கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்
காதலர் நாளை முன்னிட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களுக்கும், ஜாதி மறுப்புத் திருமணப் போராட்டக் களத்தில் பங்கு பெற்ற தோழர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா மேட்டூரில் எழுச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. மேட்டூர் அணை பாப்பம்மாள் திருமண மண்டபத் தில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி 12.2.2017 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை கலை நிகழ்வுகளுடன் நடந்தது.
கலை கருத்தரங்கில் ஜாதி மறுப்பு – மத மறுப்பு இணையர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை ஜாதி மறுப்பு மணம் புரிந்தோர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்கள் பற்றி விவாதித்தனர். மதிய உணவைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடந்தன.
பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு திரையிசைப் பாடல்களை டி.கே.ஆர். இசைக் குழுவினர் நிகழ்த்தினர். ஜாதி மறுப்பு திருமணம் செய்த பெண்களே பாடல்களைப் பாடியதும், நடனமாடி யதும் நிகழ்வுக்கு பெருமை சேர்த்தது. இளைஞர் களின் பறை இசையும் நடனமும் அரங்கை குலுக்கின. மாலை 4 மணியளவில் விருதுகள், பாராட்டு வழங்கும் விழா தொடங்கியது. மேட்டூர் ஆர்.எஸ். கழகத் தோழர் அ.அனிதா வரவேற்புரையாற்ற, காவலாண்டியூர் கழகத் தோழர் கி.மணிமேகலை தலைமை தாங்கினார். ஜாதி ஆணவப் படுகொலைக்கு தனது கண் முன்னால் கணவர் சங்கரைப் பறிகொடுத்த உடுமலை கவுசல்யா, விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜாதி ஆணவப் படுகொலையையும், ஜாதி அமைப்பையும் எதிர்த்து தொடர்ந்து அழுத்தமாக குரல் கொடுத்து வரும் வீரப்பெண்ணாக கவுசல்யா உயர்ந்து நிற்கிறார்.
நிகழ்வில் பங்கேற்று அவர் பேசுகையில், “ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுவே இப்போது முக்கியத் தேவை. திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி மறுப்பு இணையர்களுக்காக குரல் கொடுத்து வருவது, நம்பிக்கை, மகிழ்ச்சியைத் தருகிறது” என்று குறிப்பிட்டார். தோழர்களுடன் சேர்ந்து கவுசல்யா நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விருதுகளை வழங்கி உரையாற்றினார். ஜாதி மறுப்பு இணையர் களாக வாழ்க்கைத் தொடங்குவோர் அதை வெற்றிகரமான வாழ்க்கையாக வாழ்ந்து காட்டும் போதுதான் ஜாதி மறுப்புக் கொள்கைகள் வெற்றி பெறும். ஜாதி மறுப்பு இணையர் வாழ்வில் பெண்ணுரிமை பிரிக்க முடியாமல் இணைந்து நிற்பதை சுட்டிக்காட்டியதோடு வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பெரியாரியம் ஒளி விளக்காகத் திகழ்வதை குறிப்பிட்டு உரை யாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, இதேபோல் ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா, ஈரோட்டில் நடந்த திட்டமிட்டு வருவதைக் குறிப்பிட்டார்.
ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் கிராமம் மேட்டூர் அருகே உள்ள காவலாண்டியூர். ஜாதி மறுப்பு இணையர்களை பல மாதங்கள், பல வாரங்கள் தங்க வைத்து உணவு வழங்கி, பாதுகாப்பு வழங்கி வரும் காவலாண்டியூரில் கழகத் தோழர்கள் இதுவரை 200க்கும் மேற்பட்ட ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்துள்ளனர். ஜாதி மறுப்பு இணையர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்ததோடு ஜாதி வெறியர்களின் வன்முறைத் தாக்குல்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய அரும்பணியாற்றும் காவலாண்டியூர் கழக சார்பில் காவலாண்டியூர் கழகப் பொறுப்பாளர் ஈசுவரன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். மேட்டூரில் ஜாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று நடத்துவதிலும், திருமணப் பதிவுக்கான ஆவணங்களைத் திரட்டி உதவுவதிலும் தொடர்ந்து களப்பணியாற்றி வரும் மேட்டூர் கழகத் தோழர் அண்ணாத்துரைக்கு பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. கரூர் பகுதியில் ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வரும் த.பெ.தி.க. தோழர் தனபால் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
திராவிடர் விடுதலைக் கழக சார்பில் இந்த நிகழ்வை தோழர்கள் குமரேசன், இரண்யா, பரத் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர். தோழர் ப. இனியா நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 16022017 இதழ்