தலையங்கம் பெரியார் கூறுகிறார் நமது முக்கிய கொள்கை

“சாதி ஒழிய வேண்டும் என்பதும் – நாடு பிரிய வேண்டும் என்பதும்தான் நம் கழகத்தின் முக்கிய கொள்கை. மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதும் – வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதும், மற்றவைகளும், இதன் உட்பிரிவுதான்.”

– ‘விடுதலை’ 21.8.1957

“திராவிடர் இயக்கத்துக்கு முக்கியக் கொள்கை இந்நாட்டில் பறையன் என்றும், பார்ப்பான் என்றும், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக் காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றிருப்பதையும் அறவே ஒழித்து, எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கைகளை நடைமுறையில் செய்வதே ஆகும்.”

– ‘விடுதலை’ 8.7.1947

கட்சி – இயக்கம்

“கட்சி எனப்படுவது குறிப்பிட்ட, அதாவது சில உத்தியோகங்களை அல்லது பட்டங் களை மக்களுக்கு வாங்கித் தருவது; ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சிப்பது. ஆனால், இயக்கம் என்பது அவ்வாறல்ல; மக்களின் நிரந்தர உரிமைக்கும் வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது. இன்னுங் கூற வேண்டு மானால் இயக்கம் என்பது மக்களின் விருப்பு வெறுப்பை பொருட்படுத்தாது, நாட்டின் முற்போக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைப்பதாகும்.”

– ‘விடுதலை 27.5.1947

“சிறு கூட்டமாயிருந்தாலும் உண்மையும் உழைப்பும் இருக்குமேயானால், பெருங் கூட்டத்தையும் மிகுதியான செல்வாக்கையும் கொண்ட அரசியல் கட்சியைக் காட்டிலும் மேலான நிரந்தரமான நன்மைகளைச் செய்ய முடியும்.”

– ‘விடுதலை’ 24.3.1950

செயில் முத்திரை

செயில் முத்திரை பெறுவதல்ல திராவிடர் கழகத்தின் திட்டம். உழைப்பு முத்திரை பெறுவதே நாம் விரும்புவது. தனிப்பட்டவர் களின் செல்வாக்குக்குப் பயன்படுவது சிறை முத்திரை; உழைப்பு முத்திரை தனிப்பட்டவர்களுக்குத் துன்பத்தையும் தொல்லையும் தந்தாலும் மக்களுக்குப் பயன் தரவல்லது.”

– ‘விடுதலை’ 10.4.1950

மேல்பூச்சுகள் பயன்படாது

“மக்களுக்கு ஏற்படக் கூடிய புண்ணை இரண்டு முறையில் வைத்தியம் செய்வார்கள். ஒன்று புண்ணுக்கு மேல் மருந்து போட்டு ஆற்றுவது; மற்றொன்று கத்தி கொண்டு அறுத்து சிகிச்சை செய்வது. நம் சமுதாயத்துக்கு இருக்கக் கூடிய புண்ணோ மிக மிகக் கொடுமையானது. அழுகிப் போனது. மேல் பூச்சுகள் மூலம் அதனைக் குணப்படுத்த முடியாது. எனவே கத்தி வைத்து ஆற்றும் பணியில் நாங்கள் ஈடுபடுகிறோம்.”

– ‘விடுதலை’ 4.3.1960

“உலகிலேயே அனேகக் காரியங்களுக்குப் பாடுபட ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். ஏராளமான தாவனங்கள் இருக்கின்றன. ஆனால், சமுதாய இழிவு ஒழிக்க, மேம்பாடு அடையச் செய்ய, பாடுபட எங்களைத் தவிர எவருமே முன்வரவில்லை”.

– ‘விடுதலை’ 2.3.1972

பெரியார் முழக்கம் 02082012 இதழ்

You may also like...