுழைவு போராட்டத்தில் தாழ்த்தப் பட்டவர்களுடன் நாடார்களும் நுழைந்தனர்.
பெரியார் நடத்திய கடைசிப் போராட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற போராட்டம். இதை ஏற்றுக் கொண்ட அன்றைய தமிழக முதல்வர் கலைஞர், தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் (ஹண்டே என்ற பார்ப்பனர் உட்பட) தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், ஐந்து பார்ப்பனர்கள் பெற்ற தடை ஆணை காரணமாக இன்றளவும் நிறைவேறாமல் உள்ளது.
நம்மவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், நாமெல்லாம் உயர் சாதி என்று. ஆனால், பார்ப்பனர்களை பொறுத்தவரை அவர்களைத் தவிர எல்லோருமே சூத்திரர்கள் தான். சுப்ரீம் கோர்ட் கூட சொல்லியிருக்கிறது, விந்திய மலைக்கு தெற்கே பார்ப்பனர்கள், சூத்திரர்கள் என்ற இரண்டே சாதிகள் தான் என்று இந்து லா என்று சொல்லப்படுகிற இந்துச் சட்டம் சொல்கிறது. பார்ப்பனர்கள் என்றால் இரு பிறப்புடையவர்கள் என்று (பிறக்கும் போது ஒன்று, பூணூல் போடும்போது ஒன்று) சூத்திரர்கள் என்றால் தாசி புத்ராஸ் (வேசி மக்கள் என்று) இவ்வாறு இந்து சட்டத்திலேயே எழுதி வைத்துள்ளார்கள்.
நீங்கள் மகாத்மா, தேசப்பிதா என்று சொல்லும் காந்திக்கே பார்ப்பனர்களால் என்ன நிலை ஏற்பட்டது என்று ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலில் காந்தியே கூறுவதாக கூறப்பட்டுள்ளது. 1924 இல் காந்தி தமிழகம் வந்தபோது சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில் தங்க வைக்கப்பட்டார். அவரே திரும்பவும் 1926 இல் மீண்டும் தமிழகம் வந்தபோது சீனிவாச அய்யங்கார் வீட்டு சமையல் அறை வரை செல்ல காந்தியின் மனைவி அனுமதிக்கப்பட்டார். இந்த மாற்றத்திற்குக் காரணம் 1925 இல் சுயமரியாதை இயக்கம் தோன்றி, போராடியதின் விளைவுதான்.
இன்றைய அரசியல்வாதிகள் பதவிக்காக கட்சியை விட்டு விலகும் சூழலில், தான் வகித்து வந்த 27 பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார்.
இன்றைய அரசியல்வாதிகள் கட்சிக்காக பிரச்சினை ஏற்படும்போது கட்சியை விட்டே ஓடிவிடும் சூழலில் 1919 இல் ஜாலியன் வாலாபாக்கில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பேசுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற படுகொலையால் உள்ளம் நொந்து கட்சிக்குப் பிரச்சனை ஏற்பட்ட காலத்தில் கட்சியில் வந்து இணைந்தவர் பெரியார். இத்தகைய பெரியார்தான், இடஒதுக்கீட்டிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுவது கண்டும், அங்கிருந்த பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும் காங்கிரசில் இருந்து விலகினார்.
இவ்வாறாக பார்ப்பனர்களின் சூழ்ச்சியால், அவர்கள் விடாமல் இறுக்கிப் பிடித்திருக்கின்ற மனுதர்மத்தை எரிக்கும் போராட்டம், கழகம் சார்பாக நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறாக தலைவர் கொளத்தூர் மணி பேசினார்.
இறுதியாக வெள்ளோடு மூர்த்தி நன்றி கூறினார். வழக்கமாக பொதுக் கூட்டத்தில் நன்றி உரை என்றவுடன் எழுந்து சென்றுவிடும் பொது மக்கள், இந்தக் கூட்டத்தில் நன்றி உரைக்குப் பின்னரும் கலைந்து செல்லாமல் அமர்ந்திருந்தது அனைவருக்கும் வியப்பை அளித்தது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அன்பு நாட்டுக் கோழி வளர்ப்பு மைய நிறுவனர்களான சசிக்குமார், பெ.சே. மோகம்ராஜ், சண்முக சுந்தரம் ஆகியோர் மிக சிறப்பாக செய்திருந்தனர். கூட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே வெள்ளோடு சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் சென்று, பொதுக் கூட்டத் தைப் பற்றி பொது மக்களிடம் விளக்கி, தொடர் பிரச்சாரத்தில் பகுத்தறிவாளர் பேரவை ப. சிவக்குமார், சசிக்குமார், குமார், செல்வராசு, செல்லப்பன், வெங்கட், இசைகதிர், அஜித் குமார், அழகன், லோகு ஆகியோர் ஈடுபட்டனர்.
செய்தி: ப. சிவக்குமார்
பெரியார் முழக்கம் 02082012 இதழ்