துணைவர்களை பறிகொடுத்த நிலையிலும் கொள்கைக்காகப் போராடும் தோழியர்கள்
மேட்டூர் விழாவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக துணையை இழந்த நிலையிலும் தனித்து நின்று ஜாதி ஒழிப்புக்காக தீரத்துடன் குரல் கொடுக்கும் நான்கு பெண்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. உடுமலை கவுசல்யா, ஈரோடு சுகுணா, பவானி சாகர் கோமதி, இராசிபுரம் மலர் ஆகிய நான்கு தோழியர்களும் நிகழ்வில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர்.
உடுமலை கவுசல்யா: ஜாதி எதிர்ப்புக் குறியீடாக தமிழகத்தில் பேசப்படும் பெயர் உடுமலை கவுசல்யா. தலித் இளைஞரை திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக பட்டப்பகலில் கண்ணெதிரே ஜாதி வெறியர்கள் படுகொலைக்கு துணைவரை பறி கொடுத்தவர். பெற்றோர்களின் ஜாதி வெறிக்கு எதிராக துணைவரை இழந்த நிலையிலும் துணைவர் இல்லத்திலேயே வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டி வருபவர்.
ஈரோடு சுகுணா : ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சார்ந்த தோழர் இராஜாகண்ணு என்பவரை காதல் மணம் புரிந்த சுகுணா, மேட்டூர் கழகத் தோழர்களால் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் கழகத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். மேட்டூரில் வசித்து வந்த இந்த இணையர்களுக்கு மேட்டூர் கழகத் தோழர்கள் உதவி செய்து வந்தனர். அதில் ஒன்று, இராஜாகண்ணுக்கு காவல்துறையில் பணியமர்த்தியது. இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக இராஜாகண்ணு உயிர் இழக்க நேரிட்டது. அதோடு, தன் குடும்பத்தோடு முடங்கிவிடாமல் தொடர்ந்து கழகம் நடத்திய பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர் சுகுணா.
இராசிபுரம் மலர்: மதுரையைச் சேர்ந்த மலர், 5 ஆண்டுகளுக்கு முன்பு தன் காதல் திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டதன்காரணமாக தற்கொலை முயற்சியில் (தீக்குளிப்பு) ஈடுபட்டு தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். அதன் பிறகு தான் காதலித்த நபரையே மணந்து ஓராண்டு காலம் குடும்பம் நடத்தினார். ஒரு ஆண் குழந்தையும் பெற்றெடுத்தார். அதன் பிறகு, தீக்காயங்களுடன் இருந்த அவருடைய தோற்றத்தைக் கண்ட காதலன் இவரை வெறுக்கத் தொடங்கினார். மலரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனமுடைந்த மலர், வேறு எங்கு செல்வது என்று தெரியாமல், தன் சகோதரியின் இல்லத்தில் மூன்றரை ஆண்டுகளாக இருந்து வருகிறார். வீட்டை விட்டு வெளியே வராமல், சமூக வலைதளங்களில் பெண் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். இதனை அறிந்த கழகத் தோழர்கள் குமரேசன், இரண்யா ஆகியோர், மலரை இராசிபுரத்தில் அவரது சகோதரியின் இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசி மேட்டூர் விழா நிகழ்வில் முதல் முறையாக பங்கேற்க அழைத்தனர். கழகத் தோழர்களின் அணுகுமுறை, கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தோழர் மலர், கழகத்தில் இணைந்து செயல்பட முன் வந்துள்ளார்.
பவானிசாகர் கோமதி : சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு தன் குடும்பத்தை எதிர்த்து காதல் மணம் செய்து கொண்ட கோமதி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன் இணையரை இழந்தார். பள்ளி பருவத்தில் பெரியாரிய சிந்தனையை வளர்த்துக் கொண்ட கோமதி, மனதளவில் மட்டுமே பெரியாரியல் சிந்தனையுடன் இருந்தார். வெளிப்படையாக செயல்படாத நிலையில் தன் வாழ்வை நகர்த்தினார். குடிகார கணவரின் கொடுமைகளுக்கு ஆட்பட்ட இவர், தன் கணவரின் மறைவிற்குப் பிறகு கடந்த ஆண்டு கழகத்தின் சார்பாக நடைபெற்ற அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக் குழு, பள்ளிப்பாளையம் வந்தபோது நிகழ்வில் தாமாகவே ஆர்வத்துடன் பங்கேற்றார். தொடர்ந்து மகளிர் சந்திப்பு, பல்வேறு பொது நிகழ்வுகள், கழக நிகழ்வுகள் என பங்கேற்று வருகிறார். தனது மகன் பிரபாகரனையும் அமைப்பில் இணைத்து களப்பணியாற்ற வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் விழாவில் இந்த வீரப் பெண்களுக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விருதுகளை வழங்கினர்.
பெரியார் முழக்கம் 16022017 இதழ்