ராஜபக்சே நடத்தும் ‘ரவுடி அரசு’: அய்.நா. அதிகாரி கூறுகிறார்
“ராஜபக்சே தனது அரசை ரவுடிகளின் நிறுவனமாக மாற்றியமைத்துள்ளார். (Rogue Institution) அப்படி மாற்றிக் கொண்ட சித்திரவதை, ஆள் கடத்தல் படுகொலைகளை அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி, பெரிய அளவில் செய்து வருகிறார்” – இப்படி அய்.நா.வின் சித்திரவதைகளுக்கு எதிரான அய்.நா.வின் சிறப்புப் பிரதிநிதியே குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் வி.சுரேஷ் மற்றும்
டி.கே. நாகசாய்யா, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளனர். (மார்ச் 16, 2012)
எந்த ஒரு குறிப்பிட்ட அரசுக்கும் எதிராக கண்டன தீர்மானம் வருவதை இந்தியா ஆதரிக்காது என்று இந்திய அரசு எடுத்துள்ள நிலையை அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். மனித உரிமை மீறல் என்பதற்கான விளக்கம் என்ன? ஏதேனும் ஒருவர் அக்குற்றத்தை செய்கிறார்; அவர் இராணுவத்தினராக இருக்கலாம்; போலீசாக இருக்கலாம். மனித உரிமை மீறலுக்கு உள்ளாகிறவர், பொது மக்கள்; ஆயுதமற்ற நிராயுதபாணிகள். இவை எல்லாமே எப்படி நிகழ்கின்றன? சூன்யத்திலா? ஏதேனும் ஒரு நாட்டில் தானே? போர்க் குற்றங்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், அதில் தொடர்புடைய குறிப்பிட்ட நாட்டைக் கண்டிக்காமல் அது எப்படி சாத்தியமாகும்? – என்ற கேள்வியை கட்டுரையில் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
மன்மோகன்சிங் ஆட்சி, இப்பிரச்சினையில் பொய் பேசுகிறது; சந்தர்ப்பவாத நிலை எடுத்துள்ளது என்பதற்கு – இலங்கை அரசு தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ஆணையத்திலேயே (எல்.எல்.ஆர்.சி.) பதில் இருக்கிறது. சட்ட விரோத கொலை, காணாமல் போதல், பாலியல் வன்முறைகளை – அந்த ஆணையத்தின் அறிக்கையே ஒப்புக் கொண்டிருப்பதை, கட்டுரையில் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அய்.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் நியமித்த மூவர் குழுவின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது:
“இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தவிர்த்து விடக் கூடாது; அப்படி செய்தால், உண்மையான குற்றங்களைத் தண்டிக்காமல் தவறவிட்டதாகிவிடும். அதன் விளைவு நியாயமான அமைதிக்கு ஊறுவிளைவித்து விடும். இலங்கை அரசு இப்போதும் தமிழர்களை அன்னியர்களாகப் பார்க்கும் கொள்கை, போர்க்கால நடவடிக்கைகளைத் தொடருதல், ஊடகங்களை கட்டுப்படுத்துதல் போன்றவற்றைக் கைவிடவேண்டும்” என்று அமெரிக்கா குறிப்பிட்டிருப்பதை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
அய்.நா. குழு தீர்மானத்தின் வழியாக தாம் அம்பலமாகிவிடுவோமோ என்று, இலங்கை அரசு எதிர்ப்பது, எதிர்பார்க்க வேண்டியதுதான். ஆனால், அணி சேரா நாடுகளுக்கு தலைமையேற்ற இந்தியாவும், இப்படி ஒரு நிலையை எடுப்பது நியாயமா என்று கேள்வி எழுப்புகிறது, அக்கட்டுரை.
பெரியார் முழக்கம் 22032012 இதழ்