‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் (2)

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படையிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனுசாஸ்திரம் எரிக்கப்பட வேண்டும் என்றும் மறைந்த பெரியாரிய லாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.  சென்ற இதழ் தொடர்ச்சி.

கிராமம் ஊழியம் செய்யும் வகுப்பார்கள் யாரும் ஊரை விட்டு போகக் கூடாது. போனால் அவர்கள் மீது நடவடிக்கை உண்டு. சாதி ஆச்சாரங்களை வரையறுத்து இன்ன வகுப்பார் இன்னின்ன சடங்குகள், உடைகள், உரிமைகள் ஆகியவைகளைத் தான் கைக்கொள்ள வேண்டும் என (களப் பிரர் ஆட்சியில்) அரசாணை பிறப்பித்தனர். அந்த ஆணையும் சாத்திர வல்லுனரான பார்ப்பனர்களின் அபிப்பிராயப்படியே வழங்கப்பட்டது. உதாரணமாக அய்ந்து வகைப்பட்ட கம்மாளர்களை அவர்கள் பிரதிலே மாகளைக் காட்டிலும் உயர்ந்தவர் களான அனுலோமரைச் சேர்ந்தவர்கள் என்றும், எனவே அவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாம் என்றும் ஆனால் உபநயன மந்திரம் ஓதும் உரிமை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியதாகப் பல கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

ஒரு கல்வெட்டு ஒரு வகுப்பாரின் உரிமை களை அறிவிக்கின்றது. அவர்கள், “நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதி பேரிகை கொட்டிக் கொள்ளலாம்; பாத ரட்சை போட்டுக் கொள்ளலாம்; வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசிக் கொள்ளலாம்.”

அதேபோல இன்னொரு கல்வெட்டு இடையர்களின் உரிமைகளை வரையறுக் கிறது; அவர்கள் நன்மைகளுக்கு சிவிகை (பல்லக்கு) ஏறலாம்; தீமைக்கு மேல்வளை வுள்ள பாடை கட்டி அதன் மேல் பச்சைப் பட்டு, புலியூர் பட்டு என்பவற்றைக் கட்டிக் கொள்ளலாம்; பேரிகை கொட்டலாம்; இவற்றை செம்பில் அவர்கள் வெட்டிக் கொள்ளலாம். எந்தெந்த வகுப்பார் கோவில் முறைகளை எவ்வெப்படிச் செய்ய வேண்டு மென்பதற்கும் எங்கெங்கு நின்று கும்பிட லாம் என்பதற்கும் வரையறை உண்டு. இதைப் பின்பற்றி இன்று வரை பல தீர்ப்புகள் வழக்கு மன்றங்களிலே அளிக்கப்பட்டு வருகின்றன.

1914 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்பட்ட தீர்ப்பு ஒன்றில் 1912 (எஸ்.ஏ.1554-1912) திருநெல்வேலி மாவட்டம் பனக்குடியில் உள்ள ஸ்ரீ இராமலிங்கசாமி கோவிலில் இலைவாணியர் சாதியாரும், பார்ப் பனர்கள், வெள்ளாளர்கள், முதலியார்கள் முதலியோர்கள் கோவிலின் எந்தெந்த இடம் வரை  செல்லலாம் என்ன கிரமத்தில் வணங்க லாம் என்பன பற்றி சாஸ்திர ஆதாரங்களைக் காட்டி தீர்ப்பு வழங்கி உள்ளது. சாதி ஒழுக்கமும், நீதி, அறமும், பிறழாது நீதி தருகுல நான்கும் (நான்கு வர்ணம்) நிலை நிற்ப பலநூறு ஆண்டுகள் பலாத்காரத்தின் துணை கொண்டு நிலைநாட்டிவிட்ட மனுதர்ம வாழ்நெறியே இன்றைய சமூகத்தின் வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளது.

அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கன்பூசியசின் சிந்தனைகள் சீனச் சமூகத்தில் இரண்டறக் கலந்து, சீன மக்களின் சமநெறிச் சமூக அமைப்பு முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கிறது என்று கண்டவுடன், அந்த நாட்டு அரசும் தலைவர்களும் நாடு முழுதும் கன்பூசியஸ் சிந்தனைகளை எதிர்த்து, அதை ஒழிக்கும் பிரச்சாரங்களையும் செயல்களையும் மேற்கொண்டார்கள். இங்கே நம் சமூகத்தைச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கிச் செல்லரிக்க வைத்தது ஒரு சிறு புல்லருவிக் கூட்டம்!

இன்றுவரை நம் சமூகம் முழுமையின் மீதும் இந்தப் புல்லுருவிக் கூட்டம் ஆதிக்கம் செலுத்தக் காரணமாய் இந்த தரும சாத்திரங் களின் தலையாகத் திகழ்வது மனுதரும சாத்திரம்!  சீனத்திலே புரட்சியாளர்கள் கன்பூசியஸ் சிந்தனைகளை எதிர்த்ததுபோல் இங்கே இதனை எதிர்த்துத் தீயிட்டுப் பொசுக் கும் பெரும் பணியில் கழகம் ஈடுபட்டுள்ளது!

(நிறைவு)

(நூல் வெளியீடு: மகரந்தம், 19 மேற்கு மடவளாகம், கரூர். ஆண்டு 1985)

பெரியார் முழக்கம் 02082012 இதழ்

You may also like...