செயற்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தும், கழகப் பெயரை நாமே பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் பெரியார் இயக்கத்தின் மாண்பு காக்க – நாமே பிரிந்து செல்கிறோம்!
ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்பாடற்று முடங்குவதைவிட பிரிந்து போய் செயல்படுவதே சாலச் சிறந்தது
புதிய பெயர் சூட்டி இயக்கப் பணிகளை முன்னெடுக்க…
ஆக.12 இல் ஈரோட்டில் கூடுவோம், வாரீர்!
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை.
அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்.
நமது கழகத்துக்குள் தோழர் இராமக்கிருட்டிணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பற்றி 07.07.2012 அன்று சென்னையில் நடந்து முடிந்த தலைமைச் செயற்குழுவில் விரிவாகவே விவாதித்தோம். பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் நாம் சந்திக்க வேண்டியிருந்த முட்டுக்கட்டைகள் – எதிர்ப்புகள் குறித்து விளக்கினோம். ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்படாமல் முடங்குவதைவிட, பிரிந்து நின்று செயல்படுவதே சாலச் சிறந்தது என்பதையும் கூறினோம். இதைத் தொடர்ந்து செயற்குழுவில் கருத்தைத் தெரிவித்த உறுப்பினர்களில் பெரும் பான்மையோர் (82க்கு 56 பேர்) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறிய நிலையிலும்கூட, நாம் ஒற்றுமை வாய்ப்புக்கான கதவுகளை மூடிவிட விரும்பாமல் மீண்டும் திறந்த மனதுடனேயே ஒற்றுமைக்கான முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனாலும், இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும்போதே
தோழர் இராமக்கிருட்டிணனும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டுவதிலும், ஒன்றுபடுதல் நிகழ்ந்து விடவே கூடாது என்று தடுத்து நிறுத்துமளவுக்கு தனி நபர்களை இழிவுபடுத்தும் அறிக்கைகளைத் தோழர்களிடம் பரப்புவதிலும் ஈடுபட்டனர்.
இணைந்து செயல்பட முடியாமல் பிரிந்து போகும் நிலையிலும், ஏனைய கட்சிகளில் – அமைப்புகளில் நடப்பதைப்போல – “இவர் அவரை நீக்கினார், அவர் இவரை நீக்கினார்” என்பது போன்ற இழிநிலைகள் பெரியார் இயக்கத்தில் நாம் வழி நடத்திய காலத்தில் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற உண்மையான கவலையோடு அவற்றை எல்லாம் தகர்த்துவிடவே விரும்பினோம்.
எனவே, பெரும்பான்மை ஆதரவு நமக்கு இருந்தும், கழகத்தின் பெயரை நாம் தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்பு இருந்தும், நாகரிகமாகப் பிரிந்து விடலாம் என்ற கருதியதால் – பெரியார் திராவிடர் கழகத்தின் பெயரை, எவர் ஒருவரும் பயன்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தலைமை நிர்வாகக் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களான நாம் முன் வைத்துள்ளோம். பெரியார் இயக்கத்தின் மதிப்பு – மாண்பைக் காக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களும் இதனை ஏற்றுச் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்; செயல்பட வேண்டும்.
அதே வேளையில், நாமும் அமைப்புக்கு புதிய பெயர் வைத்துக் கொண்டு, கொள்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தலாம் என்று கருதினோம். தோழர்களிடம் இதைக் கூறினோம். நமது தோழர்களும் இத்தகைய பண்பான அணுகுமுறை தான் நமக்குச் சரியானது என்று ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இது குறித்து நாம் இறுதி முடிவெடுக்கவும், மேலும் நமது தோழர்களுடன் கலந்து பேசவும் எதிர்வரும் 12.08.2012 ஞாயிறன்று ஈரோட்டில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஏற்பாட்டை ஏற்கக்கூடிய நமது தோழர்கள் அனைவரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களைக் கூற உரிமையுடன் அழைக்கிறோம்.
பெரியார் வலியுறுத்திய ஜாதி ஒழிப்புக் கொள்கையை, பார்ப்பன – ஜாதி ஆதிக்க சக்திகள் சவால்விட்டு எதிர்க்கின்றன. பெரியார் கொள்கைகளுக்கு எதிரிகள் – திரிபுவாதிகள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான சூழலில் நாம் பெரியார் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட்டுவிட்டு கோஷ்டி பூசல்களில் – தனி மனித விமர்சனங்களில் ஆட்படுவது பெரியார் கொள்கைக்கு இழைக்கும் துரோகம் ஆகி விடும். அது நிகழக் கூடாது என்பதே நமது கவலை.
தன்னை முன்னிலைப்படுத்தாது – சுய விளம்பரங்களைப் புறந்தள்ளி – கொள்கையை மட்டுமே முன்னிறுத்தி – தன்னல மறுப்புடன் கொள்கைப் பணியாற்ற முன் வந்துள்ள நம்மால் பெரியாரியருக்கு மேலும் வலு சேர்க்க முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
ஈரோடு வாருங்கள்! சந்திப்போம்! திட்டமிடுவோம்! செயல்படுவோம்!
பெரியார் முழக்கம் 02082012 இதழ்