டெசோ மாநாடு – கொளத்தூர் மணி அறிக்கை

தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டுக் குழுவினருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோளாக விடுத்துள்ள அறிக்கை:

டெசோ நடத்தும் மாநாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மத்தியில் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாக உள்ள தி.மு.க. முன் முயற்சி எடுத்து நடத்தும் இந்த மாநாடு குறித்து – ஈழத்தில் வாழும் தமிழர்களும் – புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் கவலையுடனும், எதிர்பார்ப்புடனும் இந்த மாநாட்டு முடிவு களுக்குக் காத்திருக்கிறார்கள். தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு நடத்தும் மாநாட்டில்தமிழ் ஈழம் குறித்து தீர்மானங்கள் எதுவும் வராது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட கருத்து – தமிழர்களுக்கு முதல் அதிர்ச்சியாகிவிட்டது. தமிழ் ஈழம் குறித்த தீர்மானம் வரவில்லை என்றாலும், குறைந்தது கீழ்க்கண்ட முடிவுகளையாவது வலியுறுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

  1. ஈழத் தமிழர்கள் – ஒரு தனித் தேசிய இனம்
  2. அவர்களுக்குத் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை கோர உரிமை உண்டு.
  3. 2009 இறுதிப் போரில் ஈழத்தில் நடந்தது இனப் படுகொலையே.
  4. எனவே இனப் படுகொலைகள் நடந்த நாட்டில் அய்.நா.வே முன் முயற்சி எடுத்து வாக்கெடுப்பு நடத்தியதைப் போல் ஈழத் தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு நடத்தும் மாநாட்டில் தமிழீழம் பற்றிய தீர்மானம் இல்லை என்றாலும், வெறுமனே ஒரு பெரிய மாநாடு கூடிக் கலைவதாக அமைந்து விடாமல் ஈழத் தமிழர்களுக்கு ஏதேனும் பயன் சேர்க்க வேண்டுமானால் இந்தக் கோரிக்கைகளையாவது தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பெரியார் முழக்கம் 09082012 இதழ்

You may also like...